மார்ச் 24 : நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள்
மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1- 15: 47
பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம் என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும், ‘விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக் கூடும்’ என்று நினைத்தனர்.
இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார். அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச் சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த சிலர் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்? இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே,” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அப்பெண்மீதும் சீறி எழுந்தனர்.
இயேசு அவர்களிடம், “அவரை விடுங்கள். ஏன் அவருக்குத் தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள். நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை. இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம் சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப் பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக் காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்: “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், “ ‘நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’ என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.” சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள் பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு, “என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர் பின் ஒருவராக “நானோ? நானோ?” என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
அதற்கு அவர், “அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.
இயேசு அவர்களிடம், “நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.
பேதுரு அவரிடம், “எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான் அவ்வாறு செய்யமாட்டேன்” என்றார். இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்” என்றார். அவரோ, “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று மிக அழுத்தமாகச் சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.
பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், “நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்” என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால் அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம் வேண்டினார். “அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “சீமோனே, உறங்கிக்கொண்டா இருக்கிறாய்? ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள் மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார்.
அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, “இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்” என்று கூறினார்.
Comments are closed.