நம் மத்தியில் மறைசாட்சிகள் எப்போதும் இருப்பர் – திருத்தந்தை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி உரையில் பகிர்ந்துகொண்ட கருத்துக்களின் தொடர்ச்சியாக, இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டார்.

“இந்த திருவருகைக் காலத்தில், நம்மை காக்க வரும் கிறிஸ்துவில் நம் நம்பிக்கையைப் புதுப்பிக்கவும், மறைபரப்பும் சீடர்களாக விளங்கும்படி நமக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பில் உறுதியாய் இருக்கவும், ஆண்டவரை வேண்டுவோமாக” என்ற சொற்கள் திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

தன் மறைக்கல்வி உரையில், புனித பவுல் அடிகளார் அனுபவித்த கொடுமைகளைப்பற்றி கூறிய திருத்தந்தை, இன்றைய உலகில், தங்கள் மத நம்பிக்கைக்காக துன்புறும் கிறிஸ்தவர்களை மையப்படுத்தி, இரண்டாவது டுவிட்டர் செய்தியை பதிவு செய்திருந்தார்.

“இன்றைய உலகில் பல கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்காக துன்பங்களைத் தாங்கி, உயிரையும் அளிக்கின்றனர். கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும், கிறிஸ்தவ சமுதாயத்திற்கும் உயிர் மூச்சாக இருப்பது மறைசாட்சிய மரணம். நம் மத்தியில் மறைசாட்சிகள் எப்போதும் இருப்பர்: நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோம் என்பதற்கு இதுவே அடையாளம்” என்ற சொற்களை, @pontifex என்ற தன் டுவிட்டர் முகவரியில் திருத்தந்தை வெளியிட்டார்.

மேலும், லொரேத்தோ திருத்தல அன்னை மரியாவின் திருநாள், டிசம்பர் 10, இச்செவ்வாயன்று, முதன்முறையாக, கத்தோலிக்க உலகெங்கும் சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 10ம் தேதி, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டிருந்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட ஓர் ஆணையின்படி, இதுவரை, டிசம்பர் 10ம் தேதி, லொரேத்தோ திருத்தலத்தில் சிறப்பிக்கப்பட்டு வந்த அன்னை மரியாவின் திருநாளை, திருஅவை முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருநாளாக அறிவித்தார்.

டிசம்பர் 10 மனித உரிமைகள் உலக நாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி தன் முதல் டுவிட்டர் செய்தியை பதிவு செய்த திருத்தந்தை, தன் 2வது டுவிட்டர் செய்தியில், லொரேத்தோ திருத்தலம் இவ்வாண்டு கொண்டாடும் யூபிலியை மையப்படுத்தி தன் எண்ணத்தைப் பதிவு செய்தார்.

“ஒருவரையொருவர் ஏற்றல், மன்னித்தல் என்ற பண்புகளின் அடிப்படையில் உருவாகும் அமைதி, மற்றும், உடன்பிறந்த உணர்வு நிறைந்த பாதையில் நாம் நடப்பதற்கு, லொரேத்தோ அன்னை மரியா நமக்கு உதவி செய்வாராக; அவர், குடும்பங்களுக்கு வாழ்வின் ஆசீரையும், தேவையில் இருப்போருக்கு உதவியையும், ஆறுதலையும் கொணர்வாராக” என்ற சொற்கள், டிசம்பர் 10 திருத்தந்தை வெளியிட்ட இரண்டாவது செய்தியில் இடம்பெற்றன.

Comments are closed.