கடவுள் இரக்கமுள்ளவர், எப்படியும் கடைசி நேரத்தில் அவரது மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற “மிதப்பு” எண்ணம் கொண்டவர்கள்தான் இன்று ஏராளம் பேர் இருக்கிறார்கள். ஆனால் நரகத்திற்குத் தப்பித்து மோட்சம் செல்வோரின் எண்ணிக்கை பற்றி
அர்ச்சியசிஷ்டவர்கள் நமக்குக் கூறும் உண்மைகள் நம்மை அச்சத்தால் மிரள வைப்பவையாக இருக்கின்றன.
பிரான்சிஸ்கன் சபைத் துறவியாகிய போர்ட் மவுரீஸின் அர்ச். லியோனார்ட் கூறுவதாவது
“எங்கள் சகோதரர்களில் தமது போதகங்களுக்காகவும், பரிசுத்ததனத்திற்காகவும் புகழ் பெற்ற
ஒரு துறவி ஒரு முறை ஜெர்மனியில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இந்தப் பிரசங்கத்தில்
அவர் எந்த அளவுக்கு சரீர அசுத்தப் பாவங்களின் அருவருப்பான தன்மையைத் தத்ரூபமாக
விவரித்துக் காட்டினார் என்றால், ஒரு பெண்மணி மிகுந்த துயரத்திற்கு உள்ளாகி, எல்லோர் முன்பாகவும் இறந்து விழுந்தாள். அதன்பின் மீண்டும் உயிர் பெற்ற அவள், “நான் கடவுள்
நீதியாசனத்திற்கு முன்பாக நின்ற அதே சமயத்தில் உலகின் எல்லாப் பாகங்களிலுமிருந்து அறுபதாயிரம் மனிதர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்; அவர்களில் மூவர் மட்டுமே உத்தரிக்கிற
ஸ்தலத்திற்குத் தீர்ப்பிடப்பட்டு மீட்படைந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் நரகத்திற்குத்
தீர்ப்பிடப்பட்டார்கள்!’ என்று அறிவித்து அனைவரையும் நடுங்க வைத்தாள்.”
திருச்சபைத் தந்தையும், பரிசுத்த வேதபாரகரும் அர்ச். க்றீசோஸ்தோம் அருளப்பர் ஒரு பட்டணத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது, கூடியிருந்த மக்களை நோக்கி, “நீங்கள்
என்ன நினைக்கிறீர்கள்? இவ்வூரில் எத்தனை பேர் மீட்படைவார்கள்? நான் சொல்லப் போவது மிக பயங்கரமானது, ஆனாலும் இதை நான் உங்களிடமிருந்து மறைக்க விரும்பவில்லை.
ஆயிரக்கணக்கான மக்களைக் கொண்டுள்ள இந்தப் பட்டணத்தில் நூறு பேர் கூட இரட்சிக்கப்பட மாட்டீர்கள். நான் கூறும் எண்ணிக்கை கூட சற்று அதிகம்தான்” என்று கூறி அவர்களை மிரள வைத்தார்!
அர்ச். வியான்னி அருளப்பர், “நாம் அனைவரும் இரட்சிக்கப்படுவோமா? நாம் மோட்சத்துக்குப் போவோமா? ஐயோ, என் பிள்ளைகளே, நமக்கு அது பற்றி எதுவும் தெரியாது! ஆயினும்
இன்றைய நாட்களில் இழக்கப்படுகிற பெருந்திரளான ஆன்மாக்களைக் கண்டு நான் நடுங்குகிறேன், இதோ, குளிர்காலம் நெருங்கி வருகையில் மரங்களிலிருந்து விழும் இலைகளைப் போல அவர்கள் நரகத்தில் விழுந்து கொண்டிருக்கிறார்கள்” என்று கண்ணீரோடு கூறினார்.
அர்ச். வின்சென்ட் ஃபொர் விவரித்துள்ள மற்றொரு சம்பவம்: லயோன்ஸ் துணை ஆயர் ஒருவர் தமது பதவியைத் துறந்து, வனாந்தரமான ஓரிடத்திற்குச் சென்று தவ வாழ்க்கையில் ஈடுபட்டார். அர்ச். பெர்நார்து இறந்த அதே நாளில் இவரும் இறந்தார். தமது மரணத்திற்குப்
பிறகு, அவர் தமது ஆயருக்குக் காணப்பட்டு, “ஆயரவர்களே, நான் மரித்த அதே நேரத்தில், உலகில்
முப்பத்து மூவாயிரம் பேர் இறந்தார்கள். இவர்களில் பெர்நார்தும், நானும் மட்டுமே எந்தத் தாமதமுமின்றி நேராக மோட்சத்திற்குச் சென்றோம். மூவர் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குச் சென்றார்கள். மற்றவர்கள் அனைவரும் நரகத்தில் விழுந்தார்கள் ” என்றார்.”
“தெரிந்து கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக மிகச் சிறியது. அது எவ்வளவு சிறியது என்று அறிந்தால், நாம் துக்கத்தால் மயங்கி விடுவோம். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்
எண்ணிக்கை எவ்வளவு சிறியது என்றால், கடவுள் அவர்களை ஒன்றுகூட்டுவதாக இருந்தால்,
பழைய ஏற்பாட்டில் தாம் செய்தது போல, தீர்க்கதரிசியின் வாய்மொழியாக, “ஒருவர் பின் ஒருவராக இந்த மாகாணத்திலிருந்து ஒருவரும், அந்த இராச்சியத்தில் இருந்து ஒருவரும்,
ஒன்றாகக் கூடுங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொல்வார்” என்கிறார் அர்ச். லூயிஸ் மோன்போர்ட்.
தொலைக்காட்சி, வலைத்தளம்( சீரியல் நாடகங்கள்) என்ற பயங்கர பாவ சோதனைகள் இல்லாதிருந்த காலத்தின்
நிலை அது!
இன்று பாவத்தில் தாங்கள் பிடிவாதமாக நிலைத்திருந்தும், முன் ஒருபோதும் இருந்திராத மிகக் கேடான விஞ்ஞான, தொழில்நுட்ப, பொறியியல் வளர்ச்சியால் விளைகிற பெரும் சோதனைகளுக்கு மத்தியில் எவ்விதக் கவலையுமின்றி வாழும் மனிதர்கள், திவ்ய திருப்பலி, குடும்ப ஜெபமாலை, தேவமாதாவின் உடனிருப்பு, எதுவும் இல்லாமல் தாங்கள் எளிதாக மோட்சத்தை அடைய முடியும் என்று எப்படி நம்புகிறார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்!
Comments are closed.