பிப்ரவரி 4 : நற்செய்தி வாசகம்

சிறுமியே! உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 21-43.

இயேசு படகிலேறி, கடலைக் கடந்து மீண்டும் மறுகரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, “என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்” என்று அவரை வருந்தி வேண்டினார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர். அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்” என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, “என் மேலுடையைத் தொட்டவர் யார்?” என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், “இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், `என்னைத் தொட்டவர் யார்?’ என்கிறீரே!” என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு” என்றார். அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக்கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், “உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?” என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், “அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்” என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, “ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், “தலித்தா கூம்” என்றார். அதற்கு, `சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு’ என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். “இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது” என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார். இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
மாற்கு 5: 21-43

“அஞ்சாதீர் நம்பிக்கையை மட்டும் விடாதீர்”

நிகழ்வு

நகரில் இருந்த பிரபலமான கல்லூரி அது. புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் அந்தக் கல்லூரில் மாணவர்களின் சேர்க்கை மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. பலர் சமூகத்தில் பெரிய பெரிய பதவிகளில் இருந்தவர்களிடமிருந்து சிபாரிசுக் கடிதங்களை வாங்கிக்கொண்டு அந்தக் கல்லூரி முதல்வரைப் பார்க்கச் சென்றார்கள். அவர்களிடமிருந்து அந்த சிபாரிசுக் கடிதங்களை வாங்கிக்கொண்ட கல்லூரி முதல்வர், அவர்கள் போனபின்பு அவற்றையெல்லாம் கிழித்துக் குப்பைத் தொட்டியில் தூக்கிப் போட்டார்.

இதற்கு நடுவில் அந்தக் கல்லூரி முதல்வரைச் சந்திக்க ஏழை மாணவன் ஒருவன் வந்தான். அவன் யாரிடமிருந்தும் எந்தவொரு சிபாரிசுக் கடிதமும் வாங்கி வரவில்லை. மாறாக, அவன் தன்னைப் பற்றி ஒரு குறிப்பினை மட்டும் எழுதிக்கொண்டு வந்து, அதைக் கல்லூரி முதல்வரிடம் கொடுத்தான். அதை வாங்கிப்படித்த கல்லூரி முதல்வர் மிகவும் வியந்துபோனார்.

பின்னர் அவர் அந்த மாணவனை சிறிதுநேரம் வெளியே இருக்குமாறு சொல்லிவிட்டு, தனக்கு முன்பாக அமர்ந்திருந்த தன்னுடைய நெருங்கிய நண்பரிடம், “நண்பா! இந்த மாணவனை இரண்டு காரணங்களுக்காகக் கல்லூரில் எடுத்துக்கொள்ளவேண்டும். ஒன்று, இவன் சிபாரிசுக் கடிதத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தன்மீது நம்பிக்கை வைத்து வந்திருக்கின்றான். இரண்டு, இவன் ‘திறமையான மாணவர்களுக்கு இந்தக் கல்லூரி நிர்வாகம் மதிப்பளிக்கும்’ என்று இந்தக் கல்லூரி நிர்வாகத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றான். இந்த இரண்டு காரணங்களுக்காக இவனை இந்தக் கல்லூரியில் எடுத்துக்கொள்ளவேண்டும்” என்றார்.

இதற்கு கல்லூரியின் முதல்வருடைய நண்பர், “நீங்கள் சொல்வது மிகச் சரி. கட்டாயம் இந்த மாணவனை கல்லூரியில் சேர்த்துக்கொள்ளவேண்டும்” என்றார். உடனே வெளியே இருந்த மாணவன் உள்ளே வரவழைக்கப்பட்டு, கல்லூரில் சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

இந்த நிகழ்வில் வரும் ஏழை மாணவன் தன்மீதும் தனக்குக் கல்வியளிக்கவிருந்த கல்லூரி நிர்வாகத்தின்மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான். அந்த நம்பிக்கையே அவன் அந்தப் பிரபலமான கல்லூரியில் படிப்பதற்குக் காரணமாக அமைந்தது. நற்செய்தியில் நம்பிக்கையினால் நலம்பெற்ற இருவரைக் குறித்துப் படிக்கின்றோம். அவர்களுடைய நம்பிக்கை எப்படிப்பட்டதாக இருந்தது? அந்த நம்பிக்கை இயேசுவிடமிருந்து எப்படி ஆசியைப் பெற்றுத்தந்தது? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யாயிர் மற்றும் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் நம்பிக்கை

மாற்கு எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில் இரண்டு மனிதர்களைக் குறித்து வாசிக்கின்றோம். ஒருவர் தொழுகைக்கூடத் தலைவர்களுள் ஒருவராகிய யாயிர், இன்னொருவர் பன்னிரு ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி. இந்த இரண்டு பேரிடமும் இருந்த ஆழமான நம்பிக்கையைக் குறித்து நாம் நிச்சயம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

யூத சமூகத்தில் தொழுகைக்கூடத் தலைவர் என்றால், ஓர் உயரிய பதவி. அப்படிப்பட்ட பதவியில் இருந்தவர் இயேசுவிடம் வந்து, அவருடைய காலில் விழுந்து, சாகும் தருவாயில் இருக்கும் தன் மகள்மீது கையை வைத்தால், அவள் பிழைத்துக்கொள்வாள் என்று சொல்வதெல்லாம் நம்பிக்கையின் உச்சம் என்றுதான் சொல்லவேண்டும். அதற்கடுத்து, அவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவருடைய மகள் இறந்துவிட்ட செய்தியைச் சொன்னபோது, இயேசு அவரிடம், ‘நம்பிக்கையை மட்டும் விடாதீர்’ என்று சொல்கின்றபொழுதும் அவர் நம்பிக்கையோடு இருக்கின்றார்.

நற்செய்தியில் நாம் சந்திக்கின்ற இரண்டாவது மனிதர் அல்லது மனுஷி இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, இவர் ‘நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்’ என்ற நம்பிக்கையோடு தொடுகின்றார். இயேசுவின் ஆடையைத் தொட்டால் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் நடுவில் இருந்தது (மாற் 6: 56; திப 19: 11-12). இதை அறிந்தவராய் இரத்தப் போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணி, இயேசுவின் மேலுடையைத் தொடுக்கின்றார். நலம் பெறுகின்றார்.

நம்பினோருக்கு நலமளிக்கும் இயேசு

யாயிர் மற்றும் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டிருந்த பெண்மணியின் நம்பிக்கையைக் கண்டு இயேசு யாயிரின் மகளை உயிர்த்தெழச் செய்கிறார்; இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு நலமளிக்கின்றார். இறந்த ஒருவரைத் தொடுவதாலும் இரத்தப்போக்கோடு இருக்கின்ற ஒரு பெண்மணியைத் தொடுவதாலும் ஒருவர் தீட்டுப்பட்டவராகின்றார் (லேவி 15: 19-28) என்று மோசேயின் சட்டம் கூறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இயேசு நம்பிக்கையோடு இருப்பவர்கள் நலம்பெறவேண்டும் என்பதையே பெரிதாகக் கருதி அவர்களுக்கு நலமளிக்கின்றார்.

நற்செய்தியில் வருகின்ற இந்த இரண்டு மனிதர்களின் நம்பிக்கையைக் குறித்துச் சிந்தித்துப் பார்த்த நாம், நம்முடைய நம்பிக்கை எப்படிப்பட்தாக இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

‘நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு ஏற்புடையவராக இருக்கமுடியாது’ (எபி 11: 6) என்பார் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர். ஆகையால், நாம் இறைவனிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.