இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி
பதிலுரைப்பாடல் திருப்பாடல் 111: 1-ல்,
“நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.” என திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார்.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நாம் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும்வரை நடக்கும் ஒவ்வொரு நிகழ்விற்கும் இறைவனுக்கு நன்றி கூற வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
கொரிய நாட்டின் பாதுகாவலரும், கொரிய நாட்டின் முதல் கத்தோலிக்க குருவும், இன்றைய புனிதருமான ஆண்ட்ரூ கிம் அந்நாட்டில் மறைபோதகம் செய்து பலரை கிறித்துவ மதத்திற்கு மாற்றியதால் தலை துண்டிக்கப்பட்டு மறைசாட்சியாக மரித்தார்.
தாங்கள் மேற்க்கொண்ட இறைப்பணியின் நிமித்தம் துன்புற்றுக் கொண்டிருக்கும் எண்ணற்ற குருக்கள் மற்றும் கன்னியர்களுக்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய நாள் முழுவதும் தூய ஆவியானவர் நமது பேச்சிலும், செயலிலும் நம்மை ஞானத்தோடு வழிநடத்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
கர்நாடகாவில் குறிப்பாக காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இன்னும் அதிகமான தென் மேற்கு பருவ மழை பெய்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
புனித சூசையப்பருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட புதன் கிழமையான இன்று திருக்குடும்பத்தில் அன்று இருந்தது போல் அன்பு, அமைதி, சமாதானம், விட்டுக் கொடுத்தல், தாழ்ச்சி ஆகியவை இன்று நம் குடும்பங்களிலும் இருக்க வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.