குழந்தைகள் கருவறையிலிருந்தே பாதுகாக்கப்படவேண்டும்

ஒவ்வொரு குழந்தையும், தாயின் வயிற்றில் உருவான நேரம் முதல், அது வரவேற்கப்பட்டு பாதுகாக்கப்படவேண்டும், மற்றும், உதவி வழங்கப்படவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார்.

நவம்பர் 20, இவ்வெள்ளியன்று குழந்தைகள் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு, குழந்தைகள் உலக நாள் என்ற ஹாஷ்டாக்குடன் (#WorldChildrensDay) வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு திருத்தந்தை கூறியுள்ளார்.

உலக அளவில் சிறார் மத்தியில் ஒருமைப்பாட்டை ஊக்குவித்து, அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் நிறுவனம், 1954ம் ஆண்டில், குழந்தைகள் உலக நாளை உருவாக்கியது. அந்த நாள், ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ம் தேதி சிறப்பிக்கப்படுமாறும், அந்நிறுவனம் உலகினருக்கு அழைப்பு விடுத்தது.

மேலும், 1959ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, சிறார் உரிமைகள் பற்றிய அறிக்கையையும்,  1989ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி, சிறார் உரிமைகள் குறித்த ஒப்பந்தத்தையும், ஐ.நா.பொது அவை ஏற்றுக்கொண்டது.

மேலும், இவ்வெள்ளியன்று, ஐ.நா.வின் உணவு மற்றும், வேளாண்மை நிறுவனத்தின் இயக்குனர் Qu Dongyu அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

Comments are closed.