நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 13)

ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில் அவர் நல்லவர்

நிகழ்வு

இரண்டாம் உலகப்போர் முடிந்திருந்த சமயம் அது. அமெரிக்காவில் இருந்த ஒரு பிரபலமான திருக்கோயிலில் பணியாற்றிவந்த குருவானவர், ஒரு ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது மக்களைப் பார்த்து, “போரினால் நம்முடைய கோயில் அதிகமாகச் சேதமடைந்துள்ளது. இதனைச் சரிசெய்வதற்கு இறைமக்கள் அனைவரும் தாராளமாக நன்கொடைகளைத் தந்து உதவவேண்டும்” என்று அறிவித்தார்.

அவர் இவ்வாறு அறிவித்ததைத் தொடர்ந்து பலர் அவரிடம் போட்டிபோட்டுக்கொண்டு வந்து நன்கொடைகளைக் கொடுத்துவிட்டுச் சென்றனர். எல்லாரும் போனபின்பு இரண்டு தாய்மார்கள் அவரிடம் வந்தார்கள். அதில் முதலாவது வந்தவர் குருவானவரிடம், “போரில் என்னுடைய மகன் இறந்துவிட்டான்; அவனுடைய இழப்பிலிருந்து என்னால் மீண்டுவர முடியவில்லை. இருந்தாலும், இறைவன் அவனை என்னோடு இத்தனை ஆண்டுகளும் வாழ வைத்திருந்தாரே… அதற்கு நன்றியாக இந்த இருநூறு டாலரை கோயில் திருப்பணிக்காக வைத்துக்கொள்ளுங்கள்” என்று இருநூறு டாலரைக் குருவானவரிடம் கொடுத்துச் சென்றார்.

அந்தத் தாய் அங்கிருந்து சென்றதும், அவர்க்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த இன்னொரு தாய் குருவானவரிடம், “தந்தையே! போருக்குச் சென்ற என்னுடைய மகன் உயிரோடு திரும்பி வந்திருக்கின்றான். அந்த நன்றிப்பெருக்கின் அடையாளமான இந்த ஐநூறு டாலரை கோயில் திருப்பணிக்காக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார். இப்படிச் சொல்லிவிட்டு அவர் தொடர்ந்து குருவானவரிடம் பேசத் தொடங்கினார். “தந்தையே! கோயில் திருப்பணிக்காக முதலில் நான் இருநூறு டாலர்தான் கொடுக்கலாம் என்று இருந்தேன். ஆனால், போரில் தன்னுடைய மகனை இழந்த தாயே இருநூறு டாலர் கொடுத்ததைப் பார்த்தபின்பு, போருக்குச் சென்று உயிரோடு திரும்பி வந்திருக்கின்ற ஒரு மகனைப் பெற்றிருக்கின்ற தாயாகிய நான் இருநூறு ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்காது என்று ஐநூறு டாலர் கொடுத்தேன்.” அந்தத் தாய் இவ்வாறு சொன்னதைக் கேட்டு குருவானவர் வியந்துநின்றார்.

கடவுள் நமக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கின்றார். அப்படிப்பட்டவர்க்கு நாம் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும் என்ற செய்தியை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவர்க்கு நன்றி செலுத்தாத ஒன்பது யூதர்கள்

நற்செய்தியில் இயேசு பத்துத் தொழுநோயாளர்களை நலப்படுத்துவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்தப் பத்துத் தொழுநோயாளர்களில் ஒன்பது பேர் யூதர்கள்; ஒருவர் சமாரியர். இதில் நாம் கவனிக்கவேண்டிய மிக முக்கியமான உண்மை, பத்துப்பேர்களும் தொழுநோயாளர்களாக இருந்தபோது, ஒன்றாக இருந்தார்கள்; அவர்கட்குள் எந்தவொரு வேறுபாடு இல்லை. யூதர்கள் சமாரியர்களோடு உறவுகொள்வதில்லை; பேசுவதில்லை. அப்படியிருக்கையில் அவர்கட்கு வந்த தொழுநோய் அவர்களை ஒன்றுசேர்த்தது. எவ்வளவு பெரிய ஆச்சரியம்!

இது ஒருபக்கம் இருக்கையில் இயேசு, தாங்கள் இருக்கும் பகுதி வழியாக வருவதைப் பார்த்துவிட்டு பத்துத் தொழுநோயாளர்களும் அவரிடம் “ஐயா! இயேசுவே, எங்கட்கு இரங்கும்” என்று வேண்டுகின்றார்கள். இவர்கள் இயேசுவை நோக்கி ஐயா என்று அழைப்பது, லூக்கா நற்செய்தி 5:5 ல், சீமோன் பேதுரு இயேசுவை நோக்கி ‘ஐயா’ என்று அழைப்பதை ஒத்திருக்கின்றது. இதற்குப் பொருள் இயேசு எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றார் என்பதாகும். இந்த நம்பிக்கையோடு அவர்கள் இயேசுவை வேண்டியதைத் தொடர்ந்துதான் அவர் அவர்களிடம், நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்” என்கின்றார். அவர்களும் அவருடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு குருக்களின் காண்பிக்கச் செல்கின்றார்கள். அவ்வாறு அவர்கள் போகிற வழியிலேயே அவர்கள நோய் நீங்குகின்றது. ஆனால், சமாரியரைத் தவிர்த்து மற்ற ஒன்பது பேர்களும், தங்கட்கு நலம்தந்த இயேசுவுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்ற எண்ணமில்லாமல் செல்கின்றார்கள்.

இங்குதான் யூதர்களும் சமாரியர்களும் வித்தியாசப்படுகின்றார்கள். யூதர்கள் இயேசுவுக்கு நன்றி செலுத்த வந்திருக்கவேண்டும் (1 அர 5: 1-14), வராததால் உடலளவில் மட்டும் நலம்பெற்றுச் செல்கின்றார்கள்.

ஆண்டவர்க்கு நன்றி செலுத்திய ஒரு சமாரியர்

யூதர்கள் நடந்துகொண்டதற்கு முற்றிலும் மாறாக, சமாரியர் தன்னுடைய நோய் நீங்கியதை உணர்ந்து, கடவுளைப் போற்றிப் புகழ்ந்து, இயேசுவுக்கு நன்றி செலுத்த வருகின்றார். இதனால் இயேசு அவரிடம், “உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது” என்று கூறுகின்றார். இயேசு சமாரியரிடம் சொன்ன இவ்வார்த்தைகள், இயேசு தன்னுடைய காலடிகளைக் கழுவிய பெண்ணிடம் சொன்ன, “உமது நம்பிக்கை உம்மை மீட்டது” (லூக் 7:50) என்ற வார்த்தைகளை ஒத்திருப்பதாகத் திருவிவிலிய அறிஞர்கள் கூறுவர். ஆம், சமாரியர் இயேசுவுக்கு நன்றி செலுத்தியதால், அவருடைய உடல் நோய் மட்டுமல்ல, அவருடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டன.

இந்த நிகழ்வைக் குறித்து சிந்தித்துப் பார்க்கின்ற நாம் இறைவனுக்கு நன்றியுடைவர்களாக இருக்கின்றோமா? என்று சிந்திப்போம். பல நேரங்களில் நாம் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகட்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாகவே இருக்கின்றோம் என்பது வேதனை கலந்த உண்மை. ஆகையால், நாம் இறைவனிடமிருந்து பெற்ற நன்மைகட்கு நன்றியுடையவர்களாக இருக்க முயற்சி செய்வோம்.

Comments are closed.