டிசம்பர் 8 : நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, “அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, “மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது” என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்றார். வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்றார்.

பின்னர் மரியா, “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————–

மறையுரைச் சிந்தனை

1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார்.

ஆம், இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

முதலில் இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட பின்பு, அது உணர்த்தும் செய்தியை நாம் தெரிந்துகொள்வோம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கீழைத் திருச்சபையில் ‘மரியாளின் உற்பவம்‘ (The Conception of Mary) என்றதொரு விழா கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழா மரியாளின் பிறப்பையும், அவரிடம் விளங்கிய நல்ல பண்புகளையும் பறைசாற்றுதாய் இருந்தது. படிப்படியாக இவ்விழா மேலைநாட்டு திருச்சபைக்கும் பரவியது.

கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டில் இவ்விழா மரியாளின் மாசற்ற தன்மையும், தூய்மையையும் பறைசாற்றுவதாய் இருந்தது. அப்போதுதான் திருச்சபைத் தந்தையர்களிடையே மரியாளின் மாசற்ற தன்மையைப் பற்றிய விவாதம் எழுந்தது. மரியாள் கருவிலே பாவக்கறையின்றி பிறந்தால், அவர் கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு அப்பாற்பட்டவரா? என்பதுபற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்தன. இவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தாற்போல் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித டன்ஸ் ஸ்கோடஸ் என்பரின் வார்த்தைகள் அமைந்தன.

“மரியாள் கருவிலே ஜென்மப் பாவமின்றி பிறக்கக் காரணம் அவர் மாசு மருவற்ற இயேசுவைப் பெற்றெடுப்பதற்காக. அதலால், மரியாளின் அமலோற்பவம் இயேசுவின் பிறப்பை முன்னிட்டு, கடவுள் மரியாளுக்குக் கொடுத்த மிகப்பெரிய கொடை எனச் சொல்லலாம்” என்றார் அவர். அதன்பிறகு மரியாளைப் பற்றிய இத்தகைய சிந்தனை திருச்சபை எங்கும் பரவியது. மரியாள் லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்துவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 1854 ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் “மரியாள் கருவிலே பாவக்கறை இன்றி தோன்றியவள்’ என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிக்கையிட்டார். அன்றிலிருந்து இன்றுவரை அவ்வாறே வழங்கப்பட்டு வருகின்றது.

இதுவரை மரியாளின் அமல உற்பவ பெருவிழாவின் வராலாற்றுப் பின்னணியை அறிந்த நாம், இப்போது இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தியை அறிந்துகொள்வோம்.

தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “நாம் தூயோராகவும், மாசற்றவராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்” என்று வாசிக்கின்றோம். ஆம், நாம் ஒவ்வொருவரும் தூயவராக வாழவேண்டும். ஏனென்றால் நம் இறைவன் தூயவர் (மத் 5:348, லேவி 19:2).

ஆனால் பல நேரங்களில் திருமுழுக்கின் வழியாக தூயவர்கள் ஆனோம் என்ற உண்மையை உணர்ந்துகொள்ளாமல் கடவுளுக்கு கீழ்படியாமல் பாவக்கறை படிந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும். தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆதிப்பெற்றோர்களான ஆதாமும், ஏவாளும் விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டால் பாவம் என்று தெரிந்தும்கூட அந்தக் கனியை உண்டு, பாவம்செய்தார்கள். அதேபோன்றுதான் நாமும் பாவம் என்று தெரிந்தும்கூட ஒவ்வொருநாளும் பாவசேற்றில் விழுந்துகொண்டிருக்கிறோம். இந்நிலை மாறவேண்டும். கடவுளுக்கு முன்னால் நாம் தூயவர்களாக வாழவேண்டும்.

கடவுளுக்கு முன்பாக தூயவர்களாக எப்படி விளங்குவது?. அதற்கு அன்னை மரியால்தான் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். அன்னை மரியாள் இறைவார்த்தைக்கு ஆம் என்று சொல்லி கீழ்படிந்து நடந்தார். அதன்வழியாக தூய வாழ்க்கை வாழ்ந்தாள். நாம் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து, இறைவனோடு இணைந்த வாழ்க்கை வாழ்கிறோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

வயதான துறவி ஒருவர் மரணப்படுக்கையில் கிடந்தார். அப்போது அவரைப் பார்ப்பதற்காக பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் வந்து போனார்கள். ஒருசிலர் அவரை ‘பெரிய அறிவாளி’ என்று பாராட்டிச் சென்றார். இன்னும் சிலர் அவரை ‘சிறந்த கொடை வள்ளல்’ என்றும், மற்றும் சிலர் அவரை ‘அமைதியே உருவானவர்’ என்றும் பாராட்டிவிட்டுச் சென்றார்.

எல்லாவற்றைக் கேட்டும் அந்தத் துறவி மிகவும் வருத்தத்தோடே இருந்தார். இதைப் பார்த்த துறவியின் உதவியாளர், அவரிடம், “எல்லாரும் உங்களை அறிவாளி, கொடைவள்ளல், அமைதியே உருவானவர் என்றெல்லாம் பாராட்டிச் செல்கிறார்களே, அப்புறம் எதற்கு இப்படிக் கவலையோடு இருக்கிறீர்கள்” என்று கேட்டார். அதற்கு அவர், “ எல்லாருமே என்னை எப்படியெல்லாமோ பாராட்டினார்கள். அது இருக்கட்டும். ஆனால் யாருமே என்னை தூயவர் என்று பாராட்டவில்லையே என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு வருத்தமாக இருக்கின்றது” என்றார். உடனே அவருடைய உதவியாளர் அவரிடம், “நீங்கள் தூயவர் என்று மற்றவர் சொல்லவேண்டும். உங்களைப் பற்றி நீங்களே சொல்லக்கூடாது” என்றார். இதைக் கேட்ட அந்த துறவி அமைதியானார்.

Comments are closed.