நவம்பர் 19 : நற்செய்தி வாசகம்

அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக்கூடாதா?
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 41-44
அக்காலத்தில்
இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் கோவிலைப் பார்த்து அழுதார். “இந்த நாளிலாவது அமைதிக்குரிய வழியை நீ அறிந்திருக்கக் கூடாதா? ஆனால் இப்போது அது உன் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.
ஒரு காலம் வரும். அப்போது உன் பகைவர்கள் உன்னைச் சுற்றி அரண் எழுப்பி, உன்னை முற்றுகையிடுவார்கள்; உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரைமட்டமாக்குவார்கள்; மேலும் உன்னிடம் கற்கள் ஒன்றின்மீது ஒன்று இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னைத் தேடி வந்த காலத்தை நீ அறிந்து கொள்ளவில்லை” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————–
“அதைப் பார்த்து அழுதார்”
நிகழ்வு
புகழ்பெற்ற விர்ஜினியாப் பல்கலைக்கழகத்தை நிறுவியவர் தாமஸ் ஜெபர்சன். பலரும் நல்லதொரு கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக 1819 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு, பல்கலைக்கழகத்தில் பெருஞ்சேதம் ஏற்பட்டது.
இதையறிந்த தாமஸ் ஜெபர்சன் மிகுந்த வேதனை அடைந்தார். பின்னர் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களை அழைத்து, பல்கலைக்கழகத்தில் இருந்த ஒருசில முக்கியப் பொறுப்பாளர்களை அருகில் வைத்துக்கொண்டு, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அவர் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம், “பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இந்தக் கலவரத்தால், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மிகப்பெரிய களங்கம் ஏற்பட்டிருக்கின்றது. இதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை!” என்று சொல்லிக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார்.
இதைப் பார்த்துக் கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் தாமஸ் ஜெபர்சனை நோக்கி, “இப்பொழுது நீங்கள் பேசிய வார்த்தைகளை விட, நீங்கள் சிந்திய கண்ணீர் எங்களுடைய தவற்றை உணர வைத்துவிட்டது. அதனால் நாங்கள் செய்த தவறிற்காக மன்னிப்புக் கேட்கின்றோம். இனிமேலும் இதுபோன்ற தவறு பல்கலைக்கழகத்தில் நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்கின்றோம் என்று உறுதியளிக்கின்றோம்” என்றார்.
ஆம், தாமஸ் ஜெபர்சனின் கண்ணீர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய தவற்றை உணர்ந்து, திருந்தி நடப்பதற்கு வழிவகை செய்தது; ஆனால், ஆண்டவர் இயேசு எருசலேம் நகருக்காகக் கண்ணீர் வடித்தபோதும், அந்த நகரில் இருந்தவர்கள் மனம்மாறாமல், அமைதிக்குரிய வழியை அறியாமலும் இருந்தார்கள். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அமைதிக்குரிய வழியை அறிந்திராத எருசலேம் நகரம்
ஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிய தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்து, அதை நெருங்கி வந்ததும், அதைப் பார்த்து அழுகின்றார். முன்பு தன் நண்பன் இலாசருக்காகக் கண்ணீர்விட்டு அழுத இயேசு (யோவா 11: 35), இப்பொழுது எருசலேம் நகருக்காக அழுகின்றார். உண்மையில் இயேசு எருசலேம் நகர்மீதும், அங்கு இருந்தவர்கள்மீதும் எந்தளவுக்கு அன்பு கொண்டிருந்தால், அவர் அந்த நகருக்காக அழுதிருப்பார் என்று நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
எருசலேம் என்றால் (Jeru ’salem’ –Shalom) என்றால், அமைதி என்று பொருள்; ஆனால், அந்த நகரில் இருந்தவர்களோ அமைதிக்குரிய வழிகளை நாடவில்லை. மாறாக, தங்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்த இறைவாக்கினர்களைக் கொன்றுபோட்டார்கள் (மத் 23: 37). இவ்வாறு எருசலேமில் இருந்தவர்கள் அமைதிக்குரிய வழிகளை அறியாமல், தங்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்த இறைவாக்கினர்களையும்; ஏன் தன்னையும் கொன்றுபோடத் துணிந்ததால், இயேசு அந்த நகரைப் பார்த்து அழுகின்றார்.
எருசலேம் நகரின் அழிவைக் குறித்து முன்னறிவிப்பு
லூக்கா நற்செய்தி 12:48 இல் இயேசு இவ்வாறு கூறுவார்: “மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்பட்டவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.” இயேசுவின் இவ்வார்த்தைகளை எருசலேம் நகரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, அவர் ஏன் அந்த நகருக்காக அழுதார்; அவர் ஏன் அந்த நகரின் அழிவை முன்னறிவித்தார் என்பது நமக்குப் புரியும்.
கடவுளால் மற்ற நகர்களுக்குச் செய்யப்பட்டதை விடவும் எருசலேமிற்கு மிகுதியாகச் செய்யப்பட்டது. இன்னும் சொல்லப்போனால், எருசலேம் நகரில் இருந்த திருக்கோயிலிலிருந்து ஆண்டவர் மக்களுக்கு அருள்பாலித்தார். அப்படியிருந்தும் அந்த நகரில் இருந்தவர்கள் அமைதிக்கான வழிகளை அறியாமல், இயேசுவையும் அறியாமலும் இருந்ததால், அந்த நகர் எதிரிகளால் அழிக்கப்படும் என்று இயேசு முன்னறிவிக்கின்றார். இயேசு முன்னறிவித்தது போன்று, கி.பி. 70 ஆம் ஆண்டு உரோமை மன்னன் டைட்டஸ் என்பவனால் எருசலேம் அழிக்கப்பட்டது.
எருசலேமிற்கு நேர்ந்த அழிவு நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது என்னவெனில், கடவுளிடமிருந்து ஆசியையும், அவருடைய வார்த்தையையும் ஒவ்வொரு நாளும் பெறுகின்றோம் எனில், நாம் அதற்கேற்றாற்போல் வாழவேண்டும். இல்லையென்றால் நாம் அதற்குரிய தண்டனையை பெறத்தான் செய்யவேண்டும். ஆதலால், கடவுளிடமிருந்து ஆசியையும் அருளையும் பெறக்கூடிய நாம், அதற்கேற்ற வாழ்க்கை வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘நீங்கள் மிகுந்த கனிதந்து என் சீடராய் இருப்பதே, என் தந்தைக்கு மாட்சியளிக்கின்றது’ (யோவா 15: 8) என்பார் இயேசு. ஆகையால், கடவுளிமிருந்து ஆசியைப் பெறுகின்ற நாம், அதற்கேற்றாற்போல் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.