வரும் ஆண்டு மே மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் உரோம் நகரில் முதல் உலக குழந்தைகள் தினம் சிறப்பிக்கப்படும் என அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

அமல உற்பவ அன்னையின் பெருவிழாவன்று, கடந்த வாரத்தைப்போல் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து அல்லாமல், புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு தன் நூலக சன்னல் வழியாக நேரில் தோன்றி மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் குழந்தைகளுக்கான முதல் உலக நாளை உரோமில் சிறப்பிக்க உள்ளதாக, மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார்.

கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையால் நடத்தப்பட உள்ள இந்த கொண்டாட்ட நிகழ்வுகள், நம் குழந்தைகளுக்கு நாம் எத்தகைய உலகை விட்டுச் செல்லப் போகிறோம் என்ற கேள்விக்கு பதிலளிப்பதாக இருக்கும் எனவும் தெரிவித்தார் திருத்தந்தை.

இயேசுவைப்போல் நாமும் குழந்தைகளை மைய இடத்தில் நிறுத்தி அவர்கள் மீது அக்கறை காட்டவேண்டும் என்ற அழைப்பையும் திருத்தந்தை முன்வைத்தார்.

மேலும், இவ்வெள்ளியன்று மாலை, தான் முதலில் உரோம் நகரின் மேரி மேஜர் பெருங்கோவிலுக்கும், இஸ்பாஞ்ஞா வளாகத்திற்கும் சென்று அன்னை மரியாவிடம் செபிக்க உள்ளதாகவும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் உக்ரைனின் அமைதிக்காகவும், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ராயேலின் அமைதிக்காகவும், போர்களால் காயப்பட்டுள்ள உலகின் அனைத்துப் பகுதிகளுக்காகவும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்

Comments are closed.