நற்செய்தி வாசக மறையுரை 03.02.2020

பொதுக்காலம் மூன்றாம் வாரம் வெள்ளிக்கிழமை
மாற்கு 4: 26-34

“உன் பணியை முடிந்தமட்டும் செய்; மீதியை கடவுள் பார்த்துக்கொள்வார்”

நிகழ்வு

ஒருகாலத்தில் பெர்த்ராம் என்றொரு தச்சர் இருந்தார். அவர் மரத்தில் சிரூபங்களை வடிப்பதில் கைதேர்ந்தவர். அவரிடம் இருந்த இந்தத் திறமையைப் பார்த்துவிட்டு ஒரு மடாதிபதி தன்னுடைய மடத்தில் இருந்த சிறுகோயிலில் சிரூபங்களை வடித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். பெர்த்ராமும் அந்த மடாதிபதி கேட்டுக்கொண்டதற்கேற்ப சிரூபங்களை வடித்துத் தந்தார். அவற்றையெல்லாம் பார்த்து மாடதிபதி மிகவும் மகிழ்ந்துபோய், சிறுகோயிலில் இருந்த பீடம், கிராதி, வாசக மேடை ஆகியவற்றையெல்லாம் அவரிடம் செய்து தரச் சொன்னார். அவரும் மடாதிபதி எதிர்பார்த்ததைவிட மிகச்சிறப்பான முறையில் செய்து தந்தார். இதனால் மடாதிபதிக்கு பெர்த்ராமின்மீது தனி மதிப்பும் மரியாதையும் உண்டானது.

இப்படியிருக்கையில் ஒருநாள் மடாதிபதி பெர்த்ராமை அழைத்து, “அடுத்த வாரம் கர்தினால் இங்கு வருகை தரவிருக்கின்றார். அவருடைய வருகையின் நிமித்தமாக, இயேசு மலைப்பொழிவினை நிகழ்த்துவது மாதிரியான ஒரு சிரூபத்தை செய்துவைத்து, அதனை அவருடைய திருக்கைகளால் அர்ச்சிக்கலாம் என்று நினைக்கின்றேன். இதற்கு நீதான் என்னோடு ஒத்துழைக்கவேண்டும்” என்றார். அவர் பெர்த்ராமிடம் இவ்வாறு கேட்டபொழுது, பெர்த்ராமிற்கு உடம்புச் சரியில்லை. அதனால் பெர்த்ராம் மடாதிபதியிடம், “இப்பொழுது எனக்கு உடம்பு சரியில்லை… மேலும் நீங்கள் கேட்பது மாதிரியான சிரூபத்தை செய்து தருவதற்குப் போதிய நேரமும் இல்லை” என்று தயங்கியவாறு சொன்னார். அதற்கு மடாதிபதி அவரிடம், “பெர்த்ராம்! உன்மீது எனக்கு நம்பிக்கையிருக்கின்றது. நிச்சயம் நீ அந்த சிரூபத்தை செய்துதருவாய். வாழ்த்துகள்” என்று சொல்லிவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றார்.

பெர்த்ராம் குழப்பத்தோடு தன்னுடைய வீட்டிற்கு வந்தார். ‘உடல்நலம் சரியில்லை… சிரூபத்தைச் செய்து முடிப்பதற்குப் போதுமான நாள்கள் இல்லை… சிரூபத்தை தேவதாரு மரத்தில் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்… நம்மிடம் இருப்பதோ சிந்தூர மரம்தான். இதில் எப்படி இயேசு மலைப்பொழிவு நிகழ்த்துவது மாதிரியான சிரூபத்தைச் செய்வது…? சரி இந்த சிந்தூர மரத்திலேயே சிரூபத்தைச் செய்வோம்’ என்று முடிவுசெய்துகொண்டு, அதில் சிரூபத்தைச் செய்யத் தொடங்கினார்.

சிரூபத்தை அவர் மெல்லச் செய்யத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவரால் பணியைத் தொடர முடியாமல் போய், அசதி மிகுதியால் அப்படியே தூங்கத் தொடங்கினார். அந்நேரத்தில் திடீரென்று தோன்றிய வானதூதர் ஒருவர் பெர்த்ராமின் கையில் இருந்த கருவிகளை எடுத்துக்கொண்டு இயேசு மலைப்பொழிவினை நிகழ்த்துவது மாதிரியான ஓர் அற்புதமான சிரூபத்தை வடித்து வைத்துவிட்டு மறைந்துபோனார். காலையில் எழுந்து பார்த்த பெர்த்ராம் மிகவும் அப்படியே வியந்துபோனார். அவர் அந்தச் சிரூபத்தை எப்படி வடிவமைக்கவேண்டும் என்று நினைத்தாரோ, அதைவிடச் சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. ‘உண்மையில் இது கடவுளின் செயலாகத்தான் இருக்கும்’ என்று நினைத்தக்கொண்ட பெர்த்ராம், அந்த சிரூபத்தைத் தூக்கிக்கொண்டு, மடாதிபதியிடம் ஓடினார். மடாதிபதி அந்தச் சிரூபத்தை பார்த்துவிட்டு, மெய்ம்மறந்து நின்றார். பின்னர் பெர்த்ராம் நடந்த எல்லாவற்றையும் அவரிடம் கூற, அவர், “நீ உன்னால் முடிந்ததை செய்தாய்… கடவுளோ மீதியை செய்துவிட்டார்” என்றார்.

ஆம், ஒருபணியை நம்மால் முடிந்தமட்டும் செய்கின்றபொழுது, மீதிப் பணியினை கடவுள் செய்துமுடித்துவிடுவார் என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறையாட்சியை தானாய் வளர்ந்துவரும் விதைக்கு ஒப்பிடுக்கின்றார். இயேசு சொல்லும் இந்த உவமை நமக்குச் சொல்லும் செய்தி என்ன என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இறையாட்சி தானாய் வளர்ந்துவரும் விதைக்கு ஒப்பானது

நற்செய்தியில் இயேசு இறையாட்சியை தானாய் வளர்ந்து வரும் விதைக்கு ஒப்பிடுக்கின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையில் இரண்டு உண்மைகள் அடங்கியுள்ளன. ஒன்று, மனிதர்களாகிய நாம் நம்முடைய கடமைகளை, பணிகளை முதலில் செய்தாக வேண்டும். எப்படி இயேசு சொல்லும் உவமையில் வருகின்ற மனிதர் விதையை விதைத்தாரோ, அதுபோன்று நம்முடைய பணிகளை நாம் கடமையுணர்வோடு செய்யவேண்டும் (1 கொரி 9: 16).

இந்த உவமை சொல்கின்ற இரண்டாவது உண்மை. நாம் நம்முடைய பணிகளை கடமையுணர்வோடு செய்கின்றபொழுது, மீதியைக் கடவுள் பார்த்துக்கொள்வர் என்பதாகும். உவமையில் வருகின்ற மனிதர் விதையை விதைக்க மட்டுமே செய்தார். மீதிப் பணிகளைக் கடவுளே பார்த்துக்கொண்டார். இறையாட்சியும் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும். ஆம், கடவுள் நமக்குக் கொடுத்த பணிகளை நாம் செய்துமுடிக்கின்றபொழுது, மீதிப்பணிகளைக் கடவுளே பார்த்துக்கொள்வார். புனித பவுலும் இதே கருத்தினைத்தான், “நான் நட்டேன்; அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; கடவுளே விளையச் செய்தார்” (1கொரி 3: 6)” என்று கூறுவார்.

ஆகையால், நாம் நம்மிடம் கொடுக்கப்பட்ட பணிகளைத் திடப்படச் செய்வோம். மீதியைக் கடவுள் பார்த்துக்கொண்டு, இம்மண்ணுலகில் அவருடைய ஆட்சியை நிறுவுவார்.

சிந்தனை

‘உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்’ (எபி 10: 9) என்று சொல்லி இயேசு இறைவனின் திருவுளத்தை இம்மண்ணில் நிறைவேற்றினார். நாமும் இறைவனின் திருவுளம் நிறைவேற ஒரு கருவியாய் இருந்து செயல்படுவோம். நம் வழியாய்ச் செயல்படும் இறைவன், இறையாட்சியை நம் வழியாய்க் கட்டியெழுப்பி தன்னுடைய அருளை நிறைவாக நமக்கு நிறைவாகத் தருவார்.

Comments are closed.