பிப்ரவரி 8 : நற்செய்தி வாசகம்

மக்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தார்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவை எல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————–
மாற்கு 6: 30-34

“சற்று ஓய்வெடுங்கள்”

நிகழ்வு

ஓர் ஊரில் இரண்டு விறகுவெட்டிகள் இருந்தார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் யார் அதிகமான விறகுகளை வெட்டுகிறார் என்ற போட்டி நிலவிக்கொண்டே இருந்தது. ஒருநாள் இவர்கள் இருவரும் ஊரில் இருந்த பெரியவர் ஒருவரைச் சந்தித்து, தங்களுடைய நிலைமை எடுத்துச் சொன்னார்கள். உடனே பெரியவர் அவர்களிடம், “நாளைய நாளில் ஊருக்கு வெளியே உள்ள காட்டில் உங்கள் இருவருக்கும் போட்டியை வைத்துக்கொள்வோம். போட்டியில் யார் மிகுதியான விறகுகளை வெட்டுகிறாரோ, அவரே பலசாலி” என்றார். விறகுவெட்டிகள் இருவரும் அதற்குச் சம்மதித்தார்கள்.

மறுநாள் காலையில் பெரியவர் முன்னிலையில் போட்டி தொடங்கியது. இருவரும் சற்று தள்ளித் தள்ளி விறகு வெட்டத் தொடங்கினார்கள். முதல் விறகுவெட்டி வேகவேகமாக விறகுகளை வெட்டத் தொடங்கினார். இரண்டாம் விறகுவெட்டி ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை சற்று ஓய்வெடுத்துக் கொண்டு விறகுகளை வெட்டினார். இதனால் முதல் விறகுவெட்டிக்கு, இரண்டாம் விறகுவெட்டியைவிட மிகுதியான விறகுவெட்டுவதாக எண்ணம் ஏற்பட்டது.

மாலை வேளையில் போட்டியை முன்னின்று நடத்திய பெரியவர் இரண்டு விறகுவெட்டிகளும் வெட்டிய விறகுகளை எண்ணத் தொடங்கினார். முடிவில் இரண்டாம் விறகுவெட்டி அதிகமான விறகுகளை வெட்டியதாக அறிவித்தார். இதனை முதல் விறகுவெட்டியால் நம்பி முடியவில்லை. அவர் இரண்டாம் விறகுவெட்டியிடம் சென்று, “நான்தான் அதிகமான நேரம் விறகுவெட்டினேன். நீ அவ்வப்பொழுது ஓய்திருந்தாய். அப்படியிருந்தும் உன்னால் எப்படி என்னைவிட மிகுதியான விறகுகளை வெட்ட முடிந்தது?” என்று கேட்டார்.

அதற்கு இரண்டாம் விறகுவெட்டி மிகப் பொறுமையாகப் பதில் சொன்னார்: “நீங்கள் வேலை பார்க்கும்பொழுது, நான் அவ்வப்பொழுது ஓய்திருந்தேன் என்றா நினைக்கிறீர்கள்…? இல்லை இல்லை. அந்த நேரத்தில் நான் என்னுடைய கோடாரியைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருந்தேன். நீங்கள் தொர்ந்து வேலை பார்த்ததால் உங்களுடைய கோடாரி மழுங்கி, மிகுதியான விறகுகளை வெட்ட முடியாமல் போனது. ஆனால் நான் என்னுடைய கோடாரியை அப்பொழுது கூர்மைப்படுத்தினேன். அதனால்தான் என்னால் மிகுதியான விறகுகளை வெட்ட முடிந்தது” என்றார்.

வேலை வேலை என்று இராமல் எவ்வளவு நேரம் உழைக்கவேண்டும், எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்ற இரகசியம் தெரிந்தவர்கள் வாழ்வில் வெற்றிபெறுவார்கள் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் பணித்தளத்திற்கு சென்ற சீடர்கள் இயேசுவிடம் திரும்பி வருவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சீடர்களை ஓய்வெடுக்கச் சொன்ன இயேசு

இயேசுவால் பணித்தளங்களுக்கு அனுப்பப்பட்ட அவருடைய சீடர்கள், தங்களுக்குப் பணிக்கப்பட்ட பணிகளை முடித்துக்கொண்டு அவரிடம் திரும்பி வருகின்றார்கள். இயேசுவோ தன்னிடம் வந்த சீடர்களுக்கு மேலும் பணிகளைக் கொடுத்து, அவர்களைச் சோர்வடையச் செய்யாமல், அவர்களைத் தனிமையான ஓர் இடத்திற்கு அனுப்பி வைத்து, சற்று ஓய்வெடுக்குமாறு சொல்கின்றார்.

இன்றைக்கு ஒருசிலர் இருக்கிறார்கள். இவர்கள் எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து, கடைசியில் தங்களுடைய குடும்பத்தையும் நிம்மதியையும் ஏன், வாழ்வையுமே தொலைத்து நிற்பார்கள். இப்படிப்பட்டவர்கள் இயேசுவிடமிருந்து பாடம் கற்பது நல்லது. இயேசு அவ்வப்பொழுது ஓய்வெடுத்த்தார் அல்லது தந்தைக் கடவுளோடு நேரத்தைச் செலவழித்தார் (மாற் 1:35). மட்டுமல்லாமல் தன்னுடைய சீடர்களும் ஓய்வெடுத்துக் கொண்டு பணிசெய்ய அனுமதித்தார். எனவே நாம் இயேசுவிடமிருந்து இந்த வாழ்க்கைமுறையைக் கற்றுக்கொண்டு, அவ்வப்பொழுது ஓய்வெடுத்துக் கொண்டு பணிசெய்வது நல்லது. ஏனெனில் தொடர்ந்து பணிசெய்வதால் ஏற்படும் பலனைவிட அவ்வப்பொழுது ஓய்வெடுத்துக் கொண்டு பணிசெய்வது மிகுந்த பலனைக் கொடுக்கும்.

மக்கள்மீது பரிவுகொண்ட இயேசு

இயேசு தன்னுடைய சீடர்களைத் தனிமையான இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கச் சொன்னதைத் தொடர்ந்து, அவர்கள் தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று ஓய்வெடுக்கத் தொடங்குகிறார்கள். இயேசுவும் அவர்களோடு இருக்கின்றார். இந்நிலையில் மக்கள் கூட்டம் அவர்கள் இருக்கின்ற செய்தியைக் கேள்விப்பட்டு அங்கு வருகின்றது.. இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார்.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமான செய்தி, ஓய்வெடுக்க வந்த இடத்தில் இயேசு மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்குக் கற்பித்ததுதான். இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது எவ்வளவு நேரம் ஓய்வெடுக்க வேண்டும், எவ்வளவு நேரம் மக்களுக்குப் பணிசெய்ய வேண்டும் என்று. அதனால்தான் அவர் மக்கள் ஆயனில்லாத ஆடுகளைப் போன்று இருந்ததைக் கண்டு அவர்கள்மீது பரிவுகொள்கின்றார். எனவே நாம் வேலை வேலை என்று இருந்துவிடாமல், ஓய்வெடுப்பதற்கும் சிறிது நேரம் ஒதுக்கி இறைப்பணியை இன்னும் சிறப்பாகச் செய்வோம்.

சிந்தனை

‘காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதை விட, மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்’ (சஉ 4:6) என்கிறது இறைவார்த்தை. ஆகையால் நாம் எப்பொழுதும் வேலை வேலை என்று பயனற்ற விதமாய் உழைக்காமல், சற்று ஓய்வெடுத்து மன அமைதியோடு உழைத்து ஆண்டவருக்குப் பெருமை சேர்ப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.