நீதி மற்றும் மனிதாபிமானமுள்ள சமூகத்தை உருவாக்குங்கள்
காவல்பணியாளர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கும், கட்டுப்பாடுகள், ஒழுங்குகள் மற்றும் நடைமுறைச்செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காகவும் அழைக்கப்படவில்லை மாறாக, தாங்கள் வாழ்கின்ற சமூகத்தை நீதி, மற்றும் மனிதாபிமானமுடையதாக மாற்றுவதற்காக அழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 16 சனிக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இத்தாலிய இராணுவப்படை அதிகாரிகள், வீரர்கள், காவல் துறையினர் என ஏறக்குறைய 6000 பேருக்கு உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1943 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி, நாஜி துருப்புக்களால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை காப்பாற்றுவதற்கான பணியில், அர்ப்பணிப்புடன் செயலாற்றி உயிர் தியாகம் செய்த சால்வோ தி அக்குயிஸ்தோ போல செயல்படுங்கள் என்று கேடுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், கடந்த காலத்தில் இருக்காமல், வளமான எதிர்காலத்தை உருவாக்க உறுதியான உந்துதல்களைக் கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சால்வோ தி அக்குயிஸ்தோ போன்று உணர்ச்சிமிக்க மனிதர்களாகவும், அநீதியை எதிர்த்துப் போராடுகின்ற, பலவீனமானவர்களைக் பாதுகாத்து வழிநடத்துகின்ற, நகரங்களுக்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கின்ற பொதுநலப் பணியாளர்களாகவும் இருக்க அவர்களை கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
காவல்பணியாளர்களின் பணியானது தியாகம், அர்ப்பணிப்பு, ஒழுக்கம், பொறுப்பு, கடின உழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மோதல்கள் நடக்கும் இடங்களில் பன்னாட்டுச் சூழல்களில், பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்களை எப்படிச் சென்றடைவது என்பதற்கு காவல்பணியாளர்கள் பெருமளவு உதவுகின்றார்கள் என்றும் கூறினார்.
நல்லிணக்கம், மனித மேம்பாடு, நல்லதை அமைதியாகக் கட்டியெழுப்புதல் போன்றவற்றின் வழியாக அமைதியின் கைவினைஞர்களாக மாற வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தீமை வலிமையானது, மோசமானது ஒருபோதும் முடிவடையாது என்னும் சோதனைக்கு அடிபணிய வேண்டாம் என்றும் அவ்வாறு எண்ணி சோர்வடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
Comments are closed.