இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள் 08.12.2023

ஒளி நிறை மறையுண்மைகள்.

1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,

“உயரத்தில் வாழ்வோரை அவர் தாழ்த்துகின்றார்; வானுற உயர்ந்த நகரைத் தகர்க்கின்றார்; அதைத் தரைமட்டமாக்கி, புழுதியோடு புழுதியாக, மண்ணோடு மண்ணாகச் செய்கின்றார். எளியோரின் காலடிகளும் ஏழைகளின் பாதங்களும் அதை மிதிக்கும்.” என இறைவாக்கினர் எசாயா கூறுகிறார்.

அகந்தை, ஆணவம், வன்மம் ஆகியவற்றை விட்டுவிட்டு ஆண்டவருக்கு உகந்த எளிய மனிதர்களாக நாம் இருக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்

“ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள்.”

என கூறப்பட்டுள்ளது.

ஆண்டவரை நாம் நாட, தேட அவர் அனுதினமும் வாய்ப்புகளை வழங்கிக் கொண்டே இருக்கிறார். மேலும் நிறைந்த பொறுமையோடு காத்திருக்கிறார். உலகில் வாழும் காலத்திலேயே நாம் விரைவாக அவரை நாட, தேட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.

வெறும் வார்த்தைகளை விட நமது செயல்கள் மிக முக்கியமானவை என்பதை உணர்ந்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,

சென்னையில் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதி மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,

குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

ஆமென்.

Comments are closed.