ஏப்ரல் 15 : நற்செய்தி வாசகம்

அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

அழிந்து போகும் உணவுக்காக அல்ல; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்.

✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 22-29

இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த பின், சீடர்கள் புறப்பட்ட கரையிலேயே மறுநாளும் மக்கள் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தார்கள். முந்தின நாள் ஒரு படகைத் தவிர வேறு படகு எதுவும் அங்கு இல்லை என்பதையும் அதில் இயேசுவின் சீடர்கள் மட்டும் போனார்களே அன்றி இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதையும் அவர்கள் கண்கூடாகப் பார்த்திருந்தார்கள். அப்போது, ஆண்டவர் கடவுளுக்கு நன்றி செலுத்திக் கொடுத்த உணவை மக்கள் உண்ட இடத்திற்கு அருகில், திபேரியாவிலிருந்து படகுகள் வந்து சேர்ந்தன. இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில் ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக் கண்டு, “ரபி, எப்போது இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக, “நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்குக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தம் அதிகாரத்தை அளித்துள்ளார்” என்றார். அவர்கள் அவரை நோக்கி, “எங்கள் செயல்கள் கடவுளுக்கு ஏற்றவையாக இருப்பதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————-

“எது கடவுளுக்கு ஏற்ற செயல்?”

பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் திங்கட்கிழமை

I திருத்தூதர் பணிகள் 6: 8-15

திருப்பாடல் 119: 23-24, 26-27, 29-30 (1b)

II யோவான் 6: 22-29

“எது கடவுளுக்கு ஏற்ற செயல்?”

கடவுளை உண்மையாய்த் தேடுவோம்!

ஓய்வில்லாமல் கடவுளுடைய பணியைச் செய்து வந்த இயேசுவைப் பலரும் பின்தொடர்ந்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் தன்னை உண்மையாய்ப் பின்தொடரவில்லை என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. ஆகவே, அவர் தனக்கு வாய்ப்புக் கிடைக்கின்ற போதெல்லாம், தன்னை உண்மையாய்ப் பின்தொடர்வதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுகின்றார்.

இன்றைய நற்செய்தியில் மக்கள் இயேசுவைத் தேடி வந்தபோது அவர் அவர்களிடம், “நீங்கள் அருமடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக, அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடி வந்தீர்கள்” என்று சொல்லிவிட்டு, “கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல்” என்கிறார். இயேசுவின் இவ்வார்த்தைகள் அவரை நம்புவதே கடவுளுக்கு ஏற்ற செயல் என்பதைத் தெளிவாக எடுத்தியம்புகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தொண்டர்களில் ஒருவரான ஸ்தேவானோடு வாதாட முடியாதவர்கள் அவர் மோசேக்கு எதிராகப் பேசுகின்றார் என்று அவர்மீது பழி சுமத்துகின்றார்கள். ஸ்தேவான் திருத்தூதர்களால் திருப்பொழிவு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்பட்டவர், அப்படிப்பட்டவரை அவரோடு வாக்குவாதம் செய்தவர்கள் நம்பி ஏற்றுக்கொள்ளாமல், அவரோடு வாக்குவாதம் செய்ய முடியாமல், அவரைக் கொல்லத்த் துணிவது வேதனையிலும் வேதனையான ஒரு செயல்.

நூற்று ஐம்பது திருப்பாடல்களில் பெரிய திருப்பாடலான திருப்பாடல் 119தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல். இது கடவுளின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர் என்கிறது. கடவுளின் திருச்சட்டம் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளவும், அவரது வழியில் நடக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது. ஆகையால், நாம் கடவுள் அனுப்பிய இயேசுவையும் அவரது அடியார்களையும் நம்பி ஏற்றுக்கொண்டு, அவர்(கள்) வழியில் நடப்போம்.

கடவுள் நம்பிக்கையும் வாழ்வும்

இரயிலில் அருகருகே அமர்ந்தவாறு ஒரு நாத்திகரும் ஆத்திகரும் பயணம் செய்துகொண்டிருந்தனர். பயணத்தினூடே நாத்திகர் ஆத்திகரிடம், “முன்பின் அறியாத யாரையும்; ஏன், கடவுளையும் நான் நம்புவதில்லை” என்றார்.

அவர் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆத்திகர், ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு அவருக்கு இவ்வாறு பதிலளித்தார்: “இந்த இரயிலை ஓட்டுபவரை முன்பின் நீங்கள் அறியவில்லைதான்; ஆனால், இதில் பயணம் செய்கின்றீர்கள் அல்லவா! சிறிது நேரத்திற்கு முன்பாக இங்கே தேநீர் கொண்டு வந்தவரைக் கூட நீங்கள் முன்பின் அறியவில்லைதான்; ஆனாலும் நீங்கள் அவர் தந்த தேநீரை நம்பி வாங்கினீர்கள் அல்லவா! உலகில் உள்ள நல்ல தன்மைகளை நம்புவது கடவுளை நம்புவதற்குச் சமம். அந்த நம்பிக்கைதான் உங்களுக்கு வாழ்வளிக்கும்.”

உலகில் உள்ள அனைத்து நல்ல தனமைகளையும் அவற்றை உண்டாக்கிய கடவுளையும் அவர் அனுப்பியவர்களையும் நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், அதுவே ஒருவருக்கு வாழ்வளிக்கும்

Comments are closed.