வாசகமறையுரை (ஏப்ரல் 28)
பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம் வியாழக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 5: 27-33
II யோவான் 3: 31-36
“கீழ்ப்படிதலும் நிலைவாழ்வும்”
கடவுளுக்குக் கீழ்ப்படிந்த மன்னர்:
1014 முதல் 1031 வரையிலான காலக்கட்டத்தில் இங்கிலாந்தை ஆட்சி செய்தவர் கனூத் (Canute) என்ற மன்னர். இவரோடு இருந்தவர்கள் இவரை, ‘உம்மைப் போன்று ஒருவர் உண்டா? உம்முடைய ஆற்றல் என்ன! உம்முடைய அதிகாரம் என்ன!’ என்று இவரைத் தாங்கள் விரும்பியவாறெல்லாம் புகழ்ந்தார்கள். இவரும் அவர்களுடைய புகழ்ச்சியில் மயங்கி, அவர்கள் தன்னைப் பற்றிச் சொல்வதெல்லாம் உண்மை என்று நினைத்துக் கொண்டார்.
ஒருநாள் இவர் தான் எவ்வளவு வலிமையானவன் என்பதை நிரூபிக்க, இங்கிலாந்து நாட்டுக் கடற்கரையில் தனது சிம்மாசனத்தைப் போட்டு, அதன்மேல் கம்பீரமாக அமர்ந்துகொண்டு, “அலையே! கரைக்குத் திரும்பி வரமால் அப்படியே இரு!” என்று கட்டளை பிறப்பித்தார். இவர் கட்டளையிட்டதும் அலைகள் அப்படியே நின்றுவிடுமா என்ன! அவை வழக்கம்போல் கரைக்குத் திரும்பி வந்து, இவர் அமர்ந்திருந்த சிம்மாசனத்தைச் சரித்துப் போட்டது.
அப்போது இவர், ‘நாமெல்லாம் எம்மாத்திரம்! கடவுள்தான் பெரியவர். அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதுதான் சிறந்தது’ என முடிவுசெய்து கொண்டு, அன்றே தனது மகுடத்தைக் கழற்றி வைத்துவிட்டு, இயேசுவைப் பின்பற்றி நடந்தார்.
ஆம், கனூத் மன்னர் தான் ஒன்றுமில்லை; கடவுளே மிகப்பெரியவர் என்று உணர்ந்து, அவரைப் பின்பற்றி நடந்தார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கடவுளுக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோர் நிலைவாழ்வைப் பெறுவர் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தூய ஆவியாரின் வல்லமையைப் பெற்றவர்களாய்த் திருத்தூதர்கள் ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவித்து வந்தபோது, தலைமைச் சங்கத்தார் அதைக் கண்டு சீற்றம் அடைந்து, அவர்களை இயேசுவைப் பற்றி அறிவிக்கக்கூடாது என்று அதற்றுகின்றார்கள். அப்போதுதான் பேதுருவும் மற்ற திருத்தூதர்களும், “மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதை விடக் கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படியே வேண்டும்” என்கிறார்கள்.
திருத்தூதர்கள் தலைமைச் சங்கத்திற்கு அல்ல, கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள். அதனால்தான் அவர்கள் தலைமைச் சங்கத்தார் இயேசுவைப் பற்றி அறிவிக்கக்கூடாது என்று சொல்லியும், இயேசுவைப் பற்றி அறிவித்து வந்தார்கள்.
திருத்தூதர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு எப்படி வந்திருக்கும் என நாம் நினைக்கலாம். திருத்தூதர்கள் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லும், “மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வு பெறுவர்” என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டார்கள். அதனாலேயே அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாய், அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள்.
கீழ்ப்படிதல் என்பது திடீரென ஏற்பட்டுவிடாது; நம்பிக்கை மூலமாகவே வரும். திருத்தூதர்கள் இயேசுவிண்மீது நம்பிக்கை கொண்டார்கள். அந்த நம்பிக்கை அவர்களை இயேசுவுக்கு – கடவுளுக்குக் – கீழ்ப்படிய வைத்தது. நாமும் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களாய், அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து, நிலைவாழ்வைப் பரிசாகப் பெறுவோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடப்போர்மீது அவரது ஆசி நிறைவாகத் தங்குகின்றது.
மனிதருக்குக் அஞ்சி வாழத் தேவையில்லை; ஆண்டவருக்கு அஞ்சி வாழ்ந்தால் போதும்.
நமது நம்பிக்கை வாழ்வு பெயரளவில் நின்றுவிடாமல, செயல் வடிவம் பெறச் செய்வோம்.
இறைவாக்கு:
‘கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது’ (1 சாமு 15:22) என்று சாமுவேல் சவுலிடம் கூறுவார். எனவே, நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவர்களாய், அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.