போர்களால் துன்புறும் மக்களுக்கு ஆறுதல் கிடைப்பதாக

உலகில் இடம்பெறும் போர்களால் துன்புறும் மக்கள் அனைவருக்கும், அமைதியும் ஆறுதலும் கிடைக்குமாறு செபிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 20, இப்புதன் காலையில், வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் புதன் மறைக்கல்வியுரையாற்றிய திருத்தந்தை, ஜெர்மன் மொழி பேசுகின்ற திருப்பயணிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார். மேலும், ஜெர்மானியர்கள், உக்ரேனியப் புலம்பெயர்ந்தோருக்கு அதிக அளவில் இரக்கம் காட்டுவதற்கு திருத்தந்தை நன்றியும் தெரிவித்தார்.

மேலும், கத்தோலிக்கக் கல்வியை முன்னேற்றும் முறைகள் குறித்து, உலக அளவில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைப்பின் பிரதிநிதிகளை, இப்புதன் மறைக்கல்வியுரை நிகழ்வுக்குமுன்னர் சந்தித்து உரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 24, இறை இரக்க ஞாயிறு

மேலும், இறை இரக்க ஞாயிறாகிய ஏப்ரல் 24ம் தேதி உள்ளூர் நேரம் காலை பத்து மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றுவார் என்று, திருத்தந்தையின் திருவழிபாடுகளுக்குப் பொறுப்பான அலுவலகம் அறிவித்துள்ளது.

பாஸ்கா காலத்தின் இரண்டாவது ஞாயிறன்று இறை இரக்க ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது. இறை இரக்கப் பக்தியைப் பரப்பிய புனித பவுஸ்தீனா கொவால்ஸ்கா அவர்களுக்கு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள், 2000மாம் ஆண்டு, ஏப்ரல் 30ம் தேதி புனிதர் பட்டமளித்தார். அச்சமயத்தில் பாஸ்கா காலத்தின் இரண்டாவது ஞாயிறு, இறை இரக்க ஞாயிறு என அத்திருத்தந்தை அறிவித்தார். அதற்குப்பின்னர், 2001ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி முதன் முறையாக இறை இரக்க ஞாயிறு சிறப்பிக்கப்பட்டது.

Comments are closed.