இறை மக்கள் குடும்பமாக தங்கள் இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
“என் ஆண்டவரே, நீர் மட்டுமே எங்கள் மன்னர். ஆதரவற்றவளும் உம்மைத் தவிர வேறு துணையற்றவளுமாகிய எனக்கு உதவி செய்யும்; ஏனெனில், நான் என் உயிரைப் பணயம் வைத்துள்ளேன்.” என எஸ்தர் அரசி கூறியதை இன்றைய முதல் வாசகத்தில் வாசித்தோம்.
நமது இக்கட்டான கால கட்டங்களில், நமது இறைவன் நமக்கு துணை நின்று நம்மைக் காத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
கேட்பதும், தேடுவதும், தட்டுவதும் தளரா விசுவாசத்தின் அடிப்படையில் இருந்தால், நமது வேண்டுதல்கள் அனைத்தும் நிச்சயம் கேட்கப்படும் என்பது திண்ணம். இதை நாம் முழுவதுமாக உணர்ந்து கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
ஆண்டவர் கூறிய இந்த பொன் விதியை நாம் அனைவரும் வாழ்வில் பின்பற்றினால், இந்த உலகில் பாவங்கள் அனைத்தும் மறைந்து விடும். இதை நாம் முழுவதுமாக உணர்ந்து, பிறரிடம் தூய அன்பைப் பொழிய வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இன்றையப் புனிதர் புனித சிலுவையின் ஏஞ்செலா தனது வாழ்நாளில் ஏழைகளுக்கும், நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் இரவு பகலாக சேவை செய்தார்.
பிறரன்பு சேவையை நாம் புனித சிலுவையின் ஏஞ்செலாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைகள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டுக் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.!

Comments are closed.