சவாலான நேரத்தில் உங்களின் பணிகளை ஏற்கிறீர்கள்!

நீங்கள் அர்ப்பணித்துள்ள உன்னதமான மற்றும் பொறுமையான தூதரகப் பணி மோதல்களைத் தடுக்கவும் தீர்க்கவும் முயல்வது மட்டுமல்லாமல், மனித மாண்பை வளர்ப்பதன் வழியாகவும், ஒவ்வொரு மனிதனின் பிரிக்க முடியாத உரிமைகளைப் பாதுகாப்பதன் வழியாகவும், உலக மக்களின் அமைதியான சகவாழ்வையும் மனித வளத்தையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 7, இவ்வியாழனன்று, திருப்பீடத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள குவைத், நியூசிலாந்து, மலாவி, கினியா, ஸ்வீடன் மற்றும் ச்சாட் நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள், தங்களின் நியமன பத்திரங்களைத்  திருத்தந்தையிடம் சமர்ப்பிக்க வந்த வேளை, அவர்களிடம் இவ்வாறு விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண் மற்றும் குழந்தை, மற்றும் ஒருங்கிணைந்த பொருளாதார மற்றும் மனித வளர்ச்சியின் எடுத்துக்காட்டுகளை ஊக்குவித்தல் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மூன்றாம் உலகப் போர் துண்டு துண்டாக நடந்து வருவதாக நான் நீண்டகாலமாக அழைக்கும் ஆயுத மோதல்களின் திடீர்ப்பெருக்கத்தால் குறிக்கப்பட்ட, சவாலான நேரத்தில் உங்கள் பணியை நீங்கள் மேற்கொண்டு வருகிறீர்கள் என்று உரைத்த திருத்தந்தை, மோதல்களின் உலகளாவிய பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு, அனைத்துலகச் சமூகம், அமைதியான தூதரக உறவுகள் வழியாக, அநீதிகள் நிறைந்த அந்த மோதல்களுக்கு உலகளாவிய தீர்வுகளைத் தேடுவதற்கு சவால் விடப்பட்டுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

இது சம்பந்தமாக, திருப்பீடம், குறிப்பாக, நமது பொதுவான இல்லமாகிய இந்தப் பூமியின் எதிர்காலம் மற்றும் சிறப்பாக, காலநிலை மாற்றம் மற்றும் நமது மனித குடும்பத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய உறுப்பினர்களின் இயற்கை சூழலின் பேரழிவின் விளைவுகள் குறித்து அக்கறை கொண்டுள்ளது என்றும் விவரித்தார் திருத்தந்தை.

இந்த நாட்களில் துபாயில் நடைபெற்று வரும் COP-28, எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாடு, உலகளாவிய பொது நன்மைக்கான தெளிவான மற்றும் தற்போதைய அச்சுறுத்தல்களுக்கு ஞானத்துடனும் தொலைநோக்குடனும் பதிலளிப்பதில் ஒரு வரலாற்று முன்னேற்றத்தை பிரதிபலிக்கட்டும் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

பொறுப்புடன் பாதுகாக்குமாறு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள கடவுளின் உயரிய படைப்பான இப்புவியை வருங்கால சந்ததியினருக்குக் கையளிக்க உதவும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அனைத்து நாடுகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட இறைவேண்டல் செய்வோம் என்றும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

Comments are closed.