செப்டம்பர் 23 : நற்செய்தி வாசகம்

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

அக்காலத்தில்

பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: “விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன. வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இவ்வாறு சொன்னபின், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே ‘அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.’

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது. பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள். முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

————————————————————————-

“இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா”

பொதுக்காலம் இருபத்து நான்காம் வாரம் சனிக்கிழமை

I திமொத்தேயு 6: 13-16

II லூக்கா 8: 4-15

“இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா”

அலெக்சாண்டர் ஓவிட் என்னும் ஆகச்சிறந்த மறையுரையாளர்:

நான்கு வயதிலேயே தன் தாயிடம், “நான் ஒரு மறைப்பணியாளராகப் போகிறேன்” என்று சொல்லி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவரும், கல்லூரிக் காலங்களில் திருவிவிலியத்தை பசித்த ஓநாய் (Famished Wolf) போன்று வெறிகொண்டு படித்தவருமான அலெக்சாண்டர் ஒயிட் (Alexander Whyte) என்பவரை உலகில் தோன்றிய மிகப்பெரிய மறையுரையாளர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து அன்றன்றைக்கு உரிய மறையுரைகளைத் தயாரித்து, அதை மக்களுக்கு வழங்குபோது, கேட்கும் யாவரும் அப்படியே சொக்கிப் போயிருப்பர். இதில் வியப்புக்குரிய செய்தி என்னவென்றால் அலெக்சாண்டர் ஒயிட் முதுமை அடைந்து, கோயிலுக்குப் போக முடியாத நிலை ஏற்பட்டபோதும், வழக்கம் போல் அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்து மறையுரை தயாரித்தார் என்பதுதான்.

ஒருமுறை இவருக்கு அறிமுக ஒருவர் இவரிடம், “அது எப்படி உங்களால் மட்டும் இவ்வளவு சிறப்பான மறையுரைகளை வழங்க முடிகின்றது?” என்று கேட்டபொழுது இவர், 1 திமொ 4: 16 இல் வரும், ‘உன்னைப் பற்றியும் உன் போதையைப் பற்றியும் கருத்தாயிரு; அவைகளில் நிலைத்திரு. இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவிசாய்ப்போரும் மீட்படைவர்’ என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசிவிட்டு, “நான் என் போதனையைப் குறித்துக் கருத்தாயிருக்கும்போது நான் மட்டுமல்லாமல், என் போதனையைக் கேட்பவரும் மீட்படைவர் என்பதால், என்னால் சிறப்பான வழங்க முடிகின்றது” என்றார்.

ஆம், இறைவார்த்தையைப் போதிப்பவர் யாவரும் தங்கள் போதனையைப் பற்றிக் கருத்தாய் இருக்கவேண்டும். இன்றைய முதல்வாசகத்தில் பவுல், “இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா” என்கிறார். பவுல் சொல்லக்கூடிய கட்டளை எது, அந்தக் கட்டளையைக் கடைப்பிடிப்பதால் என்ன ஆசி கிடைக்கும் என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

திருவிவிலியப் பின்னணி:

நம்பிக்கை அடிப்படையில் பவுலுக்கு உண்மையான பிள்ளையாக இருந்தவர் திமொத்தேயு (1 திமொ 1: 1). அதனால் பவுல் திமொத்தெயுக்கு ஒரு தந்தைக்குரிய பாசத்துடன் பல்வேறு அறிவுரைகளை வழங்குகின்றார். அதில் சிறப்பான ஓர் அறிவுரைதான், “இறைவார்த்தையை அறிவு. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு” (2 திமொ 4: 2) என்பதாகும். இன்றைய முதல் வாசகத்தில் அதை நினைவுபடுத்துகின்ற பவுல், “இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா” என்கின்றார்.

நற்செய்தியில் இயேசு விதைப்பவர் உவமையைக் குறித்துப் பேசுகின்றார். ஒருவர் இறைவார்த்தைக்குச் செவிமடுப்பதைப் பொறுத்தே அவரது உயர்வும் தாழ்வும் உள்ளன என்ற உண்மையைப் பறைசாற்றும் இவ்வுவமை, ஆண்டவரே நம் உள்ளத்தில் இறைவார்த்தை என்னும் விதையை விதைக்கின்றார் என்ற உண்மையையும் உணர்த்துகின்றது. ஆண்டவர் நம் உள்ளத்தில் இறைவார்த்தை என்னும் விதையை விதைக்கின்றார் எனில், அவர் அதை இன்றைய காலக்கட்டத்தில் தன் அடியார்களான அருள்பணியாளர்கள் வழியாக விதைக்கின்றார். ஆகவே, இறைவார்த்தையை அறிவிக்கும் ஒவ்வொருவரும் கருத்தாய் அறிவிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர் மட்டுமல்லாது, அதைக் கேட்போரும் மீட்படைய முடியும்.

ஆதலால், கடவுள் தன் அடியார்கள் வழியாய் இறைவார்த்தையை மக்களின் உள்ளங்களில் விதைக்கின்றார் என்ற உணர்வோடு இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடப்போம்.

Comments are closed.