நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 12)

செவ்வாய்க்கிழமை
லூக்கா 14: 15-24

நம்முடைய வாழ்வில் கடவுளுக்கு முன்னுரிமை வந்து வாழலாமே!

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளை மறந்து, தன்னுடைய மனைவி, பிள்ளைகளை மறந்து எப்போதும் வேலை வேலையென்று பரபரப்பாக இருந்தார். அவருடைய மனைவி அவரிடம், “கொஞ்ச நேரமாவது கடவுளுக்கும் குடும்பத்துக்கும் ஒதுக்கலாமே….?” என்று சொல்லும்போதெல்லாம், “அவற்றிற்கெல்லாம் எனக்கு எங்கே நேரமிருக்கின்றது!” என்று சொல்லி அவர் தன்னுடைய மனைவியின் பேச்சைத் தட்டிக்கழித்து வந்தார். இன்னொரு பக்கம் அவர் தன்னுடைய நண்பர்களோடு சேர்ந்து இரவுவிடுதிக்குச் சென்று கூத்தடிப்பதும் கும்மாளமடிப்பதுமாக இருந்தார்.

நாள்கள் மெல்ல நகர்ந்தன. திடீரென்று ஒருநாள் அவர் உடல்நலமின்றி படுக்கையில் விழுந்தார். மருத்துவர் ஒருவர் வந்து அவரைச் சோதித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது, அவர்க்கு புற்றுநோய் இருக்கின்றது என்று. அவர் அதிர்ந்துபோனார். அப்பொழுது அவர் இறைவனிடம் மன்றாடத் தொடங்கினார். “இறைவா! இத்தனை நாள்களும் நான் உம்மை மறந்து, என்னுடைய மனம்போன போக்கில் சென்றுவிட்டேன். நீர் மட்டும் என்னுடைய வாழ்நாளை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொடுத்தால், நான் உம்முடைய வழியில் நடந்து, உமக்குகந்த மகனாக வாழ்வேன்” என்றார். இறைவனும் அவர்மீது இரக்கம்கொண்டு, அவருடைய வாழ்நாளைக் கூட்டிக்கொடுத்தார்.

இதற்குப் பின்பு அவர் கோயில் வழிபாடுகளில் தவறாது கலந்துகொண்டார்; தன்னுடைய குடும்பத்தோடு அதிகமான நேரம் ஒதுக்கினார். இதுமட்டுமல்லாமல், தவறான வழியில் சென்றுகொண்டிருந்த தன்னுடைய நண்பர்கட்கும் உண்மையை எடுத்துச் சொல்லி, அவர்களையும் கோயிலுக்கு அழைத்து வந்தார். இதனால் அந்தத் தொழிலதிபருடைய குடும்பம் மட்டுமல்லாமல், அவர்க்கு நன்கு அறிமுகமான எல்லாரும் மகிழ்ச்சியடைந்தார்கள்.

நாம் நம்முடைய வாழ்வில் கடவுளை மறந்துவாழக்கூடாது, மாறாக, அவர்க்கு முதன்மையான இடம்கொடுத்து வாழவேண்டும். அப்படி நாம் வாழ்ந்தோமெனில் கடவுளின் ஆசி நம்மில் நிறைவாகத் தங்கும் என்ற உண்மையை இந்த நிகழ்வானது நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகமும் கடவுள் நமக்குக் கொடுக்கும் அழைப்பினை நாம் உதறித் தள்ளாமல், அவர்க்கு முதன்மையான இடம் கொடுத்து வாழவேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளின் அழைப்பினை உதாசீனப்படுத்திய யூதர்கள்

லூக்கா நற்செய்தி பதினான்காம் அதிகாரம் முழுவதும் விருந்து குறித்த இயேசுவின் போதனையாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தியின் முந்தைய பகுதியில் – நேற்றைய நற்செய்தியின் இறுதியில் – இயேசு, வறியோர்க்கு விருந்துகொடுத்தால் நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது கைம்மாறு கிடைக்கும்” என்று சொல்வார். இதைக் கேட்டு அங்கு நடந்த விருந்தில் கலந்துகொண்ட ஒருவர் இயேசுவிடம், “இறையாட்சி விருந்தில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்” என்கிறார். அப்பொழுதுதான் இயேசு பெரிய விருந்து உவமையைச் சொல்கின்றார். இயேசு சொல்லும் உவமையைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னம், யூதர்களின் மனப்பான்மை எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்வது நல்லது.

யூதர்கள் இறையாட்சியை ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றோரோடு உண்ணக்கூடிய ஒரு பெரிய விருந்தோடு ஒப்பிட்டுப் பார்த்து வந்தார்கள் (லூக் 13: 28; எசா 25:6) இன்னொரு முக்கியமான செய்தி, யூதர்கள் தாங்கள் எப்படி இருந்தாலும் இறையாட்சி விருந்தில் கலந்துகொள்ளலாம்; அதில் எப்படியும் பங்குபெற்றுவிடலாம் என்ற தவறான எண்ணத்தோடு இருந்தார்கள். இத்தகைய பின்னணியில்தான் இயேசு விண்ணரசைப் பெரிய விருந்துக்கு ஒப்பிடுகின்றார்.

இயேசு சொல்லும் உவமையில், விருந்து ஏற்பாடு செய்தவர் கொடுத்த அழைப்பினை உதாசீனப்படுத்திபடுத்தி ஒருவர் வயல் வாங்கியிருப்பதாகவும்… இன்னொருவர் ஏர்மாடுகள் வாங்கியிருப்பதாகும்… மற்றொருவர் இப்போதுதான் திருமணமாகியிருப்பதாகவும்… சாக்குப்போக்குச் சொல்லி விருந்துக்கு வராமல் இருக்கின்றார்கள். இவர்கள் யாவரையும் யூதர்களோடு ஒப்பிடலாம். ஏனென்றால், யூதர்கள் கடவுள் கொடுத்த அழைப்பினை உதாசீனப்படுத்தி இறைவனுக்கு அவர்க்கு முதன்மையான இடம் கொடுக்காமல் வாழ்ந்துவந்தார்கள். இதனால் தண்டிக்கப்பட்டார்கள்.

கடவுளின் அழைப்பை ஏற்றுக்கொண்ட ஏழைகள்/ புறவினத்தார்

இறையாட்சி விருந்தில் பங்குபெற (சிறப்பு) அழைப்புப் பெற்ற யூதர்கள் அவ்விருந்தில் கலந்துகொள்ள விருப்பமில்லாமல் தட்டிக்கழித்ததால், புறவினத்தார்க்கும் ஏழைகள் மற்றும் வறியவர்கட்கும் விருந்தில் கலந்துகொள்ள அழைப்புக் கொடுக்கப்பட்டது. இவர்கள் தங்களுடைய தகுதியின்மையை உணர்ந்தபோதும், விருந்தில் கலந்துகொண்டு கடவுளின் ஆசியைப் பெற்றுக்கொண்டார்கள்.

இயேசு சொல்லும் இவ்வுவமை நம்முன் வைக்கும் முதன்மையான கேள்வி. நாம் நம்முடைய வாழ்வில் கடவுளுக்கு முதன்மையான இடம் தந்து வாழ்கின்றோமா…? என்பதுதான். பல நேரங்களில் நாம் யூதர்கள் எப்படி கடவுளின் அழைப்பினைத் தட்டிக்கழித்து, மற்ற செயல்களில் தீவிரமானார்களோ, அதுபோன்றுதான் இருக்கின்றோம். இத்தகைய போக்கினை நாம் நம்முடைய வாழ்விலிருந்து அகற்றிவிட்டு, கடவுளுக்கு முதன்மையான இடம் தரும் மக்களாக வாழ்வோம்.

Comments are closed.