வாசக_மறையுரை (ஆகஸ்ட் 24)
பொதுக் காலத்தின் இருபத்து ஒன்றாம் வாரம்
புதன்கிழமை
I 2 தெசலோனிக்கர் 3: 6-10, 16-18
II மத்தேயு 23: 27-32
எங்களைப் போல் ஒழுகுங்கள்
சோம்பேறியின் இதயம் சாத்தானின் கூடாரம்:
வீட்டில் இருந்தவர்கள் ஏதாவதொரு வேலை செய்யச் சொன்னால், “எனக்கு உடம்பு சரியில்லை; என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது” என்ற அந்த இளைஞன் சொல்லி வந்தான். பல நாள்களாக இதைப் பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவனுடைய பெற்றோர் ஒருநாள் அவனிடம், “உனக்கு என்ன பிரச்சனை என்று மருத்துவரைப் போய்ப் பார்” என்று சொல்லி, அவனுடைய கையில் சிறிது பணம் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
இளைஞன் பக்கத்துத் தெருவில் இருந்த ஒரு மருத்துவரைப் போய்ப் பார்த்தான். அவரிடம் அவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “எனக்கு இருக்கும் பிரச்சனையை குழப்பமான வார்த்தைகளில் சொல்லாமல், மிகவும் எளிய வார்த்தைகளில் சொல்லுங்கள்” என்று சொன்னான். மருத்துவரும் அவன் கேட்டுக்கொண்டதற்கேற்ப அவனுடைய உடலைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “உன்னுடைய உடலில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. உன்னால் எந்தவொரு வேலையும் செய்ய முடியாமல் போவதற்கு உன்னுடைய சோம்பேறித்தனம்தான் காரணம்” என்று நேரடியாகவே சொல்லிவிட்டார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போன அந்த இளைஞன், “நான் ஒரு சோம்பேறி என்று என்னுடைய பெற்றோரிடம் சொல்ல முடியாதல்லவா! அதனால் நீங்கள் மருத்துவ ரீதியாக சோம்பேறித்தனத்திற்கு ஏதாவது வார்த்தை இருந்தால், சொல்லுங்கள். அதை நான் என்னுடைய பெற்றோரிடம் சொல்லிவிடுகிறேன்” என்றான். இதற்கு மருத்துவரால் பதில் எதுவும் பேச முடியவில்லை.
ஆம், ஒருசிலர் இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்று தங்களது சோம்பேறித்தனத்தை என்னென்ன வார்த்தைகளிலெல்லாமோ பூசி மொழுகுவார்கள். இன்று நாம் வாசிக்கக் கேட்ட இறைவார்த்தை சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு, ஆண்டவர் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியான வாழ்க்கையின் படி வாழ நமக்கு அழைப்புத் தருகின்றது அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு தன் சீடர்களைப் பணித்தளத்திற்கு அனுப்பியபோது, “வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே” (மத் 10:10) என்பார். இதன் பொருள், நற்செய்தியை அறிவிக்கின்றவர்களுக்கு, மக்கள் உணவிட வேண்டும் என்பதாகும். அந்த அடிப்படையில் நற்செய்தியை அறிவித்து வந்த பவுலுக்கு அவர் எந்த மக்கள் நடுவில் நற்செய்தி அறிவித்தாரோ, அந்த மக்கள் அவருக்கு உணவளிக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை. ஆனாலும் அவர் யாருடைய தயவையும் எதிர்பார்த்திராமல், தாமாகவே உழைத்து, உணவு உண்டார். இவ்வாறு அவர் தெசலோனிக்க மக்களுக்குத் தம்மையே முன்மாதிரியாகக் காட்டி, என்னை போல் ஒழுகுங்கள் என்கின்றார்.
பவுல் இவ்வாறு சொன்னதற்குக் காரணம், தெசலோனிக்கத் திருஅவையில் இருந்த ஒருசிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல் சோம்பித் திரிந்து, பிறருடைய வேலையையும் கெடுத்து வந்தார்கள். இவர்கள் உண்பதற்குத் தகுதியவற்றவ்ர்கள் என்கிறார் பவுல்.
முதல் வாசகத்தில் பவுல் சோம்பேறிகளாய்ச் சுற்றித் திரிந்தவர்களைக் கடிந்து கொள்கின்றார் என்றால், நற்செய்தியில் இயேசு வெளிவேடத்தனமாக வாழ்ந்து வந்த பரிசேயர்களையும் மறைநூல் அறிஞர்களையும் கடிந்து கொள்கின்றார். மக்கள் பார்வைக்கு நல்லவர்களைப் போன்று இருந்த பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் உள்ளுக்குள் தீமையின் மொத்த வடிவாய் இருந்தார்கள். அதனால்தான் அவர்களை வெள்ளையடித்த கல்லறைகள் என்று கடுமையாகச் சாடுகின்றார் இயேசு.
சோம்பேறித்தனமாக இருக்கட்டும், வெளிவேடத்தனமாக இருக்கட்டும். இரண்டும் ஒரு மனிதரின் வாழ்வைச் சிதைத்து விடும். எனவே, இவற்றை நம்மிடமிருந்து அகற்றிவிட்டு, இயேசுவின், பவுலின் முன்மாதிரியான வாழ்க்கையைப் பின்பற்றி நடப்போம்.
சிந்தனைக்கு:
உழைப்பு ஒருவரை உயர்த்தும்; சோம்பேறித்தனம் ஒருவரைப் பாதாளம் வரை தாழ்த்தும்
வெளிவேடக்காரர்களால் ஒருநாளும் உண்மையாய் இருக்க முடியாது.
தலைவர் என்பவருக்கு இன்னொரு பெயர் வழிகாட்டி,
இறைவாக்கு:
‘சோம்பேறியின் அவா அவரைக் கொல்லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன’ (நீமொ 21:25) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் சோம்பேறித்தனத்தைத் தவிர்த்துவிட்டு, இயேசு காட்டும் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.