சனவரி 14 : நற்செய்தி வாசகம்

இயேசு அதிகாரத்தோடு மக்களுக்குப் போதித்து வந்தார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 21-28

இயேசுவும் சீடர்களும் கப்பர்நாகும் ஊரில் நுழைந்தார்கள். ஓய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குச் சென்று கற்பித்து வந்தார். அவருடைய போதனையைக் குறித்து மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். ஏனெனில் அவர் மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அப்போது அவர்களுடைய தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்” என்று கத்தியது. “வாயை மூடு; இவரை விட்டு வெளியே போ” என்று இயேசு அதனை அதட்டினார். அப்பொழுது அத்தீய ஆவி அம்மனிதருக்கு வலிப்பு உண்டாக்கிப் பெருங்கூச்சலிட்டு அவரை விட்டு வெளியேறிற்று. அவர்கள் அனைவரும் திகைப்புற்று, “இது என்ன? இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே! இவர் தீய ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார்; அவையும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே!” என்று தங்களிடையே பேசிக்கொண்டனர். அவரைப் பற்றிய செய்தி உடனே கலிலேயாவின் சுற்றுப்புறமெங்கும் பரவியது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
தீய ஆவிகளின்மீது அதிகாரம்கொண்ட இயேசு

நிகழ்வு

ஒருசமயம் மாவீரன் நெப்போலியன் தன்னுடைய படைவீரர்களோடு பேசிக்கொண்டிருந்தான். அப்பொழுது அவன் உலக வரைபடத்தை அவர்களிடம் எடுத்துக்காட்டி, அதில் சிகப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருந்த இடத்தைச் சுட்டிக்காட்டி, “சிகப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருக்கின்ற இந்த இடத்தை மட்டும் நான் வென்றிருந்தால், இவ்வுலகத்தையே வென்றவன் ஆகியிருப்பேன். அந்தப் பகுதியை வெல்லமுடியாமல் போனதால், உலகத்தை வென்றவன் என்று என்னால் சொல்லக்கொள்ள முடியவில்லை” என்று மிக வருத்தத்தோடு சொன்னான்.

நெப்போலியன் தன் கையில் வைத்திருந்த வரைபடத்தில், சிகப்பு நிறத்தால் குறிக்கப்பட்டிருந்த பகுதி பிரிட்டிஸ் தீவுகளாகும். அந்தத் தீவுகளை அவனால் இறுதிவரைக் கைப்பற்ற முடியவில்லை.

நெப்போலியனைப் போன்று சாத்தானும் உலக வரைபடத்தை எடுத்து, அதை குட்டிச்சாத்தான்களிடம் சுட்டிக்காட்டிப் பேசுமேயானால், “இயேசு மட்டும் கல்வாரி மலையில் தன்னுடைய செந்நிற இரத்தத்தைச் சிந்தியிருக்காவிட்டால், என்னால் இந்த உலகத்தையே வென்றிருக்க முடியும்” என்று பேசியிருக்கக்கூடும்.

ஆம், சாத்தானால் இவ்வுலகை வெல்ல முடியவில்லை… வெல்லவே முடியாது. காரணம் தீய ஆவிகள் உட்பட, எல்லாவற்றின்மீதும் அதிகாரம் கொண்டிருக்கும் இயேசு கிறிஸ்து இவ்வுலகை வென்றுவிட்டார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, தீய ஆவி பிடித்திருந்த ஒருவரிடமிருந்து அதனை விரட்டியடிக்கின்றார். இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்று இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

அதிகாரத்தோடு போதித்துவந்த இயேசு

திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்ட பிறகு, கடவுளின் நற்செய்தியை எங்கும் பறைசாற்றிக்கொண்டு வந்த இயேசு, யூதர்களின் தொழுகைக்கூடங்களிலும் பறைசாற்றி வந்தார். தொழுகைக்கூடங்களானது குரு எஸ்ராவின் காலத்திலிருந்தே (கி.மு 450) இருந்து வந்தன. பத்து யூதக் குடும்பங்களுக்கு ஒரு தொழுகைக்கூடம் என்று தொழுகைக்கூடங்கள் உருவாகக் காரணம், எருசலேம் திருக்கோயில் மிகவும் தூரமாக இருந்ததால்தான். இவற்றில் யூத இரபிகளும் மறைநூல் அறிஞர்களும் இன்னும் ஒருசிலரும் போதித்து வந்தார்கள். இயேசு, கடவுளின் நற்செய்தியை எங்கும் பறைசாற்றிக்கொண்டு வந்ததைக் குறித்துத் தொழுகைக்கூடத் தலைவர்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதனால் அவர்கள் தங்களுடைய தொழுகைக்கூடங்களில் இயேசுவைப் போதிக்கச் சொல்கின்றார்கள். இயேசுவும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் போதிக்கின்றார். அவருடைய போதனைக் கேட்கின்ற மக்கள் வியப்பில் ஆழ்கின்றார்கள். காரணம் அவருடைய போதனை, மறைநூல் அறிஞர்களைப் போலன்றி அதிகாரம் கொண்ட போதனையாக இருக்கின்றது.

ஆண்டவர் இயேசு அதிகாரத்தோடு போதிக்கவும் மட்டுமில்லை… அதிகாரத்தோடு வல்ல செயல்களையும் செய்தார். இயேசு அதிகாரத்தோடு வல்லசெயலை அல்லது தீய ஆவி விரட்டியடித்ததுதான் இன்றைய நற்செய்தி வாசகமாக இருக்கின்றது. அது குறித்து நாம் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

அதிகாரத்தோடு தீயஆவியை விரட்டியடித்த இயேசு

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுகைக்கூடத்தில் கற்பித்துக் கொண்டிருக்கையில், தீய ஆவி பிடித்திருந்த ஒருவரைக் காண்கின்றார். அந்த மனிதரைப் பிடித்த தீய ஆவி, “நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை…?” என்று கத்தத் தொடங்குகின்றது. இயேசு அதனைத் தொடர்ந்து கத்தவிடவில்லை. மாறாக, “வாயை மூடு, இவரை விட்டு வெளியே” என்று அதட்டுகின்றார்.

இங்கு நமக்கு முன் ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், சாத்தான் இயேசுவைப் பற்றி சரியாகத்தானே சொல்கின்றது… பிறகு எதற்கு இயேசு அதனை, வாயை மூடு? என்று சொல்கின்றார் என்பதுதான் அந்தக் கேள்வி. இதில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, தீயஆவி சொல்லக்கூடிய வார்த்தைகளில் இயேசு ஓர் அரசியல் மெசியா என்ற தொனி இருக்கின்றது. துன்புறும் ஊழியனாகத் தன்னுடைய பணியைச் செய்துவந்த இயேசு, தீய ஆவியின் வார்த்தைகள் தனது பணிக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதால் அதனைப் பேசவிடாமல் தடுக்கின்றார். இரண்டு, ‘சாத்தானும் வேதம் ஓதும்’ என்ற சொல்வழக்கிற்கு ஏற்ப, தன்னைப் பற்றி சொல்வது சாத்தானாக இருப்பதால், அதனைப் பேசவிடாமல் தடுக்கின்றார். அது மட்டுமல்லாமல், அதனை அந்த மனிதரை விட்டு வெளியே போகச் சொல்கின்றார். இதைப் பார்த்துவிட்டுத்தான் மக்கள், “இது அதிகாரம் கொண்ட புதிய போதனையாய் இருக்கிறதே!” என்று தங்களிடையே பேசிக்கொள்கின்றார்கள்.

ஆம், இயேசுவுக்கு தீய ஆவி உட்பட எல்லாவற்றின் மீதும் அதிகாரம் உண்டு (மத் 20: 18) இத்தகைய அதிகாரம் கொண்ட இயேசுவின் கைகளில் நம்மையே நாம் ஒப்புக்கொடுத்து, அவர் வழியில் நடப்பதே சாலச் சிறந்தது. நாம் நம்மையே எல்லா அதிகாரமும் கொண்டிருக்கின்ற இயேசுவின் கைகளில் ஒப்புக்கொடுத்து, அவருடைய வழியில் நடக்கத் தயாரா? சிந்தித்துப் பார்ப்போம்.

சிந்தனை

‘பின்பு, அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது’ (திவெ 20: 10) என்கிறது இறைவார்த்தை. ஆம், தீமையே உருவான சாத்தான், நன்மையே உருவான இயேசுவால் வெல்லப்படும். ஆகவே, நாம் நன்மையே உருவான இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.