டிசம்பர் 10 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்.

சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா?

அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்.”

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை.

“வழிதவறியவர்களைத் தேடிச் செல்லும் இயேசு!”

இளைஞர் ஒருவர் இருந்தார். அவருக்குத் ‘தான் சாகுமுன் மானிட சமூகத்திற்கு நல்லது ஏதாவது செய்யவேண்டும்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே அவர் எல்லாவற்றையும் துறந்து, பாலைவனத்திற்குச் சென்றார். அங்கு ஒரு நீரூற்று இருந்தது. அதற்கு ஒரு மைல் தள்ளி ஒரு குடிசை அமைத்து, அதில் இருந்துகொண்டு இறைவேண்டலிலும் ஒறுத்தல் முயற்சிகளிலும் தன்னுடைய நாள்களைச் செலவழித்து வந்தார்.

அவர் ஒவ்வொருநாளும் தண்ணீர் எடுப்பதற்காக குடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, நீரூற்றிக்குச் செல்வது வழக்கம். அப்படி அவர் குடத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நீரூற்றுக்குச் சென்று வருகின்றபோது மணலில் நடந்துவருவது மிகவும் சிரமாக இருக்கும். இருந்தாலும் அவர் அந்தச் சிரமத்தையெல்லாம் பாவிகள் மனம்திரும்புவதற்காக ஒப்புக்கொடுத்து, மன்றாடிவந்தார். நாள்கள் வேகமாகச் சென்றன; ஆனால், அவர் நீரூற்றிலிருந்து தண்ணீர் மொண்டு வருகின்றபோது பாவிகள் மனம்மாறுவதற்காக மன்றாடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.

இப்பொழுது அவருக்கு வயது எழுபதைத் தாண்டியிருந்தது. அதனால் அவரால் முன்புபோல் ஒரு மைல் தொலைவிலிருக்கும் நீரூற்றிலிருந்து தண்ணீர் மொண்டுவர முடியவில்லை. எனவே, அவர் நீரூற்றுக்குப் பக்கத்தில் குடிசையை அமைத்தால், தண்ணீர் மொண்டுவருவதற்கு மிகவும் வசதியாக இருக்கும் என்று சிந்திக்கத் தொடங்கினார். இப்படி அவர் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, ‘நாளைக்கே நீரூற்றருகில் குடிசையை அமைத்துவிடுவதற்கு இன்னும் நல்லது’ என்ற இன்னொரு சிந்தனையும் வந்தது. அதை எப்படிச் செயல்படுத்தலாம் என்று யோசித்துக்கொண்டு தண்ணீர் மொண்டுகொண்டு, குடிசைக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்பொழுது பின்னாலிருந்து யாரோ ஒருவர், ‘ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து’ என்று எண்ணுகின்ற சத்தம் அவருக்குக் கேட்டது. அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன அவர், பின்னால் இருப்பது யாரென்று திரும்பிப் பார்த்தார். அங்கு வானதூதர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரிடம் அந்த இளைஞர் (இப்பொழுது பெரியவர்), “என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு வானதூதர் அவரிடம், “நாளைய நாளில் உன்னுடைய குடிசையை நீரூற்றுக்கு அருகில் அமைக்கப்போகிறாய். இதனால் இனிமேல் நீ தண்ணீர் மொண்டுகொண்டு ஒரு மைல் தூரம் நடப்பதற்கு வாய்ப்பிருக்காது… பாவிகள் மனம்திரும்புவதற்காக மன்றாடுவதற்கும் வாய்ப்பிருக்காது… இன்றுதான் நீ பாவிகள் மனம்மாறுவதற்காக மன்றாடுகின்ற கடைசி நாள். அதனால்தான் நான் இப்படி ஒன்று, இரண்டு… என்று எண்ணிக்கொண்டிருக்கின்றேன்” என்றார்.

இதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்த பெரியவர், “என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். குடிசையை நீரூற்றுக்கு அருகில் அமைக்க்கும் என்னுடைய எண்ணத்தை இப்பொழுதே கைவிடுகின்றேன்… முன்புபோல் நான் நீரூற்றிலிருந்து ஒரு மைல் தூரம் இருக்கும் என் குடிசைக்குச் தண்ணீர் மொண்டுசெல்லும்போது பாவிகள் மனம்மாறுவதற்காக இறைவனிடம் மன்றாடுவேன்” என்று உறுதிகூறினார்.

பாவிகள் மனம்மாறி, ஆண்டவரிடம் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய வாழ்வையே அர்ப்பணித்த அந்தப் பெரியவர் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, பாவிகள் மனம்மாறவேண்டும் என்பதற்காக அவர்களைத் தேடிச் செல்பவராக தன்னை அடையாளப்படுத்துகின்றார். அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசுவுக்கு ஒவ்வொருவரும் முக்கியமானவரே

நற்செய்தியில் இயேசு காணாமல் போன ஆடு உவமையைக் குறித்துப் பேசுகின்றார். இயேசு சொல்லும் இந்த உவமையில் வருகின்ற ஆயர், வழிதவறிப் போன ஆட்டினைக் கண்டுபிடிப்பதற்காகத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டுச் செல்கின்றார். இந்த உவமையின் வழியாக இயேசு சொல்ல வருகின்ற செய்தி, இறைவனுக்கு ஒவ்வொருவரும் முக்கியமானவர் என்பதாகும்.

ஒருவர் பாவி என்பதற்காக அவர் வேண்டாம் என்று இறைவன் விட்டுவிடுவதில்லை. அவரும் முக்கியம், அவரும் தெரிதவறிப் போய்விடக்கூடாது என்பதற்காக இறைவன் அவரைத் தேடிச் செல்கின்றார். இயேசு தன்னுடைய பணிவாழ்வு முழுவதும் பாவிகளைத் தேடிச் செல்பவராகவும் அவர்களை மீட்பவராகவும் இருந்தார் (லூக் 19:10). அப்படியிருக்கும்பொழுது, பாவிகளாகிய நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, அவரைத் தஞ்சமடைவதுதான் சாலச் சிறந்தது. இப்படி நாம் நம்முடைய குற்றங்களை உணர்ந்து, ஆண்டவரிடம் திரும்பி வருகின்ற, ஆண்டவருக்கு அதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை (லூக் 15: 7)

ஆகையால், பாவிகளைத் தேடி, அரவணைக்கும் நல்லாயனாம் இயேசுவிடம் திரும்பி வந்து, அவர் தருகின்ற ஆறுதலையும் அரவணைப்பையும் பெற்றுக்கொள்வோம்.

Comments are closed.