இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“உம் மக்களுக்கு நீதி வழங்க ஞானத்தை எனக்குத் தந்தருளும்” என ஆண்டவரிடம் சாலமோன் செபித்தார் என வாசித்தோம்.

நமது பிள்ளைகளுக்கு சிறந்த ஞானத்தை இறைவன் தந்தருள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில், இயேசு

“பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.” எனக் கண்டோம்.

பெற்றோரை இழந்த எண்ணற்றக் குழந்தைகளுக்கு ஆண்டவர் ஆதரவாக இருந்து அவர்களை அரவணைத்து வழிநடத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

உடல் மற்றும் ஆவிக்குரிய நோய்களை குணப்படுத்தியவரும், ஆன்மாக்களின் மருத்துவரும், தொண்டையில் சிக்கும் பொருள்களை நீக்கி சுகமளிப்பதில் வல்லவரும், மறைசாட்சியாக மரித்தவருமான இன்றைய புனிதர் பிளெய்ஸை திருச்சபைக்குத் தந்த நம் இறைவனுக்கு நன்றியாக

இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

நாளை ஞாயிறு திருப்பலியில் முழுமையாகப் பங்கேற்று ஆண்டவரின் திருவுடலை வாங்கத் தகுதிபெற நம்மையே நாம், முன் தயாரித்துக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மைக் காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.