முதல் வாசக மறையுரை (மார்ச் 02)

தவக்காலம் முதல் வாரம்
திங்கட்கிழமை
லேவியர் 19: 1-2, 11-18
கடவுளைப் போன்று நாம் தூயோராக இருக்கின்றோமா?
நிகழ்வு
அருள்பணியாளர் ரெய்மொந்து எழுதிய ஒரு முக்கியமான நூல், ‘Three Religious Rebels’ இதில் இவர் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்வு.
செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு ஏராளமான சொத்துப் பத்தும் நிலபுலன்களும் இருந்தன. இப்படிப்பட்டவருக்கு ராபர்ட் என்ற ஒரே ஒரு மகன் இருந்தான். அவனை இவர் தனக்குப் பின் தன் சொத்துகளுக்கு அதிபதியாக நினைத்தார். அதனால் இவர் அவனைச் செல்வச் செழிப்பில் வளர்த்து வந்தார்; ஆனால், ராபர்ட்டிற்கோ செல்வத்தின் மீதும் உலக இன்பத்தின்மூலம் சிறிதளவுகூட நாட்டம் இல்லை. மாறாக, அவன் ஒரு துறவியாக மாறவேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்தான். இது ராபர்டின் தந்தைக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. அதனால் அவர் இவனுடைய மனத்தை மாற்றுவதற்கு எப்படியெல்லாமோ முயற்சி செய்து பார்த்தார். எல்லாம் தோல்வியில்தான் போய் முடிந்தது. கடைசியில் ராபர்ட் ஒரு துறவியானான்.
ஆண்டுகள் வேகமாக உருண்டோடின. ராபர்டின் தந்தை வயதாகிப் படுக்கையில் விழுந்தார். ஆதலால், ராபர்ட் அவரைப் பார்ப்பதற்கு வீட்டிற்கு வரவழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தையின் அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்த ராபர்ட், தந்தையின் அருகில் சென்று அமைதியாக நின்றான். அப்பொழுது அவனுடைய தந்தை அவனிடம் மிகவும் அமைந்த குரலில் பேசத் தொடங்கினார்: “என் அன்பு மகனே ராபர்ட்! உன்னிடத்தில் ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும். சிறுவயதில் நீ உலக செல்வத்தின்மீது நாட்டமில்லாமல் இருந்தபொழுது, நான் உன்னை உலக செல்வத்திற்கும் இன்பத்திற்கும் அடிமையாக்க நினைத்தேன். இப்பொழுது அதற்கான நான் மன்னிப்புக் கேட்கின்றேன்… ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய தீமை, அவரைத் தூயவராக வாழவிடாமல் தடுப்பதுதான். நான் அந்தத் தீமையை உனக்குச் செய்தேன். என்னை மன்னித்துக்கொள்.”
ஆம். இந்த உலகத்தில் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யக்கூடிய மிகப்பெரிய தீமை, அவனை தூயவனாக வாழவிடாமல் தடுப்பதுதான். அவன் தூய்மையற்ற வாழ்க்கை வாழ்வதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம் ஏற்றுக்கொள்ளலாம். அதுகூடிய தவறுதான். ஆனால், மற்றவரைத் தூய்மையான வாழ்க்கை வாழவிடாமல் தடுப்பது மிகப்பெரிய குற்றமாகும். இன்றைய முதல் வாசகம், கடவுளைப் போன்று நாம் தூயவர்களாக இருக்க அழைப்புத் தருகின்றது. நாம் எப்படித் தூயவர்களாக இருப்பது என்பதை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
தூய்மை என்பது தீமை செய்யாமல் இருப்பது அல்ல
லேவியர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ‘உங்கள் கடவுளும் ஆண்டவருமான நான் தூயோராய் இருப்பது போல, நீங்களும் தூயோராய் இருங்கள்’ என்று கூறுகின்றது. நாம் எப்படித் தூயோராய் இருப்பது எனத் தெரிந்துகொள்வது நல்லது.
தூயோராய் இருத்தல் என்றால் களவு, பொய், வஞ்சனை, பொய்யாணை போன்ற தவறுகளையும் இதுபோன்ற இன்னும் பல தவறுகளையும் செய்யாமல் இருப்பதா? நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நற்செய்தியில் இயேசுவிடம் வந்த செல்வந்தனாகிய இளைஞன் (மத் 19) எந்தத் தவற்றையும் செய்யவில்லை என்று சொன்னான். அது தூய்மையான வாழ்க்கையா? இல்லை. அப்படிப்பட்ட வாழ்க்கையை யார் வேண்டுமானாலும் வாழலாம். தூயோராய் இருப்பது அதை விட உயர்ந்தது, மேலானது. அது என்ன என்று தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தூய்மை என்பது நன்மை செய்வது
தீமை செய்யாமல் இருப்பது மட்டும் தூயோராய் இருப்பது அல்ல என்றால், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால், ஒருவர் தூயோராய் இருக்கலாம் என்ற கேள்வி எழலாம். அதற்கான விடைதான் இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாவது பகுதியில் இருக்கின்றது. ஆம், உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூரவேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கைதான் தூயோராய் இருப்பது ஆகும். அடுத்திருப்பவர் என்பவர் நம்முடைய இனத்தார் மட்டுமல்ல, எல்லா இனத்தாரும், குறிப்பாக தேவையில் உள்ள யாவரும் அடுத்திருப்பவர்தான். ஆகையால், தேவையில் உள்ள யாவரையும் எந்தவித வேறுபாடு பார்க்காமல் அன்பு செய்தால், நாம் தூயோராய் இருக்கமுடியும் என்பது உறுதி.
ஆகையால், நாம் தேவையில் உள்ள யாவரையும் அன்புசெய்து, அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வோம். அதன்மூலம் தூயோராய் வாழ்வோம்.
சிந்தனை
‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள்’ (லூக் 6: 36) என்பார் இயேசு. ஆண்டவரின் தூய்மை அவருடைய இரக்கத்தில் வெளிப்பட்டது போல, நாம் தூயவர்களாய் இருக்கின்றோம் என்பதை நம்முடைய இரக்கச் செயல்களில் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.