ஜூன் 15 : நற்செய்தி வாசகம்

மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-6, 16-18
அக்காலத்தில்
இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “மக்கள் பார்க்க வேண்டுமென்று அவர்கள் முன் உங்கள் அறச் செயல்களைச் செய்யாதீர்கள். இதைக் குறித்து நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். இல்லையென்றால் உங்கள் விண்ணகத் தந்தையிடமிருந்து உங்களுக்குக் கைம்மாறு கிடைக்காது.
நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப்பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர் மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக்கூடங்களிலும் சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப் போல் இருக்க வேண்டாம். அவர்கள் தொழுகைக்கூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு மக்கள் பார்க்க வேண்டுமென இறைவேண்டல் செய்ய விரும்புகிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
ஆனால் நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது உங்கள் உள்ளறைக்குச் சென்று, கதவை அடைத்துக்கொண்டு, மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார்.
மேலும் நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளிவேடக்காரரைப் போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். தாங்கள் நோன்பு இருப்பதை மக்கள் பார்க்க வேண்டுமென்றே அவர்கள் தங்கள் முகங்களை விகாரப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்று விட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் நோன்பு இருக்கும்போது உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள், அப்பொழுது நீங்கள் நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாது; மாறாக, மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரியும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————————-
மத்தேயு 6: 1-6, 16-18
“வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்”
நிகழ்வு
உங்களுக்குப் ‘பூசணிக் காய்’ மனிதரைத் தெரியுமா? அவர் யாரென்று சொல்கின்றேன் கேளுங்கள்.
கொலரடோ என்ற இடத்தில் நிப்பன் டூஸ் என்றொரு விவசாயி வாழ்ந்து வந்தார். இவருக்கு ஒரு பெரிய தோட்டம் இருந்தது. இந்தத் தோட்டத்தில் இவர் பூசணிக்காய் விதைகளை நட்டுவைத்து, வளர்த்து வந்தார். மட்டுமல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் இலையுதிர் காலம் வருகின்றபொழுது, இவர் தன்னுடைய தோட்டத்திற்கு அருகாமையில் இருந்த பள்ளிக்கூடத்தில் படித்துவந்த ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தனது தோட்டத்திற்கு அழைத்து, அவர்களுக்கு ஆளுக்கொரு பூசணிக்காயைத் தந்தார்.
இப்படிப்பட்ட செயலை இவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்துவந்தார். இதில் நாம் கருத்தில்கொள்ள முக்கியமான உண்மை, நிப்பன் டூஸ் தான் செய்துவந்த இந்தச் செயலை எந்தவொரு பிரதிபலனும் பாராமல் செய்துவந்ததுதான். இதனால் இவருடைய வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் இவருடைய பெயரையே பள்ளிக்குச் சூட்டி, இவரைப் ‘பூசணிக்காய் மனிதர்’ என்று அன்போடு அழைத்து வந்தது.
மக்களால் பூசணிக்காய் மனிதர் என்று அன்போடு அழைக்கப்பட்ட நிப்பன் டூஸ் நமக்கு ஒரு முக்கியமான செய்தியை விட்டுச் சென்றிருக்கின்றார். அது என்னவெனில், எந்தவோர் அறச்செயலையும் அல்லது நன்மையையும் பிரதிபலன் பாராமல் செய்யவேண்டும் என்பதாகும். இதையே நாம் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், வலக்கை செய்வது, இடக்கைக்குத் தெரியாமல் செய்யவேண்டும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இத்தகைய செய்தியை எடுத்துச் சொல்கின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
விளம்பரம் தேடும் உலகம்
ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்கள் எதைச் செய்தாலும் ஆதாயம் இல்லாமல் செய்யமாட்டார்கள். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், இவர்கள் எந்தச் செயலைச் செய்தாலும், அதன்மூலம் தங்களுடைய பெருமையையும் புகழையும் மக்களுக்குப் பறைசாற்றவே நினைப்பார்கள். சமூக வலைத்தளங்களில் நாம் பார்த்திருப்போமே, ஒரு வாழைப்பழத்தை ஐந்து பேர் சேர்ந்துகொண்டு ஒருவருக்குக் கொடுப்பதை! இப்படிப்பட்டவர்கள் எல்லாரும் இந்தப் பட்டியலில்தான் வருவார்கள்.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு அறச் செயல்களைச் செய்கின்றபோது எப்படிச் செய்யவேண்டும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றார். மக்கள் பார்க்கவேண்டும்… புகழவேண்டும் என்று செய்யப்படும் அறச்செயல்கள் எல்லாம் உண்மையில் அறச் செயல்கள் அல்ல, அவை வெறும் தம்பட்டம்தான், அப்படிப்பட்ட அறச் செயல்களுக்கு கடவுளிடமிருந்து கைம்மாறு கிடைக்காது என்று இயேசு உறுதியாகச் சொல்கின்றார். ஆம், நாம் ஓர் அறச்செயலைச் செய்கின்றபொழுது அதன் நோக்கம் எப்படிப்பட்டதாக இருக்கின்றது என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். மனிதருடைய பாராட்டைப் பெறுவதற்காகத்தான் அறச்செயலைச் செய்கின்றோம் என்றால், அதற்கு இறைவனிடமிருந்து ஒருபோதும் கைம்மாறு கிடையாது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
அறச்செயல்களை ஆண்டவருடைய மாட்சிக்காகச் செய்வோம்
நாம் அறச்செயல் செய்கின்றபொழுது, எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்ன இயேசு, எப்படிச் செய்யவேண்டும் என்றும் சொல்கின்றார்.
நாம் அறச்செயல்களைச் செய்கின்றபொழுது, வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதவாறு இருக்கவேண்டும் என்று சொல்லும் இயேசு, நாம் கொடுக்கின்றோம் என்பதே தெரியாமல் கொடுக்கவேண்டும் என்பதை மிகவும் அழகாக எடுத்துக் கூறுகின்றார். நாம் பிறருக்குக் கொடுக்கின்றோம் என்பதே தெரியாமல் கொடுக்கின்றபொழுது, அது யாருக்கும் தெரியாமல் மறைவாய் இருக்கும். அப்படி மறைவாய் இருப்பதைக் காணும் ஆண்டவர் அதற்கேற்ற கைம்மாறு தருவார் என்பது உறுதி.
நாம் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறப் போகிறோமா அல்லது மனிதர்களிடமிருந்து கைம்மாறையும் பாராட்டையும் புகழையும் பெறப்போகிறோமா என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் கேள்வியாக இருக்கின்றது. மனிதர்கள் மாறக்கூடியவர்கள். அவர்கள் இப்பொழுது ஒரு பேச்சுப் பேசிவிட்டு, பின்னர் வேறொரு பேச்சுப் பேசுவார்கள். இப்பொழுது புகழ்பவர்கள் எப்பொழுதும் புகழ்ந்துகொண்டிருப்பார்கள் என்பதற்கு எந்தவோர் உறுதியும் இல்லை; ஆனால், ஆண்டவர் அப்படிக்கிடையாது அவர் என்றும் மாறாதவர் (எபி 13: 😎. அப்படியானால், அவர் தருகின்ற கைம்மாறுதான் மாறாததுதான்.
எனவே, நாம் என்றும் மாறாத கடவுள் தருகின்ற கைம்மாறினைப் பெற, நாம் செய்யக் கூடிய அறச்செயல்களை மறைவாய், வலக்கை செய்வதை இடக்கை அறியாதவாறு செய்வோம்.
சிந்தனை
‘அன்பு செலுத்துவதும், அறச்செயல்கள் செய்வதும் நல்லது. அவற்றை எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் செய்வது அதைவிட நல்லது’ என்பார் தாரிக் ரமதான் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் அறச்செயல்களைச் செய்கின்றபொழுது, அடுத்தவருடைய பாராட்டிற்காகவோ, பெருமைக்காகவோ அல்லாமல், ஆண்டவருடைய மாட்சிக்காகச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.