பிப்ரவரி 29 சனிக்கிழமை வெள்ளி நற்செய்தி வாசகம்.

மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15
அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
மறையுரைச்சிந்தனை.
அன்பே தவம்
இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் அவனுடைய தாய்க்கு ஒரே மகன். ஒருநாள் அவன் தன் தாயிடம், “அம்மா! நான் கடவுளைத் தரிசிக்கலாம் என்று இருக்கின்றேன். அதனால் நான் காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரியப்போகிறேன்” என்றான். மகன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனாள். அவனை அவள் வீட்டிலேயே இருக்குமாறு எவ்வளவோ கெஞ்சிக்கேட்டாள், அவன் முடியவே முடியாது என்று முரண்டு பிடித்ததால், அவனை அவனுடைய வழியிலேயே போகவிட்டுவிட்டாள்.
இதற்குக்குப் பின் அந்த இளைஞன் காட்டிற்குச் சென்று கடுந்தவம் இருக்கத் தொடங்கினான். ஆண்டுகள் பல கடந்து சென்றனவே ஒழிய, அவனால் கடவுளைத் தரிசிக்க முடியவில்லை. இப்படியிருக்கையில் ஒருநாள் அவன் இருந்த காட்டுப்பகுதி வழியாகப் பெரியவர் ஒருவர் வந்தார். அவரிடம் அவன் தன்னுடைய உள்ளத்து விருப்பத்தைச் சொல்லி, “கடவுளை எங்கே தரிசிக்கலாம்…? அவரைத் தரிசிக்க நான் என்ன செய்யவேண்டும்…?” என்றான். அதற்குப் பெரியவர் அவனிடம், “கடவுளைக் காட்டில் எல்லாம் தரிசிக்க முடியாது. அவரை நீ தரிசிக்க வேண்டுமென்றால் இங்கிருந்து கிளம்பிப் போ. போகிற வழியில், யார் தன்னுடைய காலில் செருப்பை மாற்றிப் போட்டிருக்கின்றாரோ, அவரே கடவுள்” என்றார்.
பெரியவர் சொன்ன வார்த்தைளைக் காதில் போட்டுக்கொண்ட இளைஞன் காட்டிவிட்டு வீட்டை நோக்கி நடந்து சென்றான். போகிற வழியில் ஒவ்வொருவருடைய காலடிகளையும் பார்த்துக் கொண்டே சென்றான். எவரும் செருப்பு மாற்றி அணிந்திருக்கவில்லை; எல்லாரும் செருப்பைச் சரியாகவே அணிந்திருந்தார்கள். அவனுக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. அவன் தன்னுடைய வீட்டை அடைந்தபொழுது கதவு பூட்டப்பட்டிருந்தது, தட்டிப் பார்த்தான். உள்ளிருந்து அவனுடைய அம்மா வேகமாக ஓடிவந்து கதவைத் திறந்தார்.
எதிரில் தன்னுடைய மகன் இருப்பதைக் கண்டு அப்படியே மெய்ம்மறந்து நின்றார். இதற்கிடையில் இளைஞன் தற்செயலாகத் தன்னுடைய தாயின் கால்களைப் பார்த்தான். தாய் செருப்பை மாற்றி அணிந்திருப்பதைக் கண்டு, ‘கண்முன்னாலேயே கடவுள் தரிசனம் தருகின்றபொழுது, கடவுளைத் தரிசிக்கவேண்டும் என்று காட்டிற்குச் சென்று கடுந்தவம் புரிந்து இத்தனை ஆண்டுகளையும் வீணடித்துவிட்டேனே!’ என்று மிகவும் வருத்தப்பட்டான். பின்னர் அவர் தாயை – கடவுளைத் தரிசித்த மகிழ்ச்சியில், அவருக்குத் தன்னுடைய வாழ்நாள் முழுக்க பணிவிடை செய்யத் தொடங்கினான்.
தவம் அல்லது நோன்பு என்பது காட்டிற்குச் சென்று உண்ணாமல், உறங்காமல் உடலை வருத்திக்கொள்வது அல்ல, அது நம்மோடு வாழக்கூடியவர்களிடம் கடவுளின் சாயலைக் கண்டு, அவர்களுக்குப் பணிவிடை புரிவது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் யோவானின் சீடர்கள், நோன்பு குறித்த கேள்வியை எழுப்புகின்றார்கள். இதற்கு இயேசு என்ன பதில் கூறினார்? நோன்பு குறித்து அவருடைய நிலைப்பாடு என்ன? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நோன்பு குறித்த கேள்வி
நற்செய்தியில் யோவானின் சீடர்கள் இயேசுவிடம், “நாங்களும் பரிசேயர்களும் மிகுதியாக நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் இருப்பதில்லை?” என்று கேட்கின்றார்கள். யோவானின் சீடர்கள் இக்கேள்வியைக் கேட்கின்றபொழுது, யோவான் சிறையில் இருந்தார் என்பதையும் அவர்கள் பரிசேயர்களோடு இணைந்து இருந்தார்கள் என்பதையும் முதலில் நமது கவனத்தில் கொள்வது நல்லது. அடுத்ததாக, ஆண்டுக்கொரு முறை நோன்பிருந்தாலே போதுமானதாக இருந்தது (லேவி 16:29). ஒருசில முக்கியமான காரணங்களுக்காக மக்கள் நோன்பிருந்திருக்கின்றார்கள் என்று திருவிவிலியம் நமக்குச் சான்று பகர்கின்றது. ஆனால் யோவானின் சீடர்களும் பரிசேயர்களும் வாரத்திற்கு திங்கள், வியாழன் என்று இருமுறை நோன்பிருந்தார்கள் (லூக் 18:12). அவர்கள் இப்படி நோன்பிருந்ததைக்கூட விட்டுவிடலாம், இயேசுவின் சீடர்களும் அவ்வாறு நோன்பிருக்கவேண்டும் என்று எதிர்பார்த்ததுதான் ஏற்றுக்கூடிய ஒன்றாக இல்லை. அப்பொழுதுதான் இயேசு அவர்களுக்கு நோன்பின் பொருளை விளக்கிக் கூறுகின்றார்.
மணமகனாகிய இயேசு (எசா 54: 5-6; ஓசே 2: 16-20) மணவீட்டாரோடு இருக்கும்பொழுது, அவர்கள் மகிழ்ந்திருக்கவேண்டும். அந்நேரத்தில் அவர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களைவிட்டுப் பிரிய வேண்டிய காலம் வரும் அப்பொழுது அவர்கள் நோன்பிருப்பார்கள் என்று சொல்லி, எந்த நேரத்தில் நோன்பிருக்கவேண்டும். எதற்காக நோன்பிருக்கவேண்டும் என்பதை அவர் அவர்களுக்கு எடுத்துக் கூறுகின்றார்.
நாம் யோவானின் சீடர்களைப் போன்றும் பரிசேயர்களைப் போன்றும் பெயருக்காவும் மக்கள் நம்மைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவும் நோன்பிருக்கின்றோமா? அல்லது நோன்பு நமக்கு உணர்த்தும் பிறரன்பையும் இறையன்பையும் நம்முடைய வாழ்வில் உணர்ந்து நோன்பிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம்.
சிந்தனை.
‘பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்… அன்றோ நான் விரும்பும் நோன்பு’ (எசா 58:7) என்பார் ஆண்டவர். ஆகையால், நோன்பின் உண்மையான பொருளை உணர்ந்து நோன்பிருப்போம். நம்மோடு இருப்பவர்களையும் இறைவனையும் அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.