இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்
“படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இயேசுவின் இந்த வார்த்தைகளை வாழ்ந்து காட்டிய புனித சவேரியாரிடமிருந்து கீழ்படிதல் என்னும் நற்பண்பைக் கற்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில் “நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு! இதை நானாக விரும்பிச் செய்தால் எனக்குக் கைம்மாறு உண்டு.” என புனித பவுல் கூறுகிறார்.
மறைபரப்புப் பணிக்காக பல்லாயிரம் மைல்கள் பயணித்த தூய சவேரியார் புனித இஞ்ஞாசியாருக்கு எழுதிய மடலின் தலைப்பு “நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு!” என்பதாகும். அந்த மடலில்
தான் அனுபவிக்கும் வெயிலோ, மழையோ, நோயோ, வசதிக் குறைவோ பாதுகாப்பின்மையோ எதுவும் குறிப்பிடாமல் நற்செய்திப் பணியை மட்டும் ஆவலோடு விவரித்த புனித சவேரியாரிடமிருந்து நாம், ‘இறை சித்தத்தை ஏற்றுக் கொள்ளல்’ என்ற உயரிய பண்பினைக் கற்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
“ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் வரும் பயனென்ன?” (மத் 16:26) என்ற இறைவார்த்தைகள், புனித இஞ்ஞாசியார் வழியாக புனித சவேரியாருக்கு அவரது வாழ்வில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. அது போல அந்த ஆழமான இறைவார்த்தைகள் தற்போதுள்ள இளைஞர்கள் வாழ்விலும் ஒரு நல்ல தாக்கத்தை உண்டாக்கிட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்க தகுதிபெற நம்மையே நாம், முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.