கடவுளுக்கும் மக்களுக்கும் பணி செய்வதே இடுக்கமான வாயில்

கடவுளுக்கும் மக்களுக்கும் பணிபுரிவதன் வழியாக இடுக்கமான வாயில் வழியே வருந்தி நுழையுங்கள் என்றும், கிறிஸ்துவின் நற்செய்தி விழுமியங்களின்படி வாழ்க்கையை சரிசெய்து கொண்டு மீட்பு பெற முயலுங்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், ஆகஸ்ட்  21 இஞ்ஞாயிறன்று அளித்த மூவேளை செப உரையில் கூறினார்.

இடுக்கமான வாயில் வழியாக வருந்தி நுழைய முயலுங்கள், ஏனெனில் பலர் உள்ளே  செல்ல முயன்றும் இயலாமற்போகும் என்ற திருச்சொற்களைக் கொண்ட இஞ்ஞாயிறு லூக்கா நற்செய்திப் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு அளித்த மூவேளை செப உரையின்போது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கடவுளின் வாழ்க்கை, மற்றும் அவரது மீட்பிற்குள் நுழைய நாம் இயேசு வழியாகச் செல்லவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

கடவுளின் வாழ்வில் நுழைதல்

இயேசுவின் காலத்தில், இரவு நேரத்தில் நகரில் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட ஒரே ஒரு குறுகிய கதவு மட்டுமே திறந்திருக்கும், அதுவே இடுக்கமான வாயில் என்று விளக்கிய திருத்தந்தை, கிறிஸ்துவையும் அவரது வார்த்தைகளையும் ஏற்றுக்கொண்டு கிறிஸ்துவின் வழியாக கடவுளின் வாழ்வுக்குள் நாம் நுழையும்பொருட்டு இடுக்கமான வாயில் வழியே செல்லலாம் என்றும் எடுத்துரைத்தார்.

நானே வாயில், என் வழியாய் செல்பவர் மீட்படைவர் என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கிணங்க அவரையும் அவரது வார்த்தைகளையும் நம் உள்ளத்தில் வரவேற்க வேண்டும் என்றும், கிறிஸ்துவை முன்மாதிரிகையாகவும் அடித்தளமாகவும் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துவின் மதிப்பீடுகளால் நம்மை சரிசெய்து கொள்தல் வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை..

அன்றாட அன்புச் செயல்கள்

அன்றாட நிகழ்வுகள் வழி அன்பின் செயல்களை மக்களுக்குச் செய்வதன் வழியாக இடுக்கமான வாயில் வழியே நுழையலாம் என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ்  அவர்கள், பல நடைமுறை எடுத்துக்காட்டுகளுடன் அதனை விளக்கினார்.

அன்பு மற்றும், தியாகம் கொண்டு தங்கள்  பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்,  ஏழைகள் மற்றும் வயதில் மூத்தோர்க்கு பணியாற்றுபவர்கள், தடைகள் பலவற்றை எதிர்கொண்டு அர்ப்பண உணர்வுடன் செயலாற்றுபவர்கள், நம்பிக்கையின்பொருட்டு துன்புறுபவர்கள், தொடர்ந்து செபிப்பவர்கள், அனைவரையும் அன்புகூர்பவர்கள், தீமைக்குப் பதிலாக நன்மைசெய்பவர்கள், மன்னிக்கும் மனம் கொண்டவர்கள், புதிதாக அனைத்தையும் தொடங்கும் துணிச்சல் கொண்டவர்கள் என அனைவரும் இடுக்கமான வாயில் வழியே நுழையத் தகுதியானவர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

தங்களது சுயநலத்திற்காக அகன்ற வாயில்களைத் தேர்ந்தெடுக்கும் அனைவரும் தீங்கு செய்வோரே என்றும், நாம் நமது என்று நம்முடைய சொந்த வாழ்க்கையில் எப்படி இருக்கின்றோம், சொந்த நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கின்றோமா, இடுக்கமான வாயில் வழியே நுழைய முயற்சி செய்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறுதியாக, சிலுவை வரை இயேசுவைப் பின்தொடர்ந்த அன்னை மரியாவிடம், நமது வாழ்க்கையை கிறிஸ்துவின் அளவுகளால் சரிசெய்து கொள்ளும்பொருட்டு, இடுக்கமான வாயில் வழியே நிலைவாழ்விற்குள் செல்ல உதவி வேண்டுவோம் என்று கூறி தன்னுடைய மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

Comments are closed.