நம் இதயங்களை வியப்பில் ஆழ்த்தும் இறைவன்

நமது வாழ்க்கையை முன்னேற்ற உதவிய நல்உணர்வுகள் மற்றும் அனுபவங்களை நாம் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், அவ்வாறு நாம் பகிரும்போது இயேசு நமது இதயங்களை வியப்பில் ஆழ்த்துகின்றார், நாம் வாழ்கின்ற சூழலை இன்னும் அழகாக மாற்றுகின்றார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 14 பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்தத் திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செபஉரையின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

எம்மாவூஸிலிருந்து திரும்பி வந்த சீடர்கள் இருவரும் இயேசுவை சந்தித்ததை பிற சீடர்களிடம் எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் தோன்றினார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், சீடர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதன் வழியாக நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டார்கள் என்றும் கூறினார்.

உயிர்த்த இயேசுவின் மீதான நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி இன்றைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது என்றும் இயேசு உயிர்த்த அந்த உயிர்ப்பின் மாலை வேளைக்கு நம்மை இந்த நற்செய்திப் பகுதி அழைத்துச்செல்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

பல வதந்திகள், பயனற்ற செய்திகள், மேலோட்டமானவைகள் என தீமையை விளைவிக்கக்கூடிய பல ஆயிரம் செய்திகள் ஒவ்வொரு நாளும் நம்மை வந்தடைகின்றன, அதே நேரத்தில் நல்ல செய்திகளும் நம்மை வந்தைடகின்றன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், நல்லதை, நம் வாழ்க்கையைத் தொட்ட உண்மைகளை மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கடவுளைச் சந்தித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள கடினப்படுகின்றோம் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், நம் இதயங்களைத் தொட்ட இயேசுவைப் பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வழியாக நாம் மகிழ்ச்சியை அடைய முடியும் என்றும் கூறினார்.

நம் இதயங்களில் மகிழ்ச்சி என்னும் ஒளியை ஏற்றிய, நம் கண்ணீரைத் துடைத்த, நம் அருகில் இருந்து நமக்கு நம்பிக்கை, மன்னிப்பு, ஆறுதல், ஆற்றல், உற்சாகம் மென்மை, போன்றவற்றை தரும் இறைவனைப் பற்றி நாம் பிறரிடம் பகிர வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

Comments are closed.