ஏப்ரல் 29 : நற்செய்தி வாசகம்

தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 21-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்.”

யூதா – இஸ்காரியோத்து யூதாசு அல்ல, மற்றவர் – அவரிடம், “ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்?” என்று கேட்டார். அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: “என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

——————————————————————

“ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கு உரித்தாக்கும்”

பாஸ்கா காலத்தின் ஐந்தாம் வாரம் திங்கட்கிழமை

I திருத்தூதர் பணிகள் 14: 5-18

திருப்பாடல் 115: 1-2, 3-4, 15-18 (1a)

II யோவான் 14: 21-26

“ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கு உரித்தாக்கும்”

இயேசுவை அன்புசெய்வோர்

ஒரு சமயம் சேயுசு, எர்மசு ஆகிய இரு தெய்வங்களும் லிஸ்திராவிற்கு வந்திருந்தபோது, அவர்கள் இருவரையும் யாருமே தங்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்த முதிய தம்பதியான பிலோமினும் பாசிசுமே அவர்கள் இருவரையும் தங்கள் வீட்டில் ஏற்று, அவர்களுக்கு விருத்தளித்தார்கள். இதனால் செயுசும் எர்மசும் அந்த முதிய தம்பதிக்கு மட்டும் ஆசி வழங்கிவிட்டு, லிஸ்திராவைச் சபித்துவிட்டுப் போனார்கள்.

இது காலங்காலமாக லிஸ்திரா மக்களிடம் சொல்லப்பட்டு வரும் கதை

பவுலும் பர்னபாவும் இந்த லிஸ்திராவில் நற்செய்தி அறிவிக்கச் சென்றபோது, அங்கிருந்த கால் ஊனமுற்றவரைப் பவுல் நலமாக்கியதும், செயுசும் எர்மசும்தான் திரும்ப வந்திருக்கின்றார்கள். அவர்களுக்குக் காளைகளைப் பலியிடுவதுதான் முறை என நினைத்துக் கொண்டு, அதன்படி அங்கிருந்தவர்கள் செயல்படத் துணிகிறார்கள். அப்போது பர்னபாவும் பவுலும், “நாங்களும் உங்களைப் போன்ற மனிதர்தான்” என்று சொல்லி காளைகளைப் பலியிடுவதைத் தடுக்கின்றார்கள். அதே வேளையில், அவர்கள் இருவரும் ஆண்டவருக்குத்தான் மாட்சி உண்டாக வேண்டும் என்று, மக்களை ஆண்டவர் பக்கம் திருப்புகின்றர்கள்.

பர்னபாவும் பவுலும் தங்களுக்கென பெருமையைத் தேடிக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் இருவரும் கடவுளுக்கே மாட்சி உரித்தாகுக என்று அதன்படி செயல்பட்டார்கள். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 115 இல் அதன் ஆசிரியர், “எங்களுக்கன்று, ஆண்டவரே! மாட்சியை உம் பெயருக்கு உரித்தாக்கும்” என்கிறார்.

ஒருவர் தனக்குப் பெருமை சேர்க்காமல், கடவுளை எப்படி மாட்சிப்படுத்த முடியும்? என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை இன்றைய நற்செய்தியில் இயேசு தருகின்றார். “என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார்” என்று இயேசு சொல்வதன் மூலம், தன்னை அன்பு செய்வோர், தன் கட்டளையைக் கடைப்பிடித்து, கடவுளை மாட்சிப்படுத்துவார் என்கிறார்.

நாம் இயேசுவை உண்மையில் அன்பு செய்கின்றோம் எனில், நம்மை அல்ல, கடவுளை மாட்சிப்படுத்துவோம். நாம் நமது சொல்லாலும் செயலாலும் கடவுளை மாட்சிப்படுத்துகின்றோமா? சிந்திப்போம்.

கடவுளை மாட்சிப்படுத்துங்கள்

மிகப்பெரிய போதகர் ஒருவர் இருந்தார். மக்கள் அவரைப் போதிப்பதற்காகப் பல இடங்களுக்கும் அழைத்தார்கள். இதனால் அவருக்குத் தன்னுடைய போதனையைக் குறித்த சிறிது கர்வமும் இருந்தது.

ஒரு நாள் ஒரு கோயிலில் போதிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டார். அவரும் அருமையாகப் போதித்து, நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அங்கே சென்றார். அவர் கோயிலுக்குள் நுழையும்போது ஒரு பளிங்குக் கல் இருந்தது. அந்தக் கல்லில், “கடவுளுக்கே மாட்சி உரித்தாகுக” என்று பொருள்படும் “Ad mairorem Dei gloriam” என்ற இலத்தின் வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

அதைப் படித்துப் பாத்ததும் போதகர், தன்னை முன்னிலைப் படுத்த விரும்பாமல், கடவுளை மட்டுமே மாட்சிப்படுத்தினார்.

நாம் ஒவ்வொருவரும் நம்மை அல்ல, கடவுளை மாட்சிப்படுத்த அழைக்கப்படுகின்றோம். இதை உணர்ந்து செயல்பட்டால் கடவுள் நம்மை மாட்சிப்படுத்துவார்.

Comments are closed.