உலகில் ஒப்புரவைக் கொணர்வதே கிறிஸ்தவ மறைப்பணி

பிரிவினைகள் மற்றும், மோதல்களால் துன்புற்றுவரும் இன்றைய உலகிற்கு கடவுளின் ஒப்புரவைக் கொண்டுவரும்வண்ணம், கிறிஸ்தவ சபைகள், தங்களுக்கிடையே ஒன்றிப்பு மற்றும், ஒப்புரவு நிலவ உழைக்குமாறு, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

WCC எனப்படும் உலக கிறிஸ்தவ சபைகள் மன்றம், ஜெர்மனியின் Karlsruhe நகரில் ஆகஸ்ட் 31 இப்புதனன்று தொடங்கியுள்ள 11வது மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் அனைத்து மக்களுக்கும் அழைப்புவிடுத்துள்ள ஒன்றிப்பின் காணக்கூடிய அடையாளமாக கிறிஸ்தவ சபைகள் இருந்துகொண்டு, உலகிற்கு ஒப்புரவை வழங்கவேண்டியது கிறிஸ்தவர்களாகிய நம் அனைவரின் மறைப்பணியாகும் என்பதை திருத்தந்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்,

செப்டம்பர் 08, வருகிற வியாழன் நரை நடைபெறும் WCC மன்றத்தின் 11வது மாநாட்டில், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் கர்ட் கோக் அவர்கள் தலைமையில் திருஅவையின் பிரதிநிதிகள் குழு ஒன்று பங்குபெற்று வருகிறது. திருத்தந்தையின் இச்செய்தியை, கர்தினால் கோக் அவர்கள் இம்மாநாட்டில் வாசித்தார்.

WCC மன்றத்தின் மாநாடுகளில் பார்வையாளர்களாகப் பங்குபெறுவதற்கு, கத்தோலிக்கத் திருஅவை, 1901ஆம் ஆண்டிலிருந்து தன் பிரதிநிதிகளை அனுப்பி வருவதையும் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இம்மாநாட்டில் கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகள் குழு பங்கேற்று வருவது, WCC மன்றத்திற்கும், கத்தோலிக்கச் திருஅவைக்கும் இடையே நிலவும் உறுதியான உறவின் அடையாளமாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

“கிறிஸ்துவின் அன்பு, இவ்வுலகை ஒப்புரவு மற்றும், ஒன்றிப்புக்கு இட்டுச்செல்கிறது” என்ற தலைப்பில் இம்மாநாடு நடைபெறுவதை தன் செய்தியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, இத்தலைப்பு, கிறிஸ்தவர்களுக்குள் ஒன்றிப்பு இன்னும் கூடுதலாக ஏற்படவும், உலகெங்கும் ஒப்புரவை ஊக்குவிப்பதற்கு கிறிஸ்தவர்கள் பணியாற்றவும் அழைப்புவிடுக்கின்றது என்று கூறியுள்ளார்.

Comments are closed.