டிசம்பர் 10 : நற்செய்தி வாசகம்

stdas0374

ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.

ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.

✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:

“இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலைநிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

—————————————————————————–

மாபரன் இயேசுவும் வருகையும், மனம் மாற்றமும்

திருவருகைக்காலம் இரண்டாம் வாரம்

I எசாயா 40: 1-5, 9-11

II 2 பேதுரு 3: 8-14

III மாற்கு 1: 1-8

மாபரன் இயேசுவும் வருகையும், மனம் மாற்றமும்

நிகழ்வு

கொலைகாரன் ஒருவன் இருந்தான். அவன் தன் கண்ணில் பட்ட ஆண், பெண், சிறியவர், பெரியவர் என யாவரையும் வெட்டிச் சாய்த்தான். இதனால் அவன் வருவது தெரிந்தால், மக்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.

ஒருநாள் அவன் தன்னுடைய குதிரையில் வேகமாக வருவதைக் கண்டு மக்கள் அனைவரும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். ஒரு துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்தார். எல்லாரும் ஓடி ஒளிந்தபொழுது, துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்ததைக் கண்டு, கடுஞ்சீற்றம் அடைந்த அந்தக் கொலைகாரன் துறவியிடம், “என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நான் என் வாளை வீசினால், எனக்கு முன்பாக நிற்பவர் யாராக இருந்தாலும், இரண்டு துண்டுகளாகச் சரிந்து கீழே விழுவார்” என்றான். அதற்கு அந்தத் துறவி, “என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? நான் என் பார்வையாலேயே எனக்கு முன்பாக இருக்கக்கூடியவரைச் சாய்க்கக் கூடியவன்” என்றார்.

துறவி இப்படிச் சொன்னதும், அந்தக் கொலைகாரன் தன்னுடைய உள்ளத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான். பின்னர் அவன், துறவியின் காலில் போய் விழுந்து, “இத்தனை நாள்களும் நான் ஒரு மிகப்பெரிய கொலைகாரனாய் வாழ்ந்துவிட்டேன். இனிமேல் நான் மனம்திருந்தி நடக்க விரும்புகின்றேன். அதனால் என்னை உங்களுடைய சீடராக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான். துறவியும் அவனைத் தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொள்ள, அவன் புதிய மனிதனாக வாழத் தொடங்கினான்.

இந்த நிகழ்வில் வருகின்ற மிகப்பெரிய கொலைகாரன் துறவியின் அமைதியான தோற்றத்தையும், அவருடைய வார்த்தைகளையும் கேட்டு மனம்மாறினான். திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக, மனம்மாறி அவருக்கு உகந்தவர்களாக வாழவேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனம் மாற்றம் காலத்தின் கட்டாயம்

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு என்றாலே, ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மையே நாம் தயார் செய்யும் வகையில், மனம் மாற்றம் அடையவேண்டும் என்ற செய்தியைத்தான் தாங்கி வரும். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் அத்தகைய செய்தியைத்தான் தாங்கி வருகின்றது.

நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் வருகைக்காகத் திருமுழுக்கு யோவான் மக்களைத் தயார் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். மெசியாவின் வருகைக்கு முன்பாக, தூதர் ஒருவர் தோன்றி மக்களைத் தயார் செய்வார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது (விப 23: 20; எசா 40: 3; மலா 3:1). அதுவே திருமுழுக்கு யோவானின் வழியாக நடந்தது. இந்தத் திருமுழுக்கு யோவான் மக்களிடம் மனம் மாறவேண்டும் என்றோர் அழைப்பு விடுத்தார். அந்த மனம்மாற்றம் என்பது பெயரளவில் மட்டும் இருக்காமல், செயல்வடிவிலும் இருக்கவேண்டும் என்பதற்காக, “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3: 😎 என்றார். ஆதலால், நாம் மெசியாவாம் இயேசு கிறிஸ்துவின் வருக்கைக்கு நம்மையே நாம் தயார்செய்வதற்கு மனம் மாற்றம் அடைவது காலத்தின் கட்டாயமாக, இன்றியமையாததாக இருக்கின்றது.

Comments are closed.