இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட திருத்தூதர் பணிகள் நூலில், “அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்; தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள்.” என வாசிக்கின்றோம்.
நோன்புடன் கூடிய இறைவேண்டல் மிகவும் சக்தி மிக்கது என்பதை நாம் அனைவரும் உணர இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“அவருடைய கட்டளை நிலைவாழ்வு தருகிறது என்பது எனக்குத் தெரியும். எனவே நான் சொல்பவற்றையெல்லாம் தந்தை என்னிடம் கூறியவாறே சொல்கிறேன்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
“கடவுளின் வார்த்தைகள் நிலைவாழ்வு அளிக்கக்கூடியவை.” (யோவா. 6: 68) என்ற இறைவார்த்தையை என்றும் நாம் மனதில் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இந்த நாள் முழுவதும் நம்முடைய பேச்சிலும், செய்கின்ற செயல்கள் அனைத்திலும் தூய ஆவியானவர் நம்மை வழி நடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இந்தியாவிலும், பிற நாடுகளிலும் மறுபடியும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்று பரவுதல் கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.