இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக்கொள்கிறார்கள்.” என புனித பவுல் திமொத்தேயுவிற்கு கூறுகிறார்.
எல்லாத் தீமைகளுக்கும் காரணமான பொருள் ஆசையை நம் மனதில் இருந்து அகற்ற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“நீதி, இறைப் பற்று, நம்பிக்கை, மன உறுதி, பணிவு ஆகியவற்றை நாடித் தேடு. விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தில் ஈடுபடு. நிலைவாழ்வைப் பற்றிக்கொள். அதற்காகவே அழைக்கப்பட்டிருக்கிறாய்.” என திருத்தூதர் பவுலடியார் கூறுகிறார்.
நாம் அனைவரும் அழைக்கப்பட்டது நிலை வாழ்விற்கே என்ற உண்மையை உணர்ந்து அதன்படி வாழ்ந்திட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
எகிப்து நாட்டில் படையை உருவாக்கி படை வீரர்களுக்கு கிறிஸ்தவ நெறியையும், ஒழுங்கு முறைகளைக் கற்பித்தவர் இன்றைய புனிதர் மௌரிஸ்.
நாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்துவரும் ராணுவ படை வீரர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காகவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.