இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய ஞாயிறு திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 69:13-ல், “ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
நமது விண்ணப்பங்கள், நமது வேண்டுதல்களுக்கு இறைவன் செவிமடுத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்பு கூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ ” என கூறப்பட்டுள்ளதை நாம் வாசித்தோம்.
ஆண்டவரின் அன்புக் கட்டளைகளை நாம் முழு மனதோடு கடைபிடிக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து
அடுத்திருப்பவரின் துன்பத்தைக் கண்டும் காணாமலும் கடந்து சென்ற அந்த லேவியராக, அந்த குருவாக இல்லாமல் அடுத்திருப்பவரின் துன்பத்திற்கு அருமருந்தாயிருந்த நல்ல சமாரியனாக நாம் வாழ இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
திருஅவையின் மறுமலர்ச்சிக்காக தற்போது பல்வேறு நிலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்தில் தூய ஆவியானவரின் தூண்டுதல் நன்கு செயல்பட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இறைவனுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியில் தங்களை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள், கன்னியர்கள் மற்றும் அருட்சகோதரர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.