இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்09.12.2023

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.

1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், “அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார்.” என இறைவாக்கினர் எசாயா கூறுகிறார்.

நமது வேண்டுதல்களுக்கு நம் ஆண்டவர் செவிமடுத்து மறுமொழி கூறுவார் என்பதை நாம் விசுவசிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தியில், ““அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்”. என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

திருச்சபைக்கு தமது பிள்ளைகளை அளிக்க பெற்றோர்கள் மனமுவந்து முன்வர வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,

மரியாளின் திருக்காட்சியாளரும், இன்றைய புனிதருமான புனித ஜூவான் டியெகோ பழங்குடி மக்களின் பாதுகாவலராவார்.

பழங்குடி மக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்காக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,

சென்னையில் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதற்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,

இந்த வாரம் முழுவதும் நம்மை காத்து வழி நடத்திய நம் தேவனுக்கு நன்றியாக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.