டிசம்பர் 3 : செவ்வாய்க்கிழமை. நற்செய்தி வாசகம்
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.
+மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20
அக்காலத்தில் இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.
நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.
ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும்அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
மறையுரைச் சிந்தனை.
“இனி எல்லாம் சுகமே!”
புனித சவேரியார்.
தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் ‘பெரிய தகப்பன்’ என்று அன்போடு அறியப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளை நாம் இங்கு கொண்டாடுகிறோம். ஏப்ரல் 7, 1506ல் ஸ்பெயின் நாட்டில் பிறந்து, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது, புனித இஞ்ஞாசியார் மேற்கோள் காட்டிய நற்செய்தி வார்த்தைகளை – ‘ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவர் தன் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன? – கேட்டு, மனம் மாறி, தன் பணியைத் துறந்துவிட்டு, இயேசு சபையின் அருள்பணியாளராக மாறி, ஆப்பிரிக்கா, ஆசியா கடற்கரைகளில் நற்செய்திப் பணி செய்து டிசம்பர் 3, 1552 அன்று இறந்தார்.
ஏறக்குறைய 38000 கடல் மைல்கள் பயணம் செய்துள்ளார் இவர். புதிய மொழி, புதிய பண்பாடு, புதிய கலாச்சாரம், புதிய உணவுப்பழக்கம் என அனைத்தோடும் தன்னை ஒன்றிணைத்துக்கொண்டார். அதற்கு ஒரே காரணம் இவர் நம்பிய இயேசு கிறிஸ்து ஒருவரே.
இவருடைய நல்லுடல் இன்றும் அழியாமல் கோவாவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நற்செய்தி அறிவிக்க தான் கொண்டுள்ள பொறுப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்றார்.
‘எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு … எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்’ (காண். 1 கொரி 9:16-19,22-23)
பவுலின் வார்த்தைகளில் இரண்டு விடயங்களில் முக்கிமாகத் தெரிகின்றன:
அ. நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மனநிறைவு
வழக்கமாக நாம் நன்றாகச் சாப்பிட்டால், நல்ல நண்பர் ஒருவரைப் பார்த்தால், நல்ல திரைப்படம் ஒன்று பார்த்தால், நல்ல புத்தகம் ஒன்று படித்தால் நம் மனம் ஒருவித நிறைவு கொள்கிறது. ஆனால், பவுலுக்கு இவை எல்லாம் நிறைவு தருவதாகத் தெரிவதில்லை. ‘நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மனநிறைவு’ – கடலில் புயலில் பயணம் செய்து, சாலைகளில் நடந்து, பல துன்பங்களை எதிர்கொண்டு, பசியோடும், தாகத்தோடும் இருந்து கொண்டு, நற்செய்தி அறிவித்த பவுலுக்கு சோர்வு வரவில்லை. ஆனால், மனநிறைவு வருகிறது. எப்படி? நற்செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அது அதைக் கேட்பவரின் மனத்தில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதை நினைக்கும்போதுதான் பவுல் மனநிறைவு கொள்கிறார். ஒரு தாய் போல. தான் பசியாக இருந்தாலும் தன் குழந்தைக்கு உணவு கொடுத்தவுடன், அதன் முகத்தில் தெரியும் புன்முறுவல் தாய்க்கு நிறைவு தருகிறது. தான் சோர்வாக இருந்தாலும் தன் வகுப்பில் இருக்கும் மாணவ, மாணவியர் அறிவு பெருகிறார்கள் என்ற எண்ணம் ஆசிரியருக்கு நிறைவு தருகிறது. இவ்வாறாக, தன் குறைவிலும் அடுத்தவரின் நிறைவு கண்டு நிறைவு அடைகிறார் பவுல்.
ஆ. எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்
‘நான் என் வாழ்வில் இப்படித்தான் இருப்பேன்’ என்று தனக்கென கொள்கை வரைவுகளையும், வரையறைகளையும் வைத்தக்கொண்டு வாழ்ந்து வலம் வந்த புனித பவுல், ஒரு கட்டத்தில், கிறிஸ்துவை அறிவிக்க அவை தடையாக இருக்கக் கண்டு, ‘எல்லாருக்கும் எல்லாம் ஆக’ துணிகின்றார்.
புனித சவேரியாரிலும் நாம் மேற்காணும் இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கை கொண்டோர் செய்யும் அரும் அடையாளங்களைப் பட்டியலிடுகிறார் இயேசு:
‘அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்.
புதிய மொழிகளைப் பேசுவர்.
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்.
கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது.
அவர்கள் உடல்நலமற்றோர் மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்.’ (காண். மாற் 16:15-20)
புதிய இடத்தில் மினரல் வாட்டர் குடிச்சாலே நான்கு நாள்களுக்கு தொண்டை கட்டிக்கொள்கிறது. இயேசு சொல்லும் இந்த அரும் அடையாளங்கள் புனித சவேரியார் வாழ்வில் நடந்தன என்று சொல்லலாம்.
‘எல்லாவற்றிலும் மேன்மை’ – இது ஒன்றே சவேரியாரின் விருதுவாக்காக இருந்தது.
Comments are closed.