கிறிஸ்துவுடன் நெருங்கிய உறவில் கிட்டும் உறுதியான விசுவாசம்
ஒவ்வொரு குருத்துவ பயிற்சி இல்லமும் செபம், கல்வி, மற்றும், ஒன்றிணைந்த வாழ்வின் இல்லமாகச் செயல்படுகிறது என, இத்திங்களன்று இத்தாலியின் பொலோஞ்ஞா நகரிலிருந்து தன்னை சந்திக்க வந்திருந்த குருத்துவ பயிற்சி மாணவர்களிடம் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்தாலியின் Flaminia பகுதியைச் சேர்ந்தோருக்கென நிறுவப்பட்டுள்ள குருத்துவ பயிற்சி இல்லம், தன் நூறாம் ஆண்டை கொண்டாடுவதையொட்டி, அங்கிருந்து வந்திருந்த மாணவர்கள், மற்றும், அருள்பணியாளர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை, மக்களிடையே நல்லாயனின் பிரதிநிதியாகச் செயல்படும் அருள்பணியாளர்களின் கொடை மற்றும் அர்ப்பணத்தை, ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
நிசசயமற்ற ஒரு நிலையிலும், மதம் குறித்த அக்கறையின்றியும் வாழும் ஒரு சமுதாயம், அருள்பணியாளரில் உறுதியான விசுவாசத்தைக்கண்டு கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உறுதியான விசுவாசம், கிறிஸ்துவுடன் கொள்ளும் நெருங்கிய உறவிலேயே கிட்டுகிறது என்று கூறினார்.
இயேசுவுடன் நெருக்கமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதால், அருள்பணியாளர் பயிற்சி இல்லங்களின் அர்ப்பணம் மிக இன்றியமையாதது என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை.
Comments are closed.