நவம்பர் 16 : சனிக்கிழமை. நற்செய்தி வாசகம்

தாம் தேர்ந்துகொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-8

அக்காலத்தில் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை.

அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், `என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், `நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார்’ என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.”

பின் ஆண்டவர் அவர்களிடம், “நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னார் என்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?” என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

மறையுரைச் சிந்தனை.

“இறையாசியைப் பெற்றுத்தரும் இறைவேண்டல்”

சீனாவில் மருத்துவப் பணியையும் மறைப்பணியையும் ஒருசேரச் செய்துவந்தார் குருவானவர் ஒருவர். ஒருநாள் அவர் தன்னுடைய பணிகளை முடித்துவிட்டு, தான் இருந்த இடத்திற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது, கொள்ளைக்கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி வளைத்துக்கொண்டு, அவரிடம் இருப்பதையெல்லாம் கொடுத்துவிடுமாறு கேட்டது. அவரிடம் அந்தக் கொள்ளைக்கூட்டத்திடம் கொடுக்கின்ற மாதிரி எதுவும் இல்லை; திருவிவிலியம் மட்டுமே இருந்தது. அதனால் அவர் கொள்ளைக்கூட்டத் தலைவனிடம், “உங்களிடம் கொடுப்பதற்கு என்னிடம் ஒன்றுமில்லை; என்னை விட்டுவிடுங்கள்” என்றார்.

அவனோ அவர் சொன்னதை நம்பவில்லை. “நீ என்னிடமே பொய் பொய்சொல்கிறாய்! அதனால் நான் உன்னை அருகில் இருக்கும் குகையில் வைத்துக் கொல்லப்போகிறேன்” என்றான். இவ்வாறு சொன்னபிறகு அவனோடு இருந்த மற்ற கொள்ளையர்கள் குருவானவரை அருகாமையில் இருந்த குகைக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். குருவானவர்க்குப் பயம் தொற்றிக்கொண்டது. உடனே அவர் இறைவனை நோக்கி மன்றாடத் தொடங்கினார்: “இறைவா! என்மேல் இரக்கமாயிரும்! இவர்கள் என்னை எப்படியும் கொல்லத்தான் போகிறார்கள்; அதை நினைத்து எனக்குக் கவலையில்லை. ஆனாலும், நான் என்னுடைய சாவை மனவலிமையோடும் எந்தவோர் அச்சமும் இல்லாமல் துணிச்சலோடு எதிர்கொள்ளவேண்டும். அதற்கு உம் அருள்தாரும்.”

குருவானவர் இவ்வாறு இறைவனிடம் வேண்டிக்கொண்டு போகும்போதே குகை ஒன்று வந்தது. பின்னர் அந்தக் கொள்ளையர்கள் அவரை குகைக்குள் நிறுத்த, கொள்ளைக்கூட்டத் தலைவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் குருவானவரைச் சுடுவதற்கு, துப்பாக்கியைத் தூக்கினான். அப்பொழுது குருவானவரின் முகத்தில் எந்தவோர் அச்சமும் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டு, “இவரிடம் எதுவும் இருந்திருந்தால் அஞ்சி நடுங்கிக்கொண்டிருப்பார்; இவர் அஞ்சாமல் இருப்பதைப் பார்க்கும்போது, இவரிடம் எதுவுமில்லை என்பது நன்றாகத் தெரிகின்றது. அதனால் இவரை விட்டுவிட்டுவிடோம்” என்று விட்டுவிட்டான்.

குருவானவரோ ‘நாம் இறைவனிடம் வேண்டியது வீண்போகவில்லை’ என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து தான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பி வந்தார்.

இறைவனிடம் நாம் இடைவிடாது எழுப்புகின்ற வேண்டுதலும் மன்றாட்டும் ஒதுபோதும் வீண்போவதில்லை; அவற்றிற்குத் தக்க பலன் உண்டு என்ற செய்தியை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. நற்செய்தியில் இயேசு இடைவிடாது இறைவனிடம் மன்றாடுவதன் முக்கியத்துவைக் குறித்துப் பேசுகின்றார். அதுகுறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கைம்பெண்ணும் நேர்மையற்ற நடுவரும்

நற்செய்தியில் இயேசு இடைவிடாது இறைவனிடம் வேண்டுவதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதற்காக கைம்பெண், நேர்மையற்ற நடுவர் உவமையைக் கூறுகின்றார். பெண்கள் பொது இடங்கட்கு வரக்கூடாது; பேசக்கூடாது என்று இருந்த அந்தக் காலத்தில், உவமையில் வருகின்ற பெண், அதுவும் கணவரை இழந்து, யாருடைய ஆதரவும் இல்லாத கைம்பெண், சாதாரண நடுவரல்ல, (கையூட்டுக் கொடுத்தால் மட்டும் தீர்ப்பு வழங்குகின்ற) நேர்மையற்ற நடுவரிடமிருந்து தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று போராடுகின்றார். முடிவில் அந்தக் கைம்பெண்ணின் தொல்லையின் பொருட்டு அவர் அவர்க்குக் நீதி வழங்குகின்றார்.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான செய்தி, நேர்மையற்ற நடுவரே கைம்பெண்ணுக்கு நீதி வழங்குகின்றபோது, இரக்கமுள்ள தந்தை (லூக் 6:36) தன்னுடைய மக்கள் தன்னிடம் மன்றாடுகின்றபோது எவ்வளவு ஆசியைத் தருவார் என்பதுதான். இதுகுறித்துத் தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

Comments are closed.