ஏப்ரல் 25 : நற்செய்தி வாசகம்

படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்.

மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20

அக்காலத்தில்

இயேசு பதினொருவருக்கும் தோன்றி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர்.

நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு, ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.

அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————–

பறைசாற்றுங்கள்; விழிப்பாயிருங்கள்; எதிர்த்து நில்லுங்கள்

நற்செய்தியாளர் புனித மாற்கு (ஏப்ரல் 25)

I 1 பேதுரு 5: 5b-14

திருப்பாடல் 89: 2-3, 1-2, 5-6, 15-16

II மாற்கு 16: 15-20

பறைசாற்றுங்கள்; விழிப்பாயிருங்கள்; எதிர்த்து நில்லுங்கள்

அ) பறைசாற்றுங்கள்

‘இரண்டாம் நற்செய்தி’யை நமக்கு அருளிய நற்செய்தியாளர் மாற்குவின் விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். இவருக்கு யோவான் என இன்னொரு பெயரும் உண்டு. திருஅவையின் இருபெரும் தூண்கள் என்று அறியப்படும் பேதுரு, பவுல் ஆகிய இருவரோடும் உடன் புரிந்த சிறப்புக்குச் சொந்தக்காரர் இவர்.

பேதுரு சிறையிலிருந்து விடுக்கப்பட்ட பிறகு இவரது வீட்டிற்குத்தான் வருகின்றார் (திப 12: 12). பின்னர் பேதுருவோடு ஒன்றிணைந்து பணியாற்றிய இவர், அவர் வாயிலாக நற்செய்தி நூலை எழுதுகின்றார். இவர் பவுலோடு முதல் திருத்தூதுப் பயணத்தில் அவரோடு உடன் பயணித்தார். நடுவில் இருவருக்குமிடையே சரியான புரிதல் இன்றிப் பிரிந்து, இறுதியில் அவரோடு ஒன்றிணைந்து கொள்கின்றார்.

இப்படிப் பேதுருவிடமிருந்தும் பவுலிடமிருந்தும் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அக்குலேயா (Aquileia) அலக்சாந்திரியா ஆகிய பகுதியில், இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வது போன்று நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்காகத் தம் உயிரையும் தந்தார். மாற்கு இயேசுவின் நற்செய்தியைப் பறைசாற்றியது போல, நாமும் அவரது நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை.

ஆ) விழிப்பாயிருங்கள்

நற்செய்தியைப் பறைசாற்றுகையில் பலவிதங்களிலும் ஆபத்துகளும் எதிர்ப்புகளும் வரும். இன்றைய முதல் வாசகத்தில் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கின்றபோது, அவர் வழியில் நடக்கின்றபோது, சாத்தான் யாரை விழுங்கலாம் என்று கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகின்றது. அதனால் தெளிவோடு விழிப்பாயிருங்கள் என்கிறார் பேதுரு.

இயேசுவின் நற்செய்தியை அறிவித்தபோது, அன்றும் மாற்குவிற்கும், இன்று நமக்கும் சாத்தான் பலவகையில் இடையூறுகளைத் தந்திருக்கலாம், தரலாம். அவற்றைக் குறித்து நாம் விழிப்பாய் இருப்பது இன்றியமையாதது.

இ) எதிர்த்து நில்லுங்கள்

நற்செய்தியைப் பறைசாற்றுகையில் நாம் விழிப்பாய் இருப்பது மட்டும் போதாது. மாறாக, நாம் துணிவோடு எதிரியை எதிர்த்து நிற்கவேண்டும். இதற்கு நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வது அவசியமாக இருக்கின்றது.

புனித பவுல் திமொத்தேயுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்” (2 திமொ 1:7). கடவுள் நமக்கு வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தினைத் தந்திருக்கும்போது, நாம் சாத்தனை, இடர்களை எதிர்த்து நின்று, துணிவோடு நற்செய்தியைப் பறைசாற்றவேண்டும். நற்செய்தியாளர் மாற்கு அப்படித்தான் தனக்கு வந்த ஆபத்துகளை எதிர்கொண்டு நற்செய்தியைப் பறைசாற்றினார்.

நாமும் மாற்குவின் வழியில் துணிவோடு நற்செய்தியைப் பறைசாற்றி இயேசுவுக்குச் சான்று பகர்வோம்.

இயேசுவைக் கேலி செய்தவரைக் கண்டித்தவர்

ஜெர்மனியின் மன்னராக இருந்து அதனைப் பல காலம் ஆட்சி செய்தவர் பிரடெரிக் (Fredrick The Great) கடவுள்மீது நம்பிக்கை இல்லாத இவர், ஒரு கூட்டத்தில் இயேசுவைக் கேலி செய்து பேசிக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்டு கூட்டத்தில் இருந்த யாவரும் சிரித்தபோது, அதே கூட்டத்தில் இருந்த, இயேசுவின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த படைத்தளபதியான வான் சிலாந்து (Von Zealand) மன்னரைப் பார்த்து, “மன்னா! நீங்கள் செய்வது மிகப்பெரிய தவறு. உங்களிடம் நான் இப்படிப் பேசுவதால், என்னை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதற்காக நான் அஞ்சப் போவதில்லை. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நான் நாட்டிற்காக முப்பத்து எட்டு முறை போராடி வெற்றியைத் தேடித் தந்திருக்கின்றேன். என்னை நீங்கள் கொன்றாலும் பரவாயில்லை. ஏனெனில், நீங்கள் என்னைக் கொல்லும்போது, நான் இயேசுவோடு ஒன்றிணைவேன்” என்று துணிவோடு பேசினார்.

இவரது பேச்சைக் கேட்ட மன்னர் பிரடெரிக், “என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று மூன்று முறை சொல்லி, மன்னிப்புக் கேட்டார்

கிறிஸ்துவுக்கு எதிராக மன்னர் பேசியபோது, அதைத் தவறு என்று துணிவோடு எடுத்துரைத்து வான் சிலாந்து கிறிஸ்துவின்மீது தான் கொண்டிருந்த நம்பிக்கை வெளிப்படுத்தினார். நாமும் இயேசுவின்மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையைத் துணிவோடு எடுத்துரைத்து, அவருக்குச் சான்று பகர்வோம்.

Comments are closed.