நவம்பர் 15 : நற்செய்தி வாசகம்

மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 26-37

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “நோவாவின் காலத்தில் நடந்தது போலவே மானிட மகனுடைய காலத்திலும் நடக்கும். நோவா பேழைக்குள் சென்ற நாள் வரை எல்லாரும் திருமணம் செய்துகொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அவர்கள் அனைவரையும் அழித்தது.

அவ்வாறே லோத்தின் காலத்திலும் நடந்தது. மக்கள் உண்டார்கள், குடித்தார்கள்; வாங்கினார்கள், விற்றார்கள்; நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் போன நாளில் விண்ணிலிருந்து பெய்த தீயும் கந்தகமும் எல்லாரையும் அழித்தன.

மானிடமகன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். அந்நாளில் வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் வீட்டிலுள்ள தம் பொருள்களை எடுக்கக் கீழே இறங்க வேண்டாம். அதுபோலவே வயலில் இருப்பவர் திரும்பி வரவேண்டாம்.

லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். தம் உயிரைக் காக்க வழி தேடுவோர் அதை இழந்துவிடுவர்; தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வர்.

நான் உங்களுக்குச் சொல்கிறேன்; அந்த இரவில் ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார்.”

அவர்கள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, இது எங்கே நிகழும்?” என்று கேட்டார்கள்.

அவர் அவர்களிடம், “பிணம் எங்கே இருக்கிறதோ அங்கேயே கழுகுகளும் வந்து கூடும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————-
லூக்கா 17: 26-27

கவனமாக இருங்கள்!

நிகழ்வு

ஒரு பெருநகரில் இருந்த ஒரு நிறுவனத்தில், கப்பலில் பணிசெய்வதற்கான நேர்காணல் (Interview) நடைபெற்றது. அதில் கலந்துகொள்வதற்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வந்திருந்தார்கள். வந்திருந்த எல்லாரும் உள்ளே என்ன மாதிரிக் கேள்வி கேட்பார்கள்? அதற்கு நாம் எப்படிப் பதில் சொல்லவேண்டும்? என்று சத்தம் போட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்ததால், நேர்காணல் நடந்துவோரிடமிருந்து வந்த அழைப்பை யாரும் கவனிக்கவில்லை; ஒரே ஓர் இளைஞன் மட்டும் கவனித்தான். அவன் வேகமாக உள்ளே சென்று, வேலையோடு திரும்பி வந்தான். அவனைப் பார்த்து எல்லாரும் ஆச்சரியபட்டார்கள். “உனக்கு மட்டும் எப்படி வேலை கிடைத்தது?” என்று அங்கிருந்த ஒருவன் அவனிடம் கேட்க, அவன், “நேர்காணல் தொடங்கப் போகிறது… நேர்காணலுக்கு யார் முதலில் வருகின்றாரோ, அவர்க்கு உடனடியாக வேலை தரப்படும்’ என்றோர் அறிவிப்பு வந்தது. நீங்கள் அனைவரும் சத்தம் போட்டுப் பேசிக்கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருந்ததால், வந்த அழைப்பினை யாரும் கவனிக்கவில்லை; ஆனால், நான் கவனித்தேன். அதனால் நான் வேகமாகச் சென்று நேர்காணலில் கலந்துகொண்டேன்; வேலையையும் கையோடு பெற்றுக்கொண்டேன்” என்றான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அங்கிருந்த எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருந்தால், எத்தகைய நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற செய்தியைத் தாங்கி வரும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்கு உரியது. இன்றைய நற்செய்தி வாசகம் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும் என்று செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

கண் இமைக்கும் நேரத்தில் இருக்கும் மானிடமகன் வெளிப்படும் நாள்

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, மானிடமகன் வெளிப்படும் நாள் எப்படி இருக்கும்? அப்பொழுது என்னென்ன நடக்கும்? என்பவை குறித்துப் பேசுகின்றார். மானிட மகன் வெளிப்படும் நாளில் என்ன நடக்கும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், அது எப்பொழுது வரும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

மானிடமகன் வெளிப்படும் நாள், எந்த நாள்? என்பதற்கு இயேசு, “அவர் வரும் நாளோ வேளையோ உங்கட்குத் தெரியாது; நினையாத நேரத்தில் அவர் வருவார் (மத் 25: 13; லூக் 12: 40) என்று கூறுவார். இன்னும் சொல்லப்போனால், அந்த நாளைக் குறித்து தந்தை ஒருவரைத் தவிர, வேறு யாரும் அறியார் (மத் 24: 36) என்றும் இயேசு கூறுவார். இப்படி யாரும் அறியாத வேளையில், கண்ணிமைக்கும் நேரத்தில் (1 கொரி 15:52) நிகழும் மானிடமகன் வெளிப்படும் நாளுக்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.

கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்

மானிட மகனுடைய வருகையைக் குறித்துப் பேசும்போது, இயேசு பழைய ஏற்பாட்டிலிருந்து இரண்டு எடுத்துக்காட்டுகளைத் தருகின்றார். ஒன்று நோவா (தொநூ 6-8) இன்னொன்று லோத்து (தொநூ 19). இவர்கள் இவருடைய காலத்திலும் மக்கள் உண்டார்கள்; குடித்தார்கள்; தாறுமாறான வாழ்க்கை வாழ்ந்துவந்தார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் கடவுள் நோவா வழியாகவும் லோத்து வழியாகவும் மக்களை எச்சரித்தார். ஆனால் மக்கள் கடவுளுடைய குரலுக்குச் செவிமடுக்காமல் போனதால், நோவாவின் காலத்தில் வெள்ளம் வந்து மக்களை அழித்தது; லோத்துவின் காலத்தில் கந்தக மழை வந்து அழித்தது.

இயேசு இந்த இரண்டு எடுத்துக்காட்டுகளையும் குறிப்பிட்டுவிட்டு, மானிட மகன் வெளிப்படும் நாளில் இப்படியே நடக்கும் என்று கூறுகின்றார். அப்படியானால், மானிட மகனுடைய வருகையை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்றால், அதற்கு நோவாவின் காலத்தின் வாழ்ந்த மக்களைப் போன்று, லோத்துவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்று இல்லாமல், கடவுளின் குரலைக் கேட்டு கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டியது இன்றியமையாதது.

எடுத்துக்கொள்ளப்படுதலும் விட்டுவிடப்படுதலும்

மானிட மகனுடைய நாளைக் குறித்துப் பேசும்போது இயேசு, ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார் என்று கூறுகின்றார். எடுத்துக்கொள்ளப்படுதல் என்றால், நோவா மற்றும் லோத்துவின் காலத்தில் மெத்தனமாக, கடவுளின் குரலைக் கேளாமல் இருந்தவர்களைப் போன்று தண்டனைத் தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்படுத்தல். விடுவிடப்படுதல் என்றால் நோவாவைப் போன்று லோத்துவைப் போன்று இவ்வுலகில் இறைவனின் ஆசியோடு, அவர்க்குச் சான்று பகர்ந்து வாழ விட்டுவிடப்படுத்தல். நாம் இம்மண்ணுலகில் இருந்து இறைவனுக்குச் சான்று பகர்ந்து வாழவேண்டும் என்றால், அதற்கு நாம் இயேசுவுக்காக நம்முடைய வாழ்வை இழக்கத் தயாராகவேண்டும். ஏனெனில், இயேசுவின் பொருட்டு உயிரை இழக்கத் தயாராக இருப்போரே அதைக் காத்துக்கொள்வர்.

ஆகையால், நாம் இந்த மண்ணுலகில் இயேசுவுக்குச் சாட்சியாகத் திகழ, அவர்க்காக நம்முடைய உயிரையும் இழக்கத் தயாராவோம்.

சிந்தனை

‘என் குரலுக்குச் செவிகொடுங்கள்; அது உங்களுக்கு நலம் பயக்கும்’ (எரே 7:23) என்கிறார் ஆண்டவர். ஆகையால், நாம் கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து, அவருடைய வழியில் நடந்து, மானிடமகனுடைய வருகைக்குத் தயாராக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.