டிசம்பர் 12 : நற்செய்தி வாசகம்

திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 11-15

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும் யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன. உங்களுக்கு விருப்பம் இருந்தால் வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————–
திருமகன் இயேசுவின் வருகைக்கும் தயார்செய்து திருமுழுக்கு யோவான்

நிகழ்வு

முன்பொரு காலத்தில் துறவி ஒருவர் இருந்தார். அவர் எங்கெல்லாம் பணிசெய்தாரோ அங்கெல்லாம் மலரைப்போன்று மணம் பரப்பினார். இதற்கிடையில் அவரைக் குறித்துக் கேள்விப்பட்ட வானதூதர்கள் அவரை இறையாசியால் நிரப்ப விரும்பினார்கள். அதன்பொருட்டு அவர்கள் அந்தத் துறவியிடம் வந்தார்கள்.

“நீர் ஆற்றிவரும் பணிகளைக் குறித்துக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்கின்றோம். தொடர்ந்து நீர் உம்முடைய பணிகளை இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு உம்மை ஆசியால் நிரப்ப வந்திருக்கின்றோம். இப்பொழுது சொல்லும், உம்மை எந்த மாதிரியான ஆசியால் நிரப்புவது… இறந்தோரை உயிர்த்தெழச் செய்யும் ஆசியால் நிரப்பட்டுமா…?” என்றார்கள். “வேண்டாம், வேண்டாம்… இறந்தோரை உயிர்த்தெழ செய்வது கடவுள் மட்டுமே செய்யக்கூடியது. அத்தகைய ஆசியை எனக்குத் தந்து கடவுளை இழிவுபடுத்த வேண்டாம்” என்றார் அந்தத் துறவி.

இதற்குப் பின்பு வானதூதர்கள் அவரிடம், “இறந்தோரை உயிர்த்தெழச் செய்யும் ஆசி வேண்டாம் என்றால், பாவிகளை மனந்திரும்ப வைக்கும் ஆசியை உமக்குத் தரட்டுமா…?” என்றார். “பாவிகளை மனந்திரும்ப வைப்பது தூய ஆவியாருக்கே உரிய தனிப்பெரும் கொடை. அதனை எனக்குத் தந்து தூய ஆவியாரை இழவுபடுத்தவேண்டாம்” என்றார் அவர். “அப்படியானால், உம்முடைய முன்மாதிரியான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் உம் பக்கம் வருவது மாதிரியான ஆசியை உமக்குத் தரட்டுமா…?” என்றார்கள் வானதூதர்கள். அதற்கு அவர், “மக்கள் அனைவரும் இறைவனை நோக்கிச் செல்லவேண்டுமே ஒழிய, என்னை நோக்கி அல்ல. அதனால் எனக்கு அந்த ஆசியும் வேண்டாம்” என்றார்.

இதனால் வானதூதர்களிடம், “உமக்கு என்ன மாதிரியான ஆசி வேண்டும் என்பதை நீரே சொல்லிவிடும்” என்றார்கள். துறவி ஒருநிமிடம் ஆழமாக யோசித்துவிட்டுச் சொன்னார், “நான் மக்களுக்கு நல்லது செய்வது எனக்குத் தெரியாமலேயே நடைபெறவேண்டும். அப்படியோர் ஆசியை எனக்குத் தாருங்கள்” என்றார். வானதூதர்களும் அதற்குச் சரியென்று சொல்லிவிட்டு, அவர் கேட்ட ஆசியால் அவரை நிரப்பிவிட்டு, அங்கிருந்து மறைந்தார்கள். இதற்குப் பின்பு, அந்தப் புனித துறவி எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அவர் நிழல்பட்டுப் பலரும் நலமடைந்தார்கள். இவ்வாறு பலரும் அவரிடமிருந்து வெளிப்பட்ட ஆற்றலால் நலமடைந்தார்கள். இது அவருக்குத் தெரியாமலேயே நடந்தது.

இந்த நிகழ்வில் வருகின்ற துறவி, கடவுளுக்கு முன்பாகத் தான் ஒன்றுமில்லை என்று தாழ்ச்சியோடு வாழ்ந்தார். இதனால் கடவுள் அவரை மேலும் மேலும் உயர்த்தினார். இன்றைய நற்செய்தி வாசகம் தாழ்ச்சியோடு இறைப்பணியைச் செய்த திருமுழுக்கு யோவான் எவ்வாறு கடவுளால் உயர்த்தப்படுகின்றார் என்பதைக் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்த திருமுழுக்கு யோவான் Top of Form

நற்செய்தியில் இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்துப் பேசுகின்றார். அப்படிப் பேசுகின்றபோது, “மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்று பேசுகின்றார். இயேசு திருமுழுக்கு யோவானைக் குறித்து இவ்வாறு பேசுவதற்கு அல்லது இவ்வாறு குறிப்பிடுவதற்குக் காரணமென்ன எனத் தெரிந்து கொள்வது நல்லது.

திருமுழுக்கு யோவான் ஆண்டவருக்கான வழியை ஆயத்தம் செய்தவர் (மத் 3: 1-3). குறிப்பாக மக்கள் தங்களுடைய பாவத்திலிருந்து மனம்மாறவேண்டும் என்று அழைப்பு விடுத்தவர். இத்தகைய பணியினை வேறு எந்த இறைவாக்கினரும் செய்யவில்லை; திருமுழுக்கு யோவான் மட்டுமே செய்தார். இத்தகைய பணியினை அவர் மிகுந்த தாழ்ச்சியோடு செய்தார். அதனால் அவர் இயேசுவால் உயர்த்தப்படுகின்றார்.

கடவுளால் உயர்த்தத்பட்ட திருமுழுக்கு யோவான்

திருமுழுக்கு யோவான், கடவுள் தனக்குக் கொடுத்த பணியினை சிறப்பாகவும் அதே நேரத்தில் மிகுந்த தாழ்சியோடும் செய்ததால், ஆண்டவராகிய இயேசு அவரை, “மனிதராகப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்று வாழ்த்துகின்றார். இது திருமுழுக்கு யோவானுக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு என்று சொன்னால் அது மிகையில்லை. அதேநேரத்தில், விண்ணரசில் மிகச் சிறியவரும் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவராகின்றார். எவ்வாறெனில், திருமுழுக்கு யோவான் ஆண்டவர் இயேசு பாடுகள்படுவதற்கு முன்னமே கொல்லப்பட்டார்; அவர், கல்வாரி மலையில் ஆண்டவர் இயேசு இந்த மானிட சமூகத்திற்குத் தந்த மீட்பினைப் பெறாமலே போனார். அதனாலேயே அவர் விண்ணரசில் உள்ள மிகச் சிறியவரிலும் சிறியவர் ஆகின்றார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் திருமுழுக்கு யோவானின் முன்மாதிரிகை நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. ஆகையால், நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்வதற்கு முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகின்றார்’ (லூக் 1:52) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் திருமுழுக்கு யோவானைப் போன்று உள்ளத்தில் தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.