ஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்

நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 16-20
அக்காலத்தில்
சீடர்களின் பாதங்களைக் கழுவியபின் இயேசு அவர்களுக்குக் கூறியது: “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல; தூது அனுப்பப் பட்டவரும் அவரை அனுப்பியவரைவிடப் பெரியவர் அல்ல என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இவற்றை நீங்கள் அறிந்து அதன்படி நடப்பீர்கள் என்றால் நீங்கள் பேறுபெற்றவர்கள்.
உங்கள் அனைவரையும்பற்றி நான் பேசவில்லை. நான் தேர்ந்து கொண்டவர்கள் யாரென எனக்குத் தெரியும். எனினும், “என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்” என்னும் மறைநூல் வாக்கு நிறைவேறியாக வேண்டும்.
அது நிறைவேறும்போது, ‘இருக்கிறவர் நானே’ என்று நீங்கள் நம்புமாறு இப்போதே, அது நிறைவேறுமுன்பே, அதுபற்றி உங்களுக்குச் சொல்லி வைக்கிறேன். நான் அனுப்புகிறவரை ஏற்றுக்கொள்பவர் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவர் என்னை அனுப்பியவரையே ஏற்றுக்கொள்கிறார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
I திருத்தூதர் பணிகள் 13: 13-25
II யோவான் 13: 16-20
“பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல”
தன்னைக் குறித்து பெருமைப்பட்டுக்கொண்ட அருள்பணியாளர்:
ஒரு பங்கில் அருள்பணியாளர் ஒருவர் இருந்தார். கேட்பவரைக் கட்டிப்போட வைக்கும் அளவுக்கு மிக அருமையாக மறையுரை ஆற்றும் இவருக்கு, ‘மறையுரை ஆற்றுவதில் தன்னை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை!’ என்ற கர்வம் இருந்துகொண்டே இருந்தது.
ஒருநாள் இவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வானதூதர் ஒருவர் தோன்றி, “நீர் மிக அருமையாக மறையுரை ஆற்றுகின்றீர் என்று கர்வம் கொள்ளவேண்டாம். உண்மையில் நீர் இவ்வளவு அருமையாக மறையுரை ஆற்றுவதற்கு, பீடத்திற்கு முன்பாக அமர்ந்துகொண்டு உமக்காக வேண்டிக்கொண்டிருக்கும் ஒரு மூதாட்டிதான் காரணம்” என்று சொல்லிவிட்டு மறைந்து போனார். இதற்குப் பிறகு இவர் தான் மிகவும் அருமையாக மறையுரை ஆற்றுவதைக் குறித்து ஒருபோதும் கர்வம் கொள்வதில்லை.
பலரும் இந்த நிகழ்வில் வரும் அருள்பணியாளரைப் போன்று தங்களைக் குறித்துப் பெருமை பாராட்டிக் கொள்கின்றார்கள் அல்லது கர்வத்தோடு இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய இறைவார்த்தை இயேசுவின் சீடர்கள் அவரைப் போன்று தாழ்ச்சியோடு பணிசெய்யவேண்டும் என்ற செய்தியை எடுத்துக்கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியபின் இயேசு அவர்களிடம் பேசும் வார்த்தைகள்தான் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இயேசு, “பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல” என்கிறார். இதற்கு முந்தைய பகுதியில் அவர், “ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா 13: 14) என்று கூறியிருப்பார். இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது, அவர் அவர்கள்மீதுகொண்ட அன்பின் வெளிப்பாடு. எனவே, இயேசுவின் சீடர்களும் அவரைப் போன்று பிறர்மீது தாங்கள்கொண்டிருக்கும் அன்பைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும். அதற்கு அடிப்படையாக இருக்கவேண்டியது தாழ்ச்சி.
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, அவரது சீடர்கள்தான் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை வழிநடத்த வேண்டும். எனவே, அவர்கள் தன்னைப் போன்று தாழ்ச்சியோடு இருந்து, தங்களது அன்பைச் செயலில் வெளிப்படுத்தவேண்டும். என்பதாலேயே இயேசு அப்படிச் சொல்கிறார். இன்றைய முதல் வாசகத்தில் பவுல் பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவிற்கு வந்து, ஓய்வுநாளன்று தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றார். இச்செயல்கூட, பவுல் செயலில் தம் அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. எனவே, இயேசுவின் வழியில் நடக்கின்றவர்கள் அவரைப் போன்று தாழ்ச்சியோடும், செயலில் அன்பை வெளிப்படுத்தக்கூடியவர்களாகவும் வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனைக்கு:
 மேன்மை அடையத் தாழ்மையே வழி (நீமொ 18: 12)
 கிறிஸ்துவே என்னும் வாழ்கிறார் (கலா 2: 20) என்று சொன்னதன்மூலம், பவுல் தாழ்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்
 தாழ்ச்சி என்பது நம்மைப் பற்றித் தரக் குறைவாக நினைப்பது அல்ல, மாறாக, நம்மைப் பற்றிக் குறைவாக நினைப்பது
ஆன்றோர் வாக்கு:
‘தாழ்நிலையில் இருப்போரை அவர் உயர்த்துகிறார் (லூக் 1: 53) என்பார் மரியா. எனவே, நாம் தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.