இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்08.11.2023 (புதன்)
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நீங்கள் யாருக்கும் எதிலும் கடன்படாதீர்கள். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதே நீங்கள் செலுத்த வேண்டிய ஒரே கடனாய் இருக்கட்டும்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.
பிறரன்பு என்னும் உயர்ந்த பண்பை நாம் என்றும் கைக்கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலியில்,
“கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும்.! என கூறப்பட்டுள்ளது.
பிறர் நம்மை சொல்லினாலோ, செயலினாலோ ஏதோ ஒருவகையில் துன்புறுத்தும் போது நாம் பொறுமையுடன் இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நமது வாழ்வின் துன்பங்களை பொறுமையுடனும், விசுவாசத்துடனும் சகித்துக் கொள்ள வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
ஆன்மாக்களின் மாதமான இந்த நவம்பர் மாதம் முழுவதும் நமது இறந்த உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்களின் ஆன்மாக்களுக்காக நாம் விஷேசமாக திருப்பலி ஒப்புக்கொடுத்தல், செபமாலை செபித்தல், ஏழைகளுக்கு உணவு அளித்தல் ஆகியவற்றை அடிக்கடி செய்வதன் மூலம் உத்தரிய நிலையிலிருக்கும் ஆன்மாக்களை ஆண்டவரின் விண்ணக வீட்டிற்கு அனுப்பும் அற்புத பணியினை ஆவலுடன் செய்ய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.