இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட எசேக்கியல் நூலில்,

“அவர்கள் பாவம் செய்த எல்லாக் குடியிருப்புகளிலிருந்தும் அவர்களை நான் மீட்டுத் தூய்மையாக்குவேன். அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்; நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்.” என ஆண்டவர் கூறுகிறார்.

நம்மை அவருடைய மக்களாக கருதி நம்மை அரவணைத்துக் காத்திடும் நமது ஆண்டவருக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் எடுக்கப்பட்ட எரேமியா நூலில், “அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்; அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்; அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன்.” என நமதாண்டவர் கூறுகிறார்.

நமது துன்பத்தை அகற்றி அழுகையை மகிழ்ச்சியாக மாற்றப் போகிற ஆண்டவருக்கு நன்றியாக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில், “எனக்கெதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும் புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.” என வாசிக்கின்றோம்.

ஆண்டவர் அளித்த புதிய மனதோடும், புதிய இதயத்தோடும் நாம் புதியதொரு வாழ்க்கையைத் துவங்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்தத் தவக்காலத்தில் பசியுற்றோரைக் கண்டுணர்ந்து அவர்களுக்கு உணவளித்தல், எளியோருக்கு ஆதரவு அளித்தல் போன்ற பிறரன்பு செயல்களில் நாம் ஆர்வமுடன் ஈடுபட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.