அன்னை மரியாவின் திருவுருவத்திற்கு தங்க ரோஜா காணிக்கை
உரோம் நகரின் புனித மேரி மேஜர் பசிலிக்கா பெருங்கோவிலில் வணங்கப்பட்டுவரும் Salus Populi Romani என்ற அன்னை மரியா திருவுருவத்திற்கு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி, அமல உற்பவ அன்னை திருவிழாவின்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்க ரோஜா ஒன்றை அர்ப்பணிக்க உள்ளார்.
ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னர் திருத்தந்தை ஒருவர் இத்திருவுருவத்திற்கு தங்க ரோஜா ஒன்றை பரிசளிப்பது தற்போதுதான் இடம்பெற உள்ளது.
1551ஆம் ஆண்டு திருத்தந்தை மூன்றாம் ஜூலியஸ் அவர்களாலும், 1613ல் திருத்தந்தை 5ஆம் பவுல் அவர்களாலும் தங்க ரோஜாக்கள் Salus Populi Romani திருவுருவத்திற்கு காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன.
நெப்போலியனின் படைகள் திருத்தந்தையின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இடங்களை முற்றுகையிட்டபோது இந்த ரோஜாக்கள் காணாமல் போயுள்ள நிலையில், தற்போது இவ்வாரம் வெள்ளிக்கிழமையன்று தங்க ரோஜாவை அன்னை மரியின் திருவுருவத்திற்கு காணிக்கையாக வழங்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொர் ஆண்டும் டிசம்பர் 8ஆம் தேதி அமல உற்பவ அன்னை திருவிழாவின்போது, மாலையில் உரோம் நகரின் மையத்தில் உள்ள Spagna வளாகம் சென்று, அன்னைமரியா திருவுருவச் சிலைக்கு மாலையிடும் திருத்தந்தை, அதற்கு முன்னர் இவ்வாண்டு புனித மேரி மேஜர் பெருங்கோவில் சென்று Salus Populi Romani என்ற அன்னை மரியா திருவுருவம் முன் செபித்து தங்க ரோஜாவை காணிக்கையாக வழங்க உள்ளார்.
Comments are closed.