ஜனவரி 24 : நற்செய்தி வாசகம்

தம்மிடம் இருக்கும்படி தாம் விரும்பியவர்களை அழைத்தார்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-19

இயேசு மலைமேல் ஏறித் தாம் விரும்பியவர்களைத் தம்மிடம் வரவழைத்தார். அவர்களும் அவரிடம் வந்தார்கள். தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்; அவர்களுக்குத் திருத்தூதர் என்றும் பெயரிட்டார். அவர் ஏற்படுத்திய பன்னிருவர் முறையே, பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், செபதேயுவின் மகன் யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் – இவ்விருவருக்கும் `இடியைப் போன்றோர்’ எனப் பொருள்படும் பொவனேர்கேசு என்று அவர் பெயரிட்டார் – அந்திரேயா, பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து என்போர் ஆவர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
1 சாமுவேல் 24: 3-21

தீமைக்குப் பதில் நன்மை செய்த தாவீது

நிகழ்வு

பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்காட்லாந்து நாட்டில் தோன்றிய மிகப்பெரிய நாவலாசிரியர், கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர் சர் வால்டர் ஸ்காட் என்பவர். ஒருநாள் இவர் தன்னுடைய வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்தபொழுது, தெருநாய் ஒன்று அவ்வழியாக வந்தது. அதைப் பார்த்ததும், இவர் பக்கத்தில் கிடந்த ஒரு கல்லை எடுத்து, அதன்மீது ஓங்கி எறிந்தார். இவர் எறிந்ததில், அந்த நாயின் முன்னங்கால் முறிந்து, அதிலிருந்து இரத்தம் வழியத் தொடங்கியது.

இதற்குப் பின் வால்டர் ஸ்காட் சிறிதும் எதிர்பாராத ஒன்று நடந்தது. ஆம், முன்னங்கால் முறிந்த அந்த நாயானது வால்டர் ஸ்காட்டை நோக்கித் தத்தித் தத்தி ஓடிவந்தது. அதைப் பார்த்துவிட்டு வால்டர் ஸ்காட், அந்த நாய் தன்னைக் கடிக்கத்தான் இப்படி ஓடிவருகின்றது என்று பயந்தவாறு நின்றார். அதுவோ அவருகில் வந்து அவருடைய முகத்தை வாஞ்சையோடு நக்கிவிட்டு வேகமாக அங்கிருந்து ஓடி மறந்தது. அவர் அப்படியே மெய்ம்மறந்து நின்றார். ‘நாமோ இந்த நாயின் முன்னங்காலைச் சேதப்படுத்தி இருக்கின்றோம்… இதுவோ நம்மைக் கடிக்காமல், வாஞ்சையோடு நக்கிவிட்டுப் போகிறதே…! தீமைக்கும் நன்மை செய்த இந்த நாய் அல்லவா கிறிஸ்துவின் விழுமியத்தின்படி வாழ்கின்றது’ என்று அவர் அந்த நாயைத் தன்னுடைய கடைசிக்காலம் மட்டும் நன்றியோடு நினைத்துப் பார்த்தார்.

பகைவருக்கு அன்பு, தீமைக்கு நன்மை இதுதான் கிறிஸ்தவ நெறி. இந்த நெறியின் படி வாழ்ந்த அல்லது தனக்குத் தீமை செய்ய நினைத்த சவுலுக்கு நன்மை செய்ய நினைத்த தாவீதைக் குறித்து இன்றைய முதல் வாசகம் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தாவீதைக் கொல்ல நினைத்த சவுல்

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போர்களில் வெற்றியும் மக்கள் நடுவில் செல்வாக்கும் பெற்று வந்தார் தாவீது. இது சவுலின் உள்ளத்தில் பொறாமையை ஏற்படுத்துகின்றது. சவுல் தாவீதின்மீது பொறாமை கொள்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்களைச் சொல்லலாம். ஒன்று, தாவீதின் செல்வாக்கு அவர் போர்களில் பெற்ற வெற்றியால் உயர்ந்துகொண்டு போனது. அதனால் தன்னுடைய ஆட்சியுரிமை ஒருநாள் பறிபோகும் என்று சவுல் தாவீதின்மீது பொறாமைகொண்டார். இரண்டு, தனக்குப் பின் தன்னுடைய மூத்த மகன் யோனத்தான்தான் இஸ்ரயேலை ஆட்சி செய்யவேண்டும் என்று சவுல் நினைத்திருக்கவேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீதின் செல்வாக்கு உயர்ந்துகொண்டே போனதால், சவுல் தாவீதின் மேல் பொறாமை கொள்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில் சவுல் தாவீதைக் கொல்வதற்காக இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து மூவாயிரம் பேருடன் வரையாடுகளின் பாறைக்கு எதிர்புறம் செல்கின்றார். அங்கு சென்ற சவுல் மற்றும் அவருடைய ஆள்களும் தாவீதைக் கொன்றார்களா…? அங்கு என்ன நடந்து…? ஆகியவற்றைக் குறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

சவுலைக் கொல்லாமல், அவருடைய மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்த தாவீது

சவுல் தாவீதைக் கொல்வதற்காக வருகின்றபொழுது ஒரு குகை இருப்பதைக் காண்கின்றார். அதற்குள் அவர் இயற்கைக் கடனைக் கழிப்பதற்காக செல்கின்றார். அந்த நேரத்தில் தாவீது, சவுலின் மேலங்கியில் இருந்த தொங்கலை அறுக்கின்றார். தாவீது நினைத்திருந்தால், அவரோடு இருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப தன்னைக் கொல்ல வந்த சவுலைக் கொன்றிருக்கலாம்; ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், சவுலின் மேலங்கியில் இருந்த தொங்கலை மட்டும் அறுக்கின்றார். இச்செயலைச் செய்ததற்குக் கூட அவர் பின்னர் வருந்துகின்றார்.

தாவீது சவுலின் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்தது நமக்கு மூன்று செய்திகளை உணர்த்துகின்றது. முதலாவது செய்தி. யாரும் யாரையும் கொலை செய்யக்கூடாது என்பதாகும் (விப 20:13). சவுல் சாதாரணமானவர் அல்லர்; அருள்பொழிவு செய்யப்பட்ட ஒருவர். அப்படிப்பட்டவரைக் கொலைசெய்வது மிகப்பெரிய குற்றம் என்று அவரை ஒன்றும் செய்யாமல் விடுகின்றார் தாவீது. இரண்டாவதாக, தாவீது சவுலின் மேலங்கியின் தொங்கலை அறுத்தது, தாவீதுக்கு அரசுரிமை வழங்கப்படுகின்றது என்ற செய்தியைச் சுட்டிக்காட்டுகின்றது. மூன்றாவது செய்தி, தீமைக்குப் பதில் நன்மை செய்யவேண்டும் என்பதாகும். சவுல் நடந்துகொண்டதுபோல தாவீது நடந்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு நடக்காமல், நன்மை செய்பவராக இருக்கின்றார்.

தாவீதிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் ஒன்று இருக்கின்றது. அதுதான் தீமைக்குப் பதில் நன்மை செய்வதாகும். எனவே, பகைமை உள்ள இடத்தில் அன்பும் தீமைக்குப் பதில் நன்மையையும் செய்வோம்.

சிந்தனை

‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புருத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடுங்கள்’ (மத் 5: 44) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசு சொன்னதுபோன்று பகைவரை அன்பு செய்து, துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் மன்றாடி, தீமை செய்வோருக்கு நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.