கிறிஸ்தவ வாழ்வு, இறைவனுடன் கொண்டிருக்கும் காதல்
கிறிஸ்தவ வாழ்வு என்பது இறைவனுடன் நாம் கொண்டிருக்கும் அன்பின் கதை என்ற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
‘கிறிஸ்தவ வாழ்வைக் குறித்து நாம் அறிவுடையவராக இருந்தால் மட்டும் போதாது. நாம் நம்மிலிருந்து வெளிவராவிடில், நாம் இறைவனை வணங்காவிடில், அவரை அறிந்து கொள்ளமுடியாது. கிறிஸ்தவ வாழ்வு, இறைவனுடன் கொண்டிருக்கும் காதல் கதை’ என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை.
இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இயேசுவின் திருமுழுக்குத் திருவிழாவில் நாம் நம் திருமுழுக்கைக் கண்டுகொள்கிறோம். இயேசு எவ்வாறு இறைத்தந்தையின் அன்புக்குரிய மகனாக இருந்தாரோ, அதேபோல், நாமும், தண்ணீரிலும், தூய ஆவியிலும் மறுபிறப்பு அடைந்து, இறைவனின் அன்புக்குரிய குழந்தைகளாகவும், எண்ணற்ற சகோதரர், சகோதரிகளின் மத்தியில், உடன்பிறந்தோராய் மாறியுள்ளோம் என்பதை அறிய வருகிறோம்” என எழுதியுள்ளார்.
மேலும், ஐந்தாண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் ‘அத் லிமினா’ சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்களின் ஒரு குழுவினரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று சந்தித்து உரையாடினார்.
பராகுவாய் (Paraguay) நாட்டின் புதிய தூதராக, வத்திக்கானுக்கு வருகை தந்திருக்கும் Alfredo Osvaldo Augusto Ratti Jaeggli அவர்கள், இத்திங்களன்று திருத்தந்தையைச் சந்தித்து தன் பணி நியமன பத்திரத்தை சமர்ப்பித்து, பணியைத் துவக்கியுள்ளார்.
Comments are closed.